22 September 2011

"டிவிட்டர், பேஸ்புக்' உதவியை நாடுகிறது தேர்தல் கமிஷன்


ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, "டிவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், மாநில தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். உள்ளாட்சி தேர்தலில், விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக, தமிழக தேர்தல் கமிஷனின் செயலர் சேவியர் கிறிசோ நாயகம், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொலைத் தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்தி, ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக, தங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வேண்டுகோள் விடுக்க முன்வந்துள்ளன. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சினிமா தியேட்டர்களில், "சிலைடு' காட்டுவதன் மூலம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், தட்டிகள் வைக்கலாம். மின்னஞ்சல் மூலமும், டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றின் மூலமும், வாக்காளர்களை ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லாத "டிவி'யில் இலவச விளம்பரம்!தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே, உள்ளூர் சேனல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன. இன்று வரை, எந்த மாவட்டத்திலும் உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் கமிஷன், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உள்ளூர் சேனல்களில், இலவச விளம்பரம் செய்து கொள்ளும்படி, அறிவுறுத்தியுள்ளது. இல்லாத, "டிவி'க்களில் இலவச விளம்பரம் செய்யும்படி, தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை கண்டு, தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

No comments: