2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான சீன மற்றும் கொரிய தயாரிப்பு செல்போன்களில் இரண்டு மற்றும் மூன்று சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மற்ற பிராண்டட் மொபைல் போன்களிலும் இந்த வசதியை நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கெனவே சாம்சங், எல்ஜி போன்ற நிறுவ2 சிம் கார்டு பயன்படுத்தும் வசதியுள்ள செல்போன்களை அறிமுகம் செய்துள்ளன.
இப்போது நோக்கியாவும் இரட்டை சிம் செல்போன்களை களமிறக்கியுள்ளது.
இது குறித்து நோக்கியா நிறுவன (இந்தியா) விற்பனை இயக்குனர் விபுல் சபர்வால் நேற்று சென்னை யில் நிருபர்களிடம் கூறியதாவது:
"2 சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் பலர் விருப்பம் தெரிவித்தனர். அவ்வாறு 2 சிம் கார்டுகளை ஒரே செல்போனில் பயன்படுத்துவதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு நேரம், செலவு, திறன் மேம்பாடு ஆகிய வசதிகள் கிடைக்கிறது என்பதை அறிவோம். அதன் காரணமாக நோக்கியா நிறுவனம் 2 சிம் கார்டு போடும் வசதி கொண்ட 'சி1-00' என்ற செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய செல்போன் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலைக்கு விற்கப்பட உள்ளது. அதன் விலை ரூ.1999 மட்டுமே. ஒரு கீயை அழுத்துவதன் மூலம் 2 சிம் கார்டிலும் மாறி மாறி பேசலாம். எந்த அழைப்பையும் தவறவிடாமல் பேசலாம். அழைப்பு மாற்றம் வசதி மூலம் அனைவரும் பயன் அடைகிறார்கள்.
நாட்டில் மின் வசதி இல்லாத கிராமங்களில் அல்லது மின்சார தடை ஏற்படும்போது இந்த செல்போனில் உள்ள ஃபிளாஷ் பகுதி லைட் டார்ச் லைட் போல பயன்படும். மேலும் இந்த செல்போனில் வண்ணத்திரை உள்ளது. மேலும் எம்.எம்.ரேடியோ கேட்கலாம். ஹெட்போன் ஜாக் உள்ளது. இத்தனை வசதி கொண்ட செல்போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மார்க்கெட்டில் எல்லா இடங்களிலும் அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும்..." என்றார்.