மதுரையில், மத்திய அமைச்சர் அழகிரியின் வலது கரமான மதுரை நகரச் செயலர் பொட்டு சுரேஷ் கைதாகி சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அழகிரியின் நெருக்கமான அட்டாக் பாண்டியும் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமியின் வலது கரமான சிவா ஆகியோர் நில அபகரிப்பு வழக்குகளில் சிறையில் உள்ளனர். சிவா கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொங்கலூர் பழனிசாமியின் மீதும் வழக்குத் தொடரப்படலாம் எனத் தெரிகிறது. பல மாவட்டங்களில், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அவர்கள் தலைமறைவாகி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து அவர்கள் முன் ஜாமின் கேட்டு மனு செய்தும் வருகின்றனர். இவை ஒருபுறமிருக்க, கடந்த வாரம் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகனும் தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலினுக்கும் இடையே நடந்த காரசார வாக்குவாதம் பெரும் நெருக்கடியை கட்சியில் ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினுடன் ஏற்பட்ட மன வருத்தத்தால், யாருக்கும் சொல்லாமல், தனது செயலருடன் சென்னை கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு கருணாநிதி சென்றுவிட்டார். காலையில் சென்ற அவர், மாலையில் திரும்பினார். அண்மைக் காலத்தில், இதுபோல தனியாக அவர் சென்றதில்லை. குடும்பத்தினருடன் ஏற்பட்ட கோபத்தால் அவர் தனியாகச் சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. "2ஜி' வழக்கில், சிறையில் உள்ள கனிமொழி, தன்னை பார்க்க சிறைக்கு வந்த மகளிர் அணியினரிடம், ஸ்டாலினையும் குற்றவாளி ஆக்குவேன் என கூறியதாகவும், அதுவே, ஸ்டாலினுக்கும், கருணாநிதிக்கும் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், கனிமொழியும், அழகிரியும் சேர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக இருப்பதும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்பிரச்னையில், முன்னாள் அமைச்சரும், கட்சியின் முக்கியத் தலைவருமான துரைமுருகனை, கருணாநிதி கடுமையாகத் திட்டியதால், அவர் கோபித்துக் கொண்டு, பொதுக்குழுவில் பங்கேற்க மாட்டேன் எனக் கூறி வெளிநாடு சென்று விட்டார். பொன்முடி மீதும் புகார் தர ஒரு பிரிவினர் தயாராகி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு வழக்குகள், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இடையே ஏற்பட்ட நேரடி மோதல், கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவற்றால் தி.மு.க., கலகலத்துப் போய் உள்ளது. இந்த நிலையில், கோவையில் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க., பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment