சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும் என்றும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 2ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர் எழுதினர். இவர்களில், மூன்று லட்சத்து, 36 ஆயிரத்து, 443 பேர் மாணவர்கள்; மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 102 பேர் மாணவியர். 1,890 மையங்களில், தேர்வுகள் நடந்தன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்போது, பாட வாரியாக மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி, "டேட்டா சென்டரில்' மும்முரமாக நடந்து வருகிறது. மெட்ரிக் - ஆங்கிலோ இந்திய தேர்வுகள், மார்ச் 22ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ். எல்.சி., தேர்வுகள், மார்ச் 28ம் தேதியில் இருந்தும் ஆரம்பமாகி, நான்கு போர்டு தேர்வுகளும், ஏப்ரல் 11ம் தேதி முடிந்தது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்தாண்டு, மே 14ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு, மே 13ம் தேதி, தேர்தல் முடிவு வெளிவர இருப்பதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி குறித்து, கடந்த வாரம் வரை, உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக, தேர்வுத்துறை மற்றும், "டேட்டா சென்டர்' அதிகாரிகளுக்கும் எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், நேற்று திடீரென, தேர்வு முடிவு தேதிகளை, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டார்.
சென்னை, கன்னிமாரா நூலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், நிருபர்களிடம் கூறும்போது, "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. எனவே, இதன் முடிவுகள், மே 14ம் தேதி வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்கேற்ப, பணிகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவு மட்டும், மே 14ம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும்' என்று அறிவித்தார்.
செயலர் அறிவிப்பு குறித்து, தேர்வுத்துறை மற்றும் டேட்டா சென்டர் வட்டாரம் கூறியதாவது: பிளஸ் 2 ரிசல்ட்டுக்கான பணிகள் திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகின்றன. மே 14ம் தேதி வெளியிடுவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. அதற்குள், பணிகள் முடிந்துவிடும். ஆனால், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த 20ம் தேதி தான் துவங்கியது. மாநிலம் முழுவதும், 66 மையங்களில், இப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள், மே 15ம் தேதி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டேட்டா சென்டரில் மதிப்பெண்கள் பதியப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட வேண்டும். இவ்வளவு பணிகள் இருக்கும்போது, இப்போதே, "ரிசல்ட்' தேதியை நிர்ணயித்திருப்பது, தேவையில்லாமல், நெருக்கடியை உருவாக்குவது போல் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment