இந்திய வெளியுறவு அமைச்சகம் உருவான வரலாறு
* பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த போது, 1783, செப்டம்பர் 13ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர் குழு, கோல்கட்டாவில் கூடியது. அதில், ஐரோப்பிய நாடுகள் உடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை நிர்வகிப்பதற்காகத் தனித் துறை ஒன்றை அமைக்கும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* 1843ல் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல், எட்வர்ட் லா, முதன் முதலாக, இந்திய அரசில், வெளியுறவு, உள்துறை, நிதி மற்றும் ராணுவ அமைச்சகங்களை உருவாக்கினார்.
* 1935ல் கவர்னர் ஜெனரலின் நேரடிப் பொறுப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனியாகச் செயல்படத் துவங்கியது.
* 1946ல் இந்திய வெளியுறவுச் சேவை (ஐ.எப்.எஸ்.,) துவக்கப்பட்டது.
* 1948ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய சிவில் சேவைத் தேர்வுகளின் மூலம் முதல் முதலாக வெளியுறவுச் சேவைக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று வரை இந்தத் தேர்வு மூலம்தான் வெளியுறவு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
* மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் 162 வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இரண்டையும் சேர்த்து, தற்போது மொத்தம் 600 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர்.
அணிசேராக் கொள்கை
* இந்தியா விடுதலை பெற்றவுடன், முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவே வெளியுறவு பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.
* இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசுகளின் பக்கம் சார்ந்து இரண்டாகப் பிரிந்து கிடந்தன. இவற்றுக்கிடையே காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான புதிய நாடுகள் இருந்தன.
* அனைத்துக்கும் ஒரு வழிகாட்டியாக, எந்த நாட்டின் பக்கமும் சேராமல், புதிய உலக நாடுகள் அனைத்தும் தனி ஒரு அணியாக இருப்பதற்கு வகையளித்த "அணிசேராக் கொள்கையை' நேரு உருவாக்கினார்.
பஞ்சசீல கொள்கை:
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் 1954ல் பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது.
* இருநாடுகளும் பரஸ்பரம் எல்லை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்.
* ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வலிந்து தாக்குதலில் ஈடுபடக் கூடாது.
* இன்னொரு உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடக் கூடாது.
* இருநாடுகளும் சமமாகவும் பரஸ்பரம் நன்மை தரும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
* அமைதியான இணக்க உறவு.இந்த பஞ்சசீலக் கொள்கையை உலக நாடுகள் தங்கள் வெளியுறவில் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் இவற்றை சீனா மீறியது தனிக் கதை.
இந்தியாவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள்: உலகில் குறிப்பிடத்தக்க வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியா, பல நாடுகளுடன் ராணுவ உறவு கொண்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டின் ராணுவத்துடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
* இந்தியாவுக்கு அதிகளவில் ராணுவத் தளவாடங்களை வினியோகம் செய்வதில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. அதையடுத்து, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.
* இவை தவிர, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், தென்னாப்ரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுடனும் ராணுவ உறவை மேற்கொண்டுள்ளது.
* தஜிகிஸ்தானில் இந்தியாவுக்கு ஒரு விமானப் படைத் தளம் உள்ளது. 2008ல் கத்தார் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment