டெல்லி : அதிக கமிசன் தருவதாக கூறி, மாருதி உள்ளிட்ட உள்நாட்டு கார் நிறுவனங்களின் டீலர்களுக்கு வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வலைவீசி வருகின்றன.
இந்திய கார் சந்தையில் மாருதி, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நீண்ட காலமாக முக்கிய இடம் வகித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க்கை கொண்டுள்ளன. நாட்டின் மொத்த கார் டீலர்களில் எண்ணிக்கையில், 90 சதவீத இடத்தை இந்த மூன்று நிறுவனங்கள் வசம் இருந்தன.
இந்நிலையில், இந்தியாவின் கார் சந்தை அபரிமித வளர்ச்சி கண்டதால், வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி என ஏராளமான பன்னாட்டு கார் நிறுவனங்கள் வரிசையாக நுழைந்தன. ஆனால், உள்நாட்டு கார் நிறுவனங்கள் பெற்றுள்ள ஸ்திரமான சந்தையை உடைக்க பன்னாட்டு நிறுவனங்களால் முடியவில்லை.
இதையடுத்து, இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க பன்னாட்டு கார் நிறுவனங்கள் புதிய உபாயம் ஒன்றை கையில் எடுத்துள்ளன. மாருதி, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் டீலர்களில் அதிக கார் விற்பனை செய்யும் டீலர்களை தன் பக்கம் இழுத்து வருகின்றன பன்னாட்டு கார் நிறுவனங்கள்.
நாட்டின் மாநகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பெரிய டீலர்களுக்கு அதிக கமிசன் தருவதாகவும், கார்களுக்கு பணம் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து தருவதாக ஆசை வார்த்தை கூறுவதால், டீலர்களும் பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவின் டீலர்கள் பலர், தற்போது வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட டீலர்களாக மாறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும் 90 சதவீத இடத்தை பிடித்திருந்த உள்நாட்டு நிறுவனங்களின் டீலர்கள் எண்ணிக்கை தற்போது 80 சதவீதமாக குறைந்துவிட்டது," என அகில இந்திய டீலர்கள் கூட்டமைப்பு (எப்.ஏ.டி.ஏ.,)தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்த டீலர் ஒருவர் கூறுகையில்,"உள்நாட்டு கார் நிறுவனங்கள் கார்களுக்கு 3 முதல் 3.5 சதவீத கமிசன் வழங்குகின்றன. ஆனால், பன்னாட்டு கார் நிறுவனங்கள் 5 முதல் 6 சதவீத கமிசன் வழங்குகின்றன. தவிர, கார்களுக்கான பணத்தை திரும்ப செலுத்துவதற்கு நீண்ட அவகாசம் தருகின்றன," என்றார்.
No comments:
Post a Comment