டெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்திய அணிக்கு வாழ்த்து
இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.
இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
No comments:
Post a Comment