சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.
பணப் பட்டுவாடாவை தடுக்க மேலும் தீவிர வாகன சோதனை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி திரும்பி இருக்கிறோம். எல்லா மாவட்டங்களிலும் பூத் சிலிப் வழங்கும் பணி இரண்டு மூன்று நாட்களில் முடிவடையும்.
மிண்ணணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிவடைந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவுக்கு முதல் நாள் அனுப்பி வைக்கப்படும்.
தபால் வாக்குக்கான 66,231 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான மூன்றாவது கட்ட பயிற்சி 2 நாட்களில் நடைபெறும். தேர்தலின் போது ஒருவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்தி இருந்தால், உரிய அடையாள அட்டையுடன் வரும் வாக்களருக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். அவருக்கு வாக்குச் சீட்டும் வழங்கப்படும்.
10,000 வாக்குக் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் கண்காணிக்கப்படும். கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் போட்டு கள்ள ஓட்டு போட்டது கண்டுபிடிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3ம் தேதி வரை 22 கோடியே 68 லட்சம் ரூபாய் ரொக்கமும், 10 கோடியே 30 லட்சம் ரூபாய் பெருமானம் உள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சரியான கணக்கு மற்றும் ஆவணங்களை காட்டியவர்களுக்கு ரூ.4.80 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ராமநாதபுரம் பெருநாழியில் ரூ.40 லட்சம் ஒரு டீக்கடையில் சிக்கியுள்ளது. அந்த பணம் எப்படி வந்தது என்று தெரியாது டீக்கடை காரர் கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் திமுக சேர்மேனிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் இன்று அதிகாலை 1 மணியளவில் தேமுதிக பிரமுகர்களும், பொதுமக்களும் இரண்டு பேரை பிடித்துக் கொடுத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.19.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி பொன்னகர் அருகே தனியாக நின்று கொண்டிருந்த எம்.ஜே.டிராவல்ஸ் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பஸ்சில் ரூ.5.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பஸ்சில் யாருமே இல்லை. அந்த பஸ்சின் உரிமையாளரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் மேலும் தீவிரமாக நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றார்.
தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி அமலில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியது பற்றி கேட்டதற்கு, தேர்தல் கமிஷன்
சட்டவிதிப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை கலெக்டர் சகாயம் குறித்து சில புகார்கள் வந்துள்ளன. அவரிடமும் விளக்கம் கேட்டு இருக்கிறோம்.
தேவைப்பட்டால் மதுரைக்கு கூடுதல் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்கள். தேர்தல் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தேர்தல் கமிஷனின் கடமையாகும். பறக்கும் படையினர் அவர்களுக்கான பாதுகாப்பை வழங்குவார்கள்.
மு.க.அழகிரி மிரட்டல், விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது, நடிகர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது உள்ளிட்ட விஷயங்களில் புகார்கள் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். பொத்தாம் பொதுவாக கூறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றார்.
No comments:
Post a Comment