25 July 2011

பஞ்சத்துக்கு பேர் போன நாடு சோமாலியா


கொள்ளைக்காரனாக மாறினால்தான் மக்கள் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கிறது ஒரு நாடு. அது சோமாலியா. பஞ்சத்துக்கு பேர் போன நாடு. உயிரோடு இருக்கும்போதே, விலாவில் உள்ள எலும்புகளை எண்ணி விடலாம். பலமுறை பஞ்சம் தலை விரித்தாடிய பூமி. இப்போது அந்த எலும்புகளையும் கரையச் செய்யும் அளவுக்கு மீண்டும் பஞ்சம்.


ஆப்ரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஏறக்குறைய 1 கோடியே 10 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் கிடைக்கும் உணவைத்தான் தினமும் எதிர்பார்த்துள்ளனர். சோமாலியா நிலைமை மிகவும் மோசம். ஏற்கனவே கொத்துக் கொத்தாய் மக்கள் பட்டினியால் சாக ஆரம்பித்து விட்டார்கள்.


 இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கையே பல ஆயிரங்களைத் தாண்டும் என்கிறது ஐ.நா. அறிக்கை. பல நாட்கள் பட்டினியாகக் கிடைக்கும் மக்களுக்கு கொண்டு செல்லும் உணவுப் பொருட்களை அல் சபாப் தீவிரவாத அமைப்பினர் நடுவழியில் தட்டிப் பறித்துச் செல்லும் கொடுமையும் நடக்கிறது. அதோடு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள மக்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, வேறு இடங்களுக்குப் போய் விடக் கூடாது என்பதில் இந்த அமைப்பினர் குறியாக உள்ளனர். அப்படி செல்பவர்களை சுட்டுக் கொல்லவும் தயங்குவதில்லை.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சோமாலிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கத் தயாராக இருந்தாலும் அதை அப் சபாப் தீவிரவாத அமைப்பு தடுத்து வருகிறது. தொண்டு நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது. பல அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டது. இதனால் ஒரு சில தொண்டு அமைப்புகள் மட்டுமே பஞ்ச பகுதியில் பணியாற்றி வருகின்றன. இதனால் பெரிய அளவில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க முடியவில்லை.  ஆனால் ஐ.நா. கூறுவது போல் அந்த அளவுக்கு பஞ்சம் இல்லை என்றும் இந்த அமைப்பு கூறி வருகிறது.


உயிர் பிழைக்க வழியில்லாமல் கடல் கொள்ளையர்களாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பட்டினி கிடந்து சாவதை விட இது மேல். பணம் கிடைத்தால் சந்தோஷமாக வாழ்வோம். தோட்டா பாய்ந்தால் சந்தோஷமாக சாவோம் என்ற நிலைக்கு இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இது நல்லதல்ல.


No comments: