டெல்லி: இமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு கண்காணிக்க அனுமதிக்காத பிளாக்பெர்ரி போன்கள் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.
இந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.
இதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எம்எஸ் 'என்க்ரிப்ட்' செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.
இதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றக்கூடும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பிளாக்பெர்ரி கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக ஜனவரி 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தது.
இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது,
காலக்கெடு நீட்டிக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் சேவையை முற்றிலுமாக ரத்து செய்யவும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கும், பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தொலை தொடர்பு நிறவனங்களுக்கு உரிமம் அளிக்கும்போதே அதில் செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் தேவைப்படுகையில் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
No comments:
Post a Comment