2010 ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த மாதம். மூன்று அயல்நாட்டுத் தலைவர்கள் இம்மாதத்தில் இந்தியப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களில், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி சமீபத்தில் வந்து சென்றார். வரவிருக்கும் மற்ற இருவர், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ. கடந்த நவம்பர் மாதம் தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். ஐ.நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகளில், நான்கு நாட்டுத் தலைவர்கள் இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து இந்தியப் பயணம் மேற்கொண்ட சம்பவம் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்தது கிடையாது. இந்த நான்கு நாட்டுத் தலைவர்கள் முன்பும் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ள கோரிக்கைகளில் முக்கியமானது, ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதுதான்.
இது வரையிலான காலகட்டங்களில் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலகளாவிய நிலையில் எவ்விதம் மாறியிருக்கிறது என்பதையும், இனி வருங்காலத்தில் உலகம் எவ்விதம் இந்தியாவைப் பார்க்கப் போகிறது என்பதையும் இந்தக் கோரிக்கை நமக்குக் காட்டுகிறது. சந்தேகம் இல்லாமல், இந்திய வெளியுறவுக் கொள்கையில் இதை ஒரு மாபெரும் வெற்றி என்று அடித்துக் கூறலாம். அதேநேரம், இந்த வெற்றி, இன்றியமையாத சவால்களும், கடினமான சுமைகளும் நம் முன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சவால்களையும் சுமைகளையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? வேகமாக மாறி வரும் உலகில், இந்தியா ஒரு புதிய இடத்தைப் பெற்றுள்ளதைப் பற்றி இந்த தலைவர்களின் வருகை எப்படி சுட்டிக்காட்டியுள்ளது என்பதை நாம் முதலில் பார்ப்போம்.
பழைய வல்லரசுகளும், பொருளாதார சிக்கலும்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், பிரிட்டனும், பிரான்சும் கடந்த காலத்தில் வல்லரசுகளாகத் திகழ்ந்தவை என்பது தெளிவு. அவற்றின் பொருளாதாரம் சுருங்கத் துவங்கி விட்டது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் 10 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதே நிலைமைதான். ஜெர்மனியின் பொருளாதாரம் மட்டும் இப்போதும் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது அந்நாட்டினரிடையே வெறுப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் அவரது இந்தியப் பயணம் அவருக்கு ஒரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கிறது என்பது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல. ஆனால், இந்த விளம்பரமும் அவரது கவர்ச்சிகரமான மனைவியால் வந்தது;வெளியுறவுக் கொள்கையால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய - ரஷ்ய உறவு: சோவியத் யூனியன் சிதறுண்ட பின், உலக விவகாரங்களில் ரஷ்யாவின் முக்கியத்துவம் குறிப்பிடத் தக்க அளவில் சரிந்தது. நீண்ட காலமாக வல்லரசாக இல்லாத ரஷ்யா, தன் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கிடையில் மாறி வரும் உலகில் தனக்கு ஒரு புதிய இடத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ரஷ்ய அதிபர் மெட்வடேவ் மற்றும் பிரதமர் விளாடிமிர் புடின் இருவர் முன்பும் ஒரு மாபெரும் சவால் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் நம்பியுள்ள ரஷ்யப் பொருளாதாரத்தில், உற்பத்தித் துறை இன்னும் மந்தமாகவே உள்ளது. எனவே ரஷ்யப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதுதான் அவர்களின் முன் உள்ள சவால்.
மெட்வடேவ், கடந்தாண்டு ஆற்றிய பார்லிமென்ட் உரையில்,"நமது உற்பத்தித் துறையை நாம் நவீனப்படுத்தத் துவங்க வேண்டும். அதேநேரம் தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்த்த வேண்டும். இன்றைய உலகில் நம் நாடு வாழ்வதற்கு பிரச்னையாக உள்ளது இதுதான்' என்று குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா உடனான இந்திய உறவு முற்றிலுமாக மாறியிருக்கிறது. நமது நம்பிக்கைக்குரிய, அரசியல் ரீதியிலான நட்பு நாடாக ரஷ்யா இருந்த போதும், உலகளவிலான நமது பொருளாதார உறவுகளில் ரஷ்ய உறவின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. மாறாக சீனாவுடனான நமது பொருளாதார உறவு குறுகிய காலத்தில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்துள்ளது.
கடந்த 2000ல், சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம், தலா 3 பில்லியன் டாலர். இந்தாண்டில் மட்டும் இந்திய-சீன வர்த்தகம் 60 பில்லியன் டாலர். 2015ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகம் 120 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, இந்திய-ரஷ்ய வர்த்தகம் 10 பில்லியன் டாலர் தான். இதுவே 2015ல் வெறும் 20 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா பெரிய பங்கு வகித்து வருகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், அது பிற உலக நாடுகளுடன் கொள்ளும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள், சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனினும் நாம் ரஷ்யாவைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, அமெரிக்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியது. ரஷ்யாவுக்குள் ஐந்து இந்தியாக்களை வைத்து விடலாம். இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத நாடு. எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்தியாவின் மின்சார உற்பத்தி பாதுகாப்புக்கு ரஷ்யாவின் உதவி இன்றியமையாதது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 9,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் உடைய அணு உலை, மேம்பட்டு வரும் இந்திய-ரஷ்ய உறவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மாறாக, இந்தியாவில் ஒரு அணு உலை கட்டக் கூட அமெரிக்கா ஆர்வத்துடன் முன்வரவில்லை. இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, இந்தியப் பார்லிமென்ட்டில் பெருத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதேநேரம், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உள்ள "சகாலின்' தீவில், இந்திய அரசின் "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன்' (ஓ.என்.ஜி.சி.,) ரஷ்ய அரசுடன் இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கண்டறியும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இந்திய - அமெரிக்க உறவு: அமெரிக்கா உடனான இந்திய உறவில் குறிப்பிடத் தக்க மாற்றம் நிகழ்ந்தது இந்தாண்டில்தான். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் கண்ணோட்டம் தெளிவாக இருந்தது. "வீழ்ந்து கொண்டிருக்கும் வல்லரசு அமெரிக்கா ; இந்தியா உலகரங்கில் எழுச்சி பெறும் ஒரு வல்லரசாக இருப்பதால் தான் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார் ' என்பதுதான் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் தெளிவான கண்ணோட்டமாக இருந்தது. அமெரிக்கா உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அமெரிக்காவில் கொஞ்சம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான், ஒபாமா இந்தியா வந்தார் என்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொண்டனர்.
ஒரு காலத்தில் வலிமையான நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 10 அமெரிக்கர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார். சராசரி அமெரிக்கனின் சேமிப்பு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. மலை போல கடன் சுமை அந்நாட்டை அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தற்போதைய கடன் 13.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி). கடன் வாங்கும் தொகையில் பெரும்பகுதியை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா வீணாக செலவழித்துள்ளது. அமெரிக்க உதவி, இந்தியாவுக்குத் தேவை என்பதை விட, மிக அதிகளவில் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவை என்பதை முதன் முறையாக, அமெரிக்க கொள்கை நிபுணர்கள் மற்றும் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.கடந்த செப்டம்பரில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வு, உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் உலக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியாவை உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த நாடு என, இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்புதல் தான், கடந்த 10,15 ஆண்டுகளில் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசை முறை மாறி வருகிறது என்பதையும், இந்தியாவும் தன்னளவில் பெரும் மாறுதலுக்குட்பட்டிருக்கிறது என்பதையும் நமக்குக் காட்டுகிறது.
இந்திய - சீன உறவு: வரவிருக்கும் அடுத்த பத்தாண்டுகளில், உலகின் பிற எந்த நாடுகளையும் விட, இந்தியாவும் சீனாவும் தான் புதிய ஆதிக்க சக்திகளாக பரிணமிக்கப் போகின்றன. இதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கை முன்பு உள்ள மிகப்பெரிய சவால். இந்திய-சீன உறவுகள், அடுத்து வரும் பல ஆண்டுகளை எப்படி வழிநடத்தப் போகின்றன? "இரு நாடுகளும் ஆசியாவின் முதலிடத்துக்குப் போட்டியிடுகின்றன. அதனால் விரைவில் அல்லது சிறிது தாமதித்து இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும்' என்று காட்ட மேற்கத்திய நிபுணர்கள் சிரமப்பட்டு முயல்கின்றனர். இரு தரப்பிலும் அவநம்பிக்கை நிலவுவதாக மற்றொரு கருத்து நிலவுகிறது. மேற்கத்திய கருத்தும், நமது முன்முடிவும் முற்றிலும் தவறானது என்றே நான் கருதுகிறேன். ஆம்., எதிர்காலத்தில், வளமான சக்தி வாய்ந்த நாடுகளாக உலகில் திகழப் போகும் இருநாடுகளும் தம்முள் நட்புறவையும், கூட்டுறவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது முடியும் என்பது மட்டுமல்ல, தேவையும் கூட.
இருநாடுகளும், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறையில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி சிறிதளவு இங்கு பார்ப்போம். நமது மொத்த மக்கள் தொகையில், கால் பகுதியினரின் வாழ்வை இருட்டில் வைத்திருக்கும் மோசமான வறுமையை நாம் பூண்டோடு அழித்தாக வேண்டும். சமூக மற்றும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டும். பெருகி வரும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றுக் கொள்ளவே முடியாத பிளவை குறைக்க வேண்டும்.
இறுதியாக, அதேநேரம் மிக முக்கியமாக, நமது சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். உண்மையிலேயே, பொருளாதார வளர்ச்சியால் தான், சுற்றுச்சூழல் மோசமான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், மிக முனைப்போடு ஈடுபட்டுள்ள சீனாவும் இதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும், பிரச்னைக்குரிய எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நட்பு மற்றும் நல்லுறவால் அடையாளப்படுத்தப்பட்ட இந்திய-சீன பண்பாட்டு உறவில், முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும், 1962 காலத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை இருநாட்டு மக்களும் மறந்து விட வேண்டும். கடந்த 2003ல் அப்போதைய இந்திய ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவுக்குச் சென்ற போது, உலகளவில் பிரபலமானவரும் சீனப் பிரதமருமான வென் ஜியாபோ அவரிடம்,"கடந்த 2,200 ஆண்டுக்கால சீன-இந்திய உறவில் 99.99 சதவீதம் நட்பு பதிவாகியிருக்கிறது. 0.01 சதவீதம் மட்டுமே தவறான புரிதல் பதிவாகியுள்ளது. அந்தத் தவறான புரிதலைப் புதைத்து விட்டு, நட்பை விதைக்க வேண்டிய காலகட்டம் இது' என்று கூறியதை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். வென் ஜியாபோவும், நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளில், பத்து முறை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு டில்லி அல்லது பீஜிங் அல்லது சர்வதேசக் கூட்டம் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கலாம். இந்தியா-சீனாவுக்கிடையே அடிக்கடி நடக்கும் இந்த உயர்மட்ட சந்திப்பும் பேச்சுவார்த்தைகளும் இருதரப்பு உறவுக்கான நல்ல சகுனம் என்றே தோன்றுகிறது. அதேநேரம், இருதரப்பு மக்களுக்கிடையே, கலாசாரம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் உள்ள தொடர்பு விரிவடைய வேண்டும். சீனாவில் "யோகா' வேகமாகப் பரவி வருவது நல்ல அறிகுறி.
ஐ.நா.,வைக் கடந்து...: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களைத் தாண்டியும் இந்திய வெளியுறவுக் கொள்கை செயல்பட வேண்டும். உலகரங்கில் வலிமை பொருந்திய புதிய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அவற்றுடனான உறவுகளில் இந்தியா குறைந்தளவு மட்டுமே ஆர்வம் காட்டி அவற்றை புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டும்.
"கிழக்கு பார்வைக் கொள்கை': நமது வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய பகுதியான "கிழக்கு பார்வைக் கொள்கை' தான், தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நம்மை நெருங்க வைக்கும். இக்கொள்கையை இந்தியா மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்த வேண்டும். வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் முற்காலத்தில் தமிழர்கள் கலாசார மற்றும் வர்த்தக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்கு நினைவு கூர்தல் அவசியம். இந்திய நாகரிகமும், ஆன்மிகத் தாக்கமும், புத்த மதத்தின் வழியாக, ஜப்பான் மற்றும் கொரியாவைச் சென்றடைந்தன. இந்தத் தொன்மையான உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம் நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் குறிக்கோளை நாம் அடைய முடியும்.
அண்டை நாடுகளுடன்...: நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காத வரை, இருதரப்பு உறவுகளும் சீரடையாது. வங்கதேச- இந்திய உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளை வங்கதேசம் முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான நமது உறவை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். நமது நெருங்கிய அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வருவதில், நமது ஒத்துழைப்பை பிற நாடுகளுக்கு அளிக்க வேண்டும். இந்திய செல்வாக்கில் இருந்து விடுபட விரும்பும் பல்வேறு சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேபாளத்தை நோக்கியும் நம் பார்வை திரும்ப வேண்டும்.
புவியியல், ஆன்மிகம் மற்றும் மொழியியல் ரீதியில் இலங்கை உடனான நமது உறவு, பொருளாதார தொடர்பையும் கடந்து ஆக்கப்பூர்வமாக வலுப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவை இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களும் பயன்பெறுவர் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாக வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தில் வளத்தையும் இணக்கத்தையும் கொண்டு வர வேண்டியது இந்தியாவின் கடமை. அதுதான், நமது நாட்டில் பிறந்த அறிவார்ந்த சான்றோர்கள் மற்றும் சமூக சீர்திருத்த வாதிகளின் கனவை நிறைவேற்றுவதும் ஆகும்.
No comments:
Post a Comment