22 February 2011

கோத்ரா ரயில் எரிப்பு - 31 பேர் குற்றவாளிகள்


Godra Train Burningஅகமதாபாத்: 2000 பேரை பலி வாங்கிய குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவ வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த ரயில் எரிப்பில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழக்கி்ல் குற்றம் சாட்டப்பட்ட 63 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 58 பேர் பிணமானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத்தினரை குறி வைத்து வேட்டையாடினர் சங் பரி்வார் அமைப்பினர். மிகக் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில் சிக்கி 2000 பேர் பலியானார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள்.

முதலில் இந்த வழக்கை, திட்டமிடாத தாக்குதலாக எப்ஐஆர் பதிவு செய்தது போலீஸ். ஆனால் பின்னர் குஜராத் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுப் படை, இதை முஸ்லீம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாகக் கூறியது.

இந்த நிலையில் 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அமைத்த கமிஷன் தனது விசாரணையில் இது விபத்தே என்று தெரிவித்தது. ஆனால் இந்த கமிஷன் சட்டத்திற்குப் புறம்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நீதி விசாரணைக் கமிட்டி, இந்த சம்பவம் திட்டமிடப்படாதது, தற்செயலாக நடந்தது என்று தெரிவித்தது.

ஆனால் 2008ம் ஆண்டு மோடி அரசு அமைத்த புதிய கமிஷன், முதலில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் கூற்றையே ஏற்று, இது திட்டமிடப்பட்ட சதியே என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூறிய கூற்றை (திட்டமிடபப்பட்ட சதி அல்ல என்று கூறப்பட்டிருந்ததை) ஏற்றுக் கொண்டது.

இந்தப் பின்னணியில் இந்த ரயில் எரிப்பு சம்பவம் விபத்தா அல்லது சதியா என்ற வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.பாட்டீல் தீர்ப்பை வழங்கினார்.

அவர் கூறுகையில், ஐபிசி 302 பிரிவின்படி 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். 63 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மெளலவி உமர்ஜி விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 95 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். 5 பேர் சிறார்களாக அறிவிக்கப்பட்டு சிறார் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 16 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

முதலில் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இதை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் இன்னும் நிலுவையில் உள்ளது


குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஐபிசி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் முக்கியத்துவம் கருதி சபர்மதி சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கேயே விசாரணை நடந்து வந்தது.

2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வெளியாகியுள்ள முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: