15 September 2011

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி : கருணாநிதி


சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்காமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பொதுப்பணி குறிக்கோளாகக் கொண்டு தி.மு.க., செயல்பட உள்ளது. இதுவே, எல்லாராலும் விரும்பப்படும், ஏற்கப்படும் நிலை என்பதையும் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்றும் தி.மு.க., முடிவு செய்துள்ளது.

EVKS Elangovan

இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு அணியையும் அமைக்காமல், தனித்து போட்டியிட தி.மு.க., முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இதன்மூலம் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துவி்ட்டது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்காது என்று இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட இருந்தது. இதனை தெரிந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி முந்திக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுவதாக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதனால் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துள்ளது.

திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கிரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் திமுக தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும்.

வரும் உள்ளாட்சி தேர்தல்லில் திமுகவினருக்கு காங்கிரஸ் தொண்டர்களின் ஒத்துழைப்பு இருக்காது என்று தெரிந்துதான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்திருப்பார். இது வரவேற்கத்தக்கது.

தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் காங்கிரசாரின் கை விலங்கு உடைக்கப்பட்டு விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் தேவை ஏற்பட்டால் காங்கிரஸ் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் திமுகவை தோற்கடிப்போம் என்றார்.

No comments: