22 September 2010

அமெரிக்கா வேண்டாம் ... இந்தியா போதும்-இது முதலீட்டாளர்களின் விருப்பம்

சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளுக்கு ஏற்ற நாடு அமெரிக்கா அல்ல என்றும், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில்தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ப்ளூம்பர்க் நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய கருத்துக் கணிப்பில், 1408 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சீனா மற்றும் பிரேசில் நாடுகள் பொருளாதார வளர்ச்சியிலும், செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப வருவாய் அளிப்பதிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர். இந்தியாவுக்கு மூன்றாம் இடத்தை அளித்துள்ள அவர்கள், அதற்கடுத்து நான்காம் இடத்தை அமெரிக்காவுக்கு அளித்துள்ளனர்.

"அமெரிக்க பொருளாதாரம் [^] இன்னமும் நிலையற்ற தன்மையில்தான் உள்ளது. இங்கு முதலீட்டின் மதிப்புக்கேற்ப வருவாய் கிடைக்கும் நிலை இன்னும் உருவாகவில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
India Investement
முதலீட்டாளர்களின் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், அமெரிக்காவின் மொத்த உற்பத்தி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்த மொத்த உற்பத்தி வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 3 சதவீதத்தைத் தாண்டுமா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் வல்லுநர்கள்.

"அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால் அது அடுத்த ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ நடக்கக் கூடிய அதிசயமல்ல...", என்று முதலீட்டாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 6-ல் ஒருவர் மட்டுமே அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்கால முதலீட்டை எந்த நாட்டில் செய்ய விருப்பம் என்ற கேள்விக்கு, சீனா, பிரேசில் அல்லது இந்தியா என்றே பதிலளித்துள்ளனர் பெரும்பாலான முதலீட்டாளர்கள்.