15 September 2011

அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு; துபாயில் 4 நாள் நடக்கிறது


துபாய்: இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
தொழில் வாய்ப்புகள்- நிதி திரட்டுதல் : இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான 1ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை பிரதிநிதிகள் பதிவு நடைபெறும். 2ம் தேதி காலை 09:30 மணிக்கு துவக்க விழா; 12 மணிக்கு உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள்; பகல் 02:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல், மாலை04:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் புதிய கருத்துக்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

3ம் தேதி காலை 9 மணிக்கு தொழில் வாய்ப்புகளுக்கான சட்டச் சேவைகள்; 11:30 மணிக்கு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்; பகல் 2 மணிக்கு அரசின் ‌ஆதரவு மற்றும் சமுதாய இணைப்பு; மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

4ம் தேதி காலை 9 மணிக்கு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள்; பகல் 11:30 மணிக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் சேவைகள்; 2 மணிக்கு சுகாதார பாதுகாப்பு சேவைகள் ஆகியவை குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழாவும், நிறைவு விழாவும் நடைபெறும்.

உலகத்தமிழ் மாமணி விருது: உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது. மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், அமெரிக்கா ஸ்ரீ மீனாட்சி கோயிலை உருவாக்கிய எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ., தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோருக்கு இந்த உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

இம்மாநாட்டு ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் சம்பத் துபாயில் மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும் ஈடிஏ., குழுமத் தலைவருமான சையது சலாலுதீனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் ஈடி‌ஏ., குழுமத்தின் செயல் இயக்குநர் அக்பர் கான், மீரான், தைமூர் ஆகியோரையும் மற்றும் துபாயில் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளையும் அவர் சந்தி்த்தார்.

No comments: