டெல்லி: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் மே மாதத்தில் அடுத்தடுத்து முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களுக்கும் மே மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து ஓரிரு நாளில் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று மாநிலங்களில் ஒரு கட்ட வாக்குப் பதிவு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், நக்சலைட் பாதிப்பு, தீவிரவாதிகள் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பல கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.
மே 1ம் தேதி முதல் 8ம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
வேட்பு மனு தாக்கலில் புதிய நடைமுறை
இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்குப் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் தவிர மனைவி, உறவினர்களின் விவரம், அவர்களது சொத்து விவரம், குற்றப் பின்னணி விவரம், வருமான வரி தாக்கல் குறித்த விவரம், உறவினர்கள் யாரேனும் அரசுப் பணியில் உள்ளனரா என்பது குறித்த விவரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
வங்கிக் கடன் பெற்றது தொடர்பான விவரம், அரசு உதவி பெற்ற விவரம் ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது
No comments:
Post a Comment