22 October 2011

ஆட்டம் போட்ட உதிரி கட்சிகள் டமால்: உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி


கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாட்டுக் குழு, தனித்தனி தேர்தல் அறிக்கை என, ஆட்டம் போட்ட உதிரிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை, அ.தி.மு.க.,வும் கழற்றி விட்டதன் மூலம், இக்கட்சிகளின் சாயம் வெளுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

தி.மு.க., கழற்றிவிட்டதால், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் மட்டும், நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நகராட்சி தலைவர் பதவியைக் கூட, தேசிய கட்சியான காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை. இதன் மூலம், "தமிழகத்தில் தங்களுக்கு கணிசமான அளவு ஓட்டு வங்கி உள்ளது' என்ற காங்கிரசாரின் வாதம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.வட மாவட்டங்களில், பா.ம.க., - வி.சி., கட்சிகள் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறி, திராவிட கட்சிகளை மிரட்டி வந்தன. இவர்களின் தயவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறி, மாறி மாறி ஏதாவதொரு திராவிட கட்சியில் கூட்டணி என்ற பெயரில் சவாரி செய்து, எம்.எல்.ஏ., - எம்.பி., மத்திய அமைச்சர் வரை உயர்ந்த பதவிகளை அனுபவித்து வந்தனர். தற்போது வட மாவட்டங்களிலேயே இக்கட்சி தோல்வியைத் தழுவியதால் அக்கட்சிகளின் குட்டு உடைந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கூட்டணியுடன், உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த, தே.மு.தி.க., சென்னை, ஈரோடு, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள, தே.மு.தி.க., ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாதது, "அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் தான், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வால் வெற்றி பெற முடிந்தது' என்ற அரசியல் ஆர்வலர்களின் விமர்சனத்தை மெய்பிப்பதாக உள்ளது.எதிர்க்கட்சியான, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட, மா.கம்யூ., வேலூர் மற்றும் கோவை மாநகராட்சிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இ.கம்யூ., இருக்கும் இடம் தெரியவில்லை.உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடமும், திருப்பூர், வேலூர், கோவை மாநகராட்சிகளில் நான்காவது இடத்தையும் பிடித்து, ம.தி.மு.க., தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வின் மீது, மக்களுக்கு இருந்த அதிருப்தி இன்னும் தீரவில்லை. இந்நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான போட்டியில், பெரும்பாலான இடங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.உள்ளாட்சித் தேர்தல் முடிவின் மூலம், தமிழகத்தில், காங்கிரஸ், மா.கம்யூ., -இ.கம்யூ.,- பா.ம.க., - வி.சி., ஆகியவை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகள் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டிருந்த கட்சிகள் அனைத்தும் இனி, தொகுதி பேரம் பேசும் வலுவை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் இழந்துள்ளன.

No comments: