இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் ஊழலான 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியை உலகுக்கு அம்பலப்படுத்திய ஊடகங்களுக்குப் பாராட்டு விழா நடத்த, தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டி.பி.கே.நலவிரும்பி முற்பட்டார். அவருடன் அதிமுக, மறுமலர்ச்சி திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளும் இணைந்து சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராசர் அரங்கத்தில் 1-2-2011 அன்று கருத்தரங்கம், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொள்ள நானும் அழைக்கப்பட்டேன்.
விழா நிகழ்ச்சிநிரல் பட்டியலில் 33 சிறப்புரையாளர்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. மாலை 3 மணிக்கு விழா ஆரம்பமாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விழாவுக்கு அன்று மாலை 6.30 மணி அளவில் வந்தால் போதுமானது என்று அமைப்பாளர்கள் என்னிடம் கூறினார்கள். ஊடகச் செய்தியாளர்களைப் பாராட்டும் விழா என்ற அளவில் அது ஒரு குதூகலமான, மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக இருக்கும் என நான் எதிர்பார்த்தேன்.
பிப்ரவரி முதல் தேதி குறிப்பிட்டபடி மாலை 6.30 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள காமராசர் அரங்கம் அருகில் சென்றேன். அரங்கத்தின் நுழைவு வாயிலின் வெளியிலேயே, போக்குவரத்து தடைப்பட்டு நின்றது, ஆயிரம் பேர்களுக்கு மேற்பட்ட கூட்டத்தின் ஆரவாரம் கொந்தளிப்பு இருந்தது. போலீஸôர் அங்கும் இங்கும் அதிகாரமுறையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தியபடியும் கலைந்துபோகுமாறு எச்சரித்தபடியும் இருந்தனர். ஒரு காவல் அதிகாரி என்னிடம் வந்து, கூட்டம் இன்று இல்லை, நீங்கள் செல்லலாம் என்று நான் திரும்பிச் செல்வதற்கு வழிவகுத்தார். கூட்டத்தைச் சமாளித்து அருகே சென்றேன், காமராசர் அரங்கத்தின் முன்வாயில்கள் பூட்டப்பட்டு, வெளியில் இன்று (1-2-2011) பிற்பகலில் காமராசர் அரங்கத்தில் நிகழ்ச்சி எதுவும் கிடையாது என்று எழுதப்பட்ட அட்டை ஊசலாடியது.
நிகழ்ச்சியாளர்கள் என்னிடம் வந்து, திடீரென்று காமராசர் அரங்கின் நிர்வாகிகள் எங்களை அழைத்து விழா நடத்த முடியாது என்று கூறிவிட்டார்கள். அதன்பேரில் போலீஸôர் பாதுகாப்புடன், கூட்டத்துக்கு வந்தவர்கள் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டனர். முதலில் அனுமதி தரப்பட்ட கூட்டத்துக்குக் கடைசி நேரத்தில் தடைவிதித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் மனுச் செய்துள்ளோம், சாதகமான தீர்ப்பு விரைவில் வந்துவிடும் என்று கூறினார்கள்.
எதற்கும் கட்டுப்பட்டு சட்டமுறையில் அமைதியாக நடந்துகொள்ளுங்கள். எப்படிப்பட்ட தீர்ப்பு வந்தாலும், அமைதி காக்க வேண்டும். மேற்கொண்டு நடைபெறுவதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். கவனிக்கவேண்டிய முறையில் நாங்கள் கவனிக்கிறோம். அருகில் நிறுத்தியிருந்த காரில் நான் 7.30 மணிவரை காத்திருக்கிறேன், அதன் பிறகு நான் வருகிறேன். எதற்கும் பொறுமையாக இருங்கள் என்று விழா அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு நான் சிறிது தூரம் சென்று காத்திருந்தேன்.
7.25 மணிக்கு, கூட்டம் நடத்துவதைத் தடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வந்துவிட்டது என்ற செய்தி வந்தது. உடனே, காமராசர் அரங்கத்துக்குள் நான் சென்றேன். அரங்கத்தில் 300 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். கூட்டம் நடைபெறாது என்ற அறிவிப்பாலும். போலீஸôரின் அதிகாரபூர்வமான அதட்டுதலையும் அச்சுறுத்தலையும் தாங்கமுடியாத நிலைமையில் வெளியில் காத்திருந்த பலர் திரும்பிவிட்டனர்.
முதலாவதாக, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நான் பார்த்தேன். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தந்த உத்தரவில், ""தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை சார்பில் உள்ள காவலர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவரும் 2011 பிப்ரவரி 15 வரையுள்ள இருவாரங்களில் மனுதாரர்களின் கூட்டம் நடைபெறுவதற்கு எத்தகைய இடையூறும் விளைவிக்கக்கூடாது என இதன்மூலம் தடைசெய்யப்படுகிறார்கள் என்றும், வழக்கு 15-2-2011-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'' என்றும் தெளிவான கட்டளை தரப்பட்டிருந்தது.
மேடையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் இருந்தனர். இரவு 9 மணியளவில் ஈரோடு செல்லவேண்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா.பாண்டியன், தமது பயணத்தை ஒத்திப்போட்டு காமராசர் அரங்கத்துக்கு வந்தார்.
நடைபெற்ற மாபெரும் ஊழலை வெளிப்படுத்தியவர்களைப் பாராட்டுவதற்காக எடுக்கப்பட்ட கூட்டத்தில், ஊழலுக்குக் காரணமான ஆளவந்தார்களின் அதிகாரத் திமிர்பிடித்த அடக்குமுறை ஆட்சி குறுக்கிட்டுவிட்டது. அதைக் கவனிக்கவேண்டிய கட்டாயம் வந்தது. அந்தக் கூட்டத்தில் 2ஜி ஊழலைப்பற்றி நான் பேசவில்லை. 2ஜி என்பது ஆங்கிலத்தில் நங்ஸ்ரீர்ய்க் எங்ய்ங்ழ்ஹற்ண்ர்ய் என்பதன் சுருக்கமாகும். அந்த 2ஜி என்பது அலைவரிசை விஞ்ஞான முறையில் இரண்டாவது தலைமுறை என்பதாகும். அதற்கு முன்பு கம்பித் தொடர்பில் இருந்த தொலைபேசி முறை மாற்றப்பட்டு, மொபைல் - கைப்பேசி வந்தது. இந்தப் புதிய முறையைப் பகிர்ந்து அனுமதிக்கும் அதிகாரத்துக்கு அதிபதியாக இருந்த அமைச்சர் - பதவி அளவில் அமைச்சர், அதிகார அளவில் இருந்த தனிக்காட்டு ராசா - எடுத்த நடவடிக்கைகளால், ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவில் இந்திய அரசாங்கத்தின் வருமானம் ஊழலில் மறைந்துவிட்டது. இதை இந்தியத் தலைமைத் தணிக்கைக் குழுவின் தலைவர் தந்த அறிக்கை விளக்கமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.
மேலும், ஆதாரபூர்வமான குறிப்புகளை முன்வைத்த ஊடகங்கள் - செய்தி நிறுவனங்கள் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய பிரச்னைகள், ஆளவந்தார்களை ஆட்டி வைத்தன. இதற்குமுன் எவ்வளவோ மோசடிகளை - ஊழல்களைத் திறம்படச் செய்து ஆட்சியைக் கைப்பற்றும் மாபெரும் திறமையான ஊழல் மாமன்னர்கள் அவர்கள். இந்த அசட்டு அமைச்சர் ராசா மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாகச் செய்த ஊழலால் திகைப்படைந்து விட்டனர். பத்திரிகைகளில் பத்திபத்தியாக நாள்தோறும் வெளிவந்த விவரங்கள், விதவிதமான கார்ட்டூன்கள், உச்ச நீதிமன்றத்தில் நாளைக்கொரு நீதிபதியின் கேள்வி, வேளைக்கொரு அமைச்சரின் மட்டரகமான சமாதானங்கள்.
அதிலும், சட்டப்பேரவைத் தேர்தல்கள் தமிழ்நாட்டிலும் மற்றும் சில மாநிலங்களிலும் நெருங்கும் நேரம். இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ள காமராசர் அரங்கத்திலேயே ஊழலை வெளிப்படுத்திய ஊடகங்களுக்குப் பாராட்டுக் கூட்டம்.
1975-77-ல் மத்திய ஆட்சியில் இருந்த அதிகார முதல் தலைமுறை இரண்டு நெருக்கடிகால உத்தரவுகளைப் பிறப்பித்து, இந்திய அரசியல் வரலாற்றில் அதற்கு முன்பு இல்லாத அளவுக்கு ஒரு பயங்கரமான இருண்ட கால ஆட்சியை நடத்தியது. இப்பொழுது தலைநகர் தில்லியில் அதற்கு அடுத்த இரண்டாவது தலைமுறை ஆட்சி நடத்துகிறது. எப்படிப்பட்ட அடக்குமுறைகளைப் போட்டாவது, கூட்டம் போடும் உரிமையைக் குலைக்கவும், பேசும் குரலை அடக்கவும், ஆட்சியின் இரண்டாவது தலைமுறையின் கூட்டணி தயாராகிவிட்டது. அதன் விளைவுதான், அண்ணா சாலையில் காமராசர் அரங்கத்தில் நடத்தவிருந்த கூட்டத்துக்குப் போடப்பட்ட தடை.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று தமிழக முதல்வர், தலைநகர் தில்லியில் அறிவித்திருக்கிறார். அதேசமயம், காமராசர் அரங்கத்தில் எதிர்க்கட்சியினர் பேச இருந்த கூட்டத்துக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதைக் கவனித்தபொழுது, 1975 ஜூன் 25 அன்று போடப்பட்ட நெருக்கடி கால உத்தரவைப் பற்றிய செய்தி வந்தபொழுது பெருந்தலைவர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். எந்த இந்திரா காந்தி அம்மையாரை பிரதமராக ஆக்கிய அதே பெருந்தலைவர் காமராசர் நாடு சுடுகாடாக ஆகிவிட்டது என்ற குமுறலுடன் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள தமது இல்லத்துக்குத் திரும்பினார். சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்ந்த அவர், வீட்டைவிட்டுப் பிறகு வெளிவரவில்லை. அதற்குப் பிறகு 1975 அக்டோபர் 2-ல் அவர் உயிர் பிரிந்ததும், அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
1975-77-ல் நாட்டில் சுடுகாட்டு அமைதி - கல்லறை மைதானத்தின் அமைதி நிலவியது. அதேவிதமான கல்லறை அமைதி மீண்டும் இந்தியாவுக்கு வரவேண்டுமா? நிகழ்ச்சியாளர்கள் என்னிடம் தந்த சில செய்திகள் ஆச்சரியப்படத்தக்கவைகளாக இருந்தன. எங்களால் சொல்ல முடியாதவைகளை நீங்களாவது சொல்லுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஆதரவு தந்தார்களாம். ஆயினும், சென்னையில் நடைபெற இருந்த ஊடகப் பாராட்டுக்கூட்டம் தில்லியிலிருந்த மாநில முதல்வருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தந்தனவாம், இத்தகைய நிகழ்ச்சியைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை எப்படிச் செய்யலாம் என்ற கண்டனக் குரல் - கண்டிப்பான உத்தரவு தில்லியிலிருந்து வந்ததாம். அதன்விளைவுதான் காமராசர் அரங்கத்தில் நடைபெற இருந்த கூட்டத்துக்குக் கடைசி நேரத்தில் மறுப்பு, மூடப்பட்ட அரங்கத்தின் வாயிலுக்குக் பூட்டு, போலீஸ்காரர்களின் ஆர்பாட்டம், கூட்டம் நடைபெறுவதை யாரும் தடைசெய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. என்ன செய்வது? உச்ச நீதிமன்றம் போடுகிற தடைகளை அடுத்து உயர் நீதிமன்றமும் சட்டப்படி, நீதிமுறைப்படி இப்படிப் போவது என்று ஆரம்பித்தால், எப்படி ஆளுங்கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியும்?
இதைப்போலத்தான் 2006 அக்டோபர் மாதத்தில் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் நடைபெற்ற பலாத்காரங்களை, அநீதிகளை, அக்கிரமங்களைக் கண்டித்து, அக்டோபர் 24 அன்று துக்ளக் ஆசிரியர் சோ, முன்னாள் காவல்துறை அதிகாரி வி.ஆர்.லட்சுமிநாராயணன், பி.எஸ்.ராகவன், நான் ஆகியோர் பேசஇருந்த கூட்டத்தைக் கடைசி நேரத்தில் நடத்தமுடியாதபடி, போலீஸôர் அனுமதிதர மறுத்ததால், கூட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு நவம்பர் 15-ல் வேறொரு இடத்தில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசும், மாநில அரசும் ஊழல் ஆட்சியின் கூட்டாளிகள் என்றமுறையில் தமது அதிகாரத்தை வைத்து, போலீஸ் ஆதிக்கத்தை வைத்து, கூட்டம்போடும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை அடக்கும் எதேச்சாதிகார ஆட்சிமுறையை மீண்டும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.
2006-ல் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் கட்டவிழ்த்து விடப்பட்ட பலாத்கார முறைகளைக் கண்டித்தோம். பின்னர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மறுதேர்தல்களை நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
2006-ல் நடைபெற்றது மாநகராட்சித் தேர்தல். 2011-ல் நடைபெற இருப்பது மாநில சட்டப்பேரவைத் தேர்தல். ஆக, முன்பு நடந்ததைவிட, அதிகமான அளவுக்கு அநீதிகளும், அடக்கு முறைகளும் கையாளப்படலாம். அதற்கு, கூட்டணி ஆட்சியாளர்கள் இப்பொழுதே தயாராக அணிவகுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆரம்பம் சாதாரணமானது அல்ல. ஊழல் ஆட்சியின் அழிவுக்கால இறுதிக் கட்டத்தின் ஆரம்பம்.
நன்றி - தினமணி
No comments:
Post a Comment