வாஷிங்டன்: உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.
ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன