23 September 2011

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக- உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி

சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது தேமுதிக. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அது அறிவித்துள்ளது. கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.
தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.

பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் மூழ்கினர்.

தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வந்தது. அதிலும் உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை.

இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிலும் வெற்றி கிடைக்காத நிலையில், தற்போது தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த கட்சித் தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

மேயர் வேட்பாளர்கள்

சென்னை மேயர் பதவிக்கு கோ.வேல்முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். மதுரைக்கு கா.கவியரசு, கோவைக்கு ஆர்.பாண்டியன், சேலத்திற்கு ஏ.ஆர்.இளங்கோவன், நெல்லைக்கு ஏ.சீதாலட்சுமி, வேலூருக்கு எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு, ஈரோட்டுக்கு என்.எஸ்.சிவக்குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி மேயருக்கு தினேஷ்குமார், தூத்துக்குடிக்கு ராஜேஸ்வரி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: