05 April 2011

இலங்கை அணியின் கேப்டன் பதவியிலிருந்து சங்கக்காரா விலகல்.


Kumar Sangakkaraடெல்லி: இந்தியாவுடன் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியி்ல் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து குமார சங்கக்காரா விலகியுள்ளார்.

கடந்த 2007 உலகக் கோப்பைப் போட்டியிலும் இறுதி வரை முன்னேறிய அணி இலங்கை. அப்போது கேப்டனாக இருந்தவர் மஹளா ஜெயவர்த்தனே. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இலங்கை. இதையடுத்து ஜெயவர்த்தனே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து சங்கக்காரா கேப்டனாக்கப்பட்டார்.

இந்த முறை நடந்த உலககக் கோப்பைப் போட்டியிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியது இலங்கை. ஆனால் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சங்கக்காரா.

இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே நான் இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி எனது முடிவைத் தெரிவித்து விட்டேன். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தோல்வியைத் தழுவியுள்ளோம். எனவே கேப்டன் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுக்க இதுவே சரியான தருணம் என்பது எனது கருத்து என்றார்.

இதையடுத்து மீண்டும் மஹளா ஜெயவர்த்தனே கேப்டனாக்கப்படக் கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது. அல்லது திலகரத்னே தில்ஷன் கேப்டனாக்கப்படலாம்.

No comments: