பெங்களூர் : ‘குண்டலினி யோகா என்ற பெயரில் நித்தியானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார்’’ என்று கர்நாடகாவை சேர்ந்த நிருபர் கிரண் குமார் கூறினார்.. பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், ‘எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது’ என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது’ என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார்.
இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கிரண் குமார் கூறினார்.
No comments:
Post a Comment