பெங்களூர்: ஏரோ இந்தியா-2011 என்ற பெயரில் சர்வதேச விமான கண்காட்சி, பெங்களூரில் இன்று தொடங்குகிறது. வருகிற 13-ந் தேதி வரை இந்த விமான திருவிழா 5 நாட்கள் நடக்கும்.
ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழா இந்த ஏரோ இந்தியா. சர்வதேச அளவிலான விமான கண்காட்சி இது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான விமான திருவிழா, பெங்களூர் எலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 160 நாடுகள் பங்கேற்கின்றன. விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விமான திருவிழாவையொட்டி நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
மேலும் அதிநவீன போர் விமானங்கள், மிகப்பெரிய பயணிகள் விமானம், அதிவேக போர் விமானங்கள் என்று 27 வகையான விமானங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
விமான கண்காட்சியையொட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தினமும் காலை 10 மணி முதல் மதியம் வரையிலும், பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்போது விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம். விமான திருவிழா முதல் நாளான இன்று காலையில் விமான சாகசங்கள் கிடையாது. பிற்பகலில் மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
விமானங்கள் விற்பனை:
இந்த கண்காட்சியில் விமானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த முறை இந்த திருவிழாவின்போது சுமார் ரூ.1.10 லட்சம் கோடிக்கு விமான வர்த்தகம் நடைபெற்றது. இந்த முறை அதை விட கூடுதலாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்கள் இயங்குவது மற்றும் அவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் விமான கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக அமெரிக்க போர் விமானத்தில்(எப்-16) பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் பறக்கிறார். அதிவேகமாக செல்லக் கூடிய அந்த விமானத்தில் பறந்து செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இக்காட்சியை வருகிற 12-ந் தேதி(சனிக்கிழமை) பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தில் பறக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment