02 April 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்-இதுவரை இந்தியா!


Indian Cricket Team

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் 1975ம் ஆண்டு அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை இந்தியா அதில் பங்கேற்று வருகிறது.

முதல் போட்டி

1975ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டன. இதில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. மொத்தம் 3 போட்டிகளில் ஆடிய இந்தியா அதில் ஒன்றில் மட்டுமே வென்றது. 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி முதல் சுற்றோடு வீட்டுக்குக் கிளம்பியது.

2வது போட்டி

1979ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதிலும் 8 அணிகளே கலந்து கொண்டன. முதல் தொடரை விட மோசமான தொடராக இது இந்தியாவுக்கு அமைந்தது. போட்டியின் முடிவில் 7வது இடத்தைப் பெற்றது. மொத்தம் 3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறையும் முதல் சுற்றோடு மூட்டை கட்டப்பட்டது இந்தியா.

3வது போட்டி

இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்த போட்டி இது. 1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் அபாரமாக வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது இந்தியா.

மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்தியா 8 போட்டிகளில் ஆடி அதில் 6 போட்டிகளை வென்றது. அதில் மறக்கமுடியாத போட்டி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி. இதில்தான் கபில்தேவ் புயலென ஆடி 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து சாதனையும் படைத்தார். 2 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. கபில் தேவ் தலைமையிலான இந்தியப் படையினர் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்தபோது உலகமே ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தது.

4வது போட்டி

முதல் முறையாக வீட்டை (இங்கிலாந்தை) விட்டு வெளியேறிய உலகக் கோப்பை கிரிக்கெட், நேராக இந்தியா-பாகிஸ்தானுக்கு வந்தது. 1987ம் ஆண்டு இந்தியாவு்ம், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்தப் போட்டித் தொடரில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது.

மொத்தம் 7 போட்டிகளில் ஆடி 5ல் வென்று, 2ல் தோற்றது.

5வது போட்டி

1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து இத்தொடரை நடத்தின. அதுவரை 8 அணிகள் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலை மாறி முதல் முறையாக 9 அணிகள் இதில் பங்கேற்றன. இந்தத் தொடர் இந்தியாவுக்கு கசப்பான தொடராக அமைந்தது.

முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்ட இந்தியா, 8 போட்டிகளில் ஆடி ஐந்தில் தோல்வியுற்றது. 2ல் மட்டுமே வென்றது. ஒரு போட்டி முடிவேதும் இல்லாமல் போனது.

6வது போட்டி

1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து இப்போட்டியை நடத்தின. இதில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் தோல்வியடைந்தது. 3வது இடத்தையே பிடித்தது.

மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்றன. 7 போட்டிகளில் ஆடிய இந்தியா, நான்கு போட்டிகளில் வென்று, 3 போட்டிகளில் தோல்வியுற்றது.

7வது போட்டி

இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவை இணைந்து இந்தப் போட்டியை 1999ம் ஆண்டு நடத்தின. இதில் சூப்பர் சிக்ஸ் ரவுண்டோடு இந்தியா வெளியேறியது.

12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் 6வது இடத்தைப் பிடித்தது இந்தியா. 8 போட்டிகளில் ஆடி நான்கில் வெற்றியும், நான்கில் தோல்வியையும் சந்தித்தது.

8வது போட்டி

2003ம் ஆண்டு கென்யா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இணைந்து இப்போட்டித் தொடரை நடத்தின. 14 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. மொத்தம் 11 போட்டிகளில் ஆடி 9 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.

9வது போட்டி

2007ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் இணைந்து நடத்திய 9வது உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த ஒன்றாகும்.

16 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் 10வது இடத்தையே பெற்ற இந்தியா முதல் சுற்றோடு விடை பெற்றது. 3 போட்டிகளில் ஆடிய இந்தியா 2 போட்டிகளில் பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது. ஒன்றில் மட்டுமே வென்றது.

No comments: