லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் அரங்கின் அசைக்க முடியாத நாயகனாகவும் மிளிர்ந்து கொண்டிருப்பவர் சச்சின். இவர் படைக்காத சாதனை இல்லை. அந்த சாதனைகளை முறியடிக்க பல வருடங்களாகும் நிலை வேறு.
இப்படி அடுக்கடுக்காய் சாதனைகளை சுமந்து நிற்கும் சச்சின் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மிகப் பெரிய சாதனை ஒன்றைப் படைத்தார். அப்போட்டியில் அபாரமாக ஆடிய சச்சின் 200 ரன்களைத் தொட்டு புதிய வரலாறு படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போடப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான்.
இந்த சாதனைப் போட்டி தற்போது டைம் இதழின் டாப் 10 சிறந்த ஆட்டப் பட்டியலில்இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து டைம் இதழ் கூறுகையில், இப்படிப்பட்ட சிறப்பான சாதனைகள் அவ்வளவு சாதாரணமாக நடந்து விட முடியாதது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை எடுத்தது மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை யாரும் அந்த சாதனையைப் படைக்கவில்லை.
இப்போட்டியில், சச்சின் 3 சிக்சர்களை விளாசினார். அவர் எடுத்த 200 ரன்கள் மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் 199 ரன்களை எட்டியபோது போட்டி நடந்த குவாலியரில், இந்திய ரசிகர்கள் மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டனர். வரலாறு படைக்கப் போவது அவர்கள் கண் முன்பு தெரிந்த சந்தோஷத்தில் சச்சினை வாழ்த்தி குரல் எழுப்பினர். இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பந்தில் சச்சின் எடுத்த 200வது ரன் மிகப் பெரியாக விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை என்று டைம் இதழ் புகழாரம் சூடியுள்ளது.
No comments:
Post a Comment