மாதம் 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.,க்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வாகனப்படி போன்றவை இருந்தும், ஏ.சி., இரண்டாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்குவது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கும் இது போன்ற பயணச் செலவு படிகள் எதற்காக? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சலுகைகள் ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளமாக மாதம் 8,000 ரூபாய், ஈட்டுப் படியாக 7,000, தொலைபேசி படி 5,000, தொகுதிப் படி 5,000, தபால் படி 2,500, தொகுப்பு படி 2,500, வாகனப் படி 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தொகுதிப் படியை மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால், மொத்தம் 55 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் பெறுகின்றனர். இது தவிர, சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்ள தினமும் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
ரயில் மூலம் பயணம் செய்ய ஏ.சி., இரண்டாம் வகுப்பில் சென்று வர ஆகும் செலவுடன், ஒரு கி.மீ., தூரத்துக்கு 10 காசு வீதம் வழங்கப்படுகிறது. சாலை வழியில் பயணம் செய்தால், பஸ் வழித்தடத்தில் கி.மீ.,க்கு 25 காசு, பஸ் வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு சென்றால் கி.மீ.,க்கு 50 காசு வீதம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு பயணப் படிகள் வழங்கிய போதிலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் தனது வாழ்க்கைத் துணை அல்லது உதவியாளருடன் எந்த பகுதிக்கும் எந்த நேரமும் செல்ல, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கியது போக, தனது துணை அல்லது உறவினருடன் அல்லது தனியாக ரயிலில் பயணம் செய்வதற்கான படியாக, ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே ரயில் அல்லது சாலை வழி பயணத்துக்கான செலவை ஈடு கட்டும்போது, இந்த தொகை எதற்கு என்ற கேள்வியை, தகவல் உரிமை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். அவ்வாறு வழங்குவது தவிர, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் சமயங்களில், தனது இருப்பிடத்தில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல, அவரது துணையுடன் ஏ.சி., இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தையும் அரசு வழங்குகிறது.
இந்த பயணச் சலுகைகள், அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் வழங்கப்படுவது தான் கேள்விக்குறியாக உள்ளது. காரணம், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் எதற்காக இவ்வளவு பயணம் செய்ய வேண்டும்; அவர்களுக்கு இவ்வளவு தொகையை ஏன் செலவழிக்க வேண்டும் என்பது தான். எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகை தவிர, சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு, அதற்கு மாதம் 250 ரூபாய் மட்டும் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர, எம்.எல்.ஏ.,க்களுக்கு டெலிபோன் சலுகை, மருத்துவ வசதி போன்றவையும் தாராளமாக வழங்கப்படுகின்றன.
எம்.எல்.ஏ., இறந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகள் பெறும் எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி மக்களுக்கு நல்லது செய்தால் நன்றாக இருக்கும். சலுகைகளை அனுபவித்துவிட்டு, தொகுதி மக்களை மறப்பதால், அடுத்த முறை இவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.
No comments:
Post a Comment