26 October 2011

"ஆதார் அடையாள அட்டை'க்கு விண்ணப்பிக்கும் பணி துவக்கம்


சென்னை:""தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை'யை, ஒவ்வொரு குடிமகனும் அவசியம் பெற வேண்டும்,'' என, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசினார். இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, தமிழக அளவில், "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பங்களை பெறும் பணி, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் நேற்று துவங்கியது.

இப்பணியை துவக்கி வைத்து, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால்சாமி பேசியதாவது:ஒருவரின் இருப்பிட நிரூபணத்திற்கு முக்கிய ஆவணங்களாக உள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவை, மாநில அளவில் மட்டும் செல்லத்தக்கவை.தற்போதைய பணி சூழலில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது மாறுதலில் செல்ல வேண்டியுள்ளது. அப்போது அவர்களிடம், இருப்பிட நிரூபணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், ரேஷன் அட்டை, சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு துவங்குவது போன்றவற்றில், நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

இக்குறைகளை களையும் வகையில், தேசிய அளவில் செல்லத்தக்க, "ஆதார் அடையாள அட்டை' வழங்கும் திட்டம், தபால் துறை மூலம், நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இப்பணி, இன்று(நேற்று) துவக்கப்படுகிறது. கிராமப்புற மக்களிடம் எளிதில் கொண்டு செல்லும் நோக்கில், இப்பணி தபால் துறையிடம் தரப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த அடையாள ஆவணமான, "ஆதார் அடையாள அட்டை'யை ஒவ்வொரு குடிமகனும் பெறுவது அவசியம்.இவ்வாறு கோபால்சாமி பேசினார்.

போலி அடையாள அட்டைக்கு, "செக்': "ஆதார் அடையாள அட்டை'க்கான விண்ணப்பத்தை பெறும்போது, விண்ணப்பதாரர்களின், பத்து கைவிரல் ரேகைகள், இரண்டு கருவிழிகள் மற்றும் இரண்டு மார்பளவு புகைப்படம் போன்றவை எடுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் ரத்த வகையும் பதிவு செய்யப்படும்."இவற்றின் மூலம், போலி அடையாள அட்டை பெறுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இப்பணிகளுக்காக, ஆதார் அடையாள அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் தபால் நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என, சென்னை வட்ட தபால் பொது மேலாளர்(கடித மேலாண்மை) ராமசந்திரன் கூறினார்.

No comments: