கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் செய்தி இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டின் பல பகுதிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், போராட்டம்,லோக் சபா, ராஜ்சபா சோகமயம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது.
•லோக்சபாவில் ஆக்ரோசமாக பேசிய பா.ஜ.க எதிர்த் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக் கூடாது என்று மிகவும் வேதனையுடன் கூறியதாகவும்,
•ராஜ்யசபாவில் பேசிய நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் "இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது என்றும் எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலை அல்லது வருத்தம் தெரிவித்ததா??? இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் சோக மழையை ராஜ்ய சபாவில் பொழிந்துள்ளார்.
•சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலா வரும் திரு. அண்ணா ஹாசரே அவர்களும் தன் கடும் கண்டனத்தை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தன் ஆதரவையும் தெரிவித்ததோடு, கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிரான விசாரணைக்கு விரைவு கோர்ட் அமைத்து ,கடுமையான சட்டம் மூலம் தண்டிக்க வேண்டும் என்றார்.
•டெல்லி நகரம் கற்பழிப்புத் தலைநகரமாக மாறிவருவது வேதனையளிக்கிறது என்று டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் தெரிவித்துள்ளார்.
•இதனைத் தொடர்ந்து தமிழ் நடிகை ரோகிணி, நடிகர் அப்பாஸ் மற்றும் அவரது மனைவி எர்ரம்அலி மற்றும் அப்பாசின் இணையதள நண்பர்கள் அனைவரும் மெரீனா கடற்கரையில் திடீர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மாணவ மாணவிகளும் அங்கே குலுமியுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது, கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
கலைத்துறையாக இருக்கட்டும், அரசியல் துறையாக இருக்கட்டும், அரசாங்கமாக இருக்கட்டும், பொது மக்களாக இருக்கட்டும், உண்மையில் நீதிமான்களாக இருக்கின்ற உங்களின் மனதில் இருந்து இது போன்ற வருத்தமும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கமும் எழுந்து இருந்தால் இதை இந்தியாவில் உள்ள எந்த மூலை முடுக்கிலும் நிகழும் இது போன்ற அனைத்து கொடூரங்களுக்கும் அல்லவா தெரிவித்து இருக்க வேண்டும். இன்று மட்டும் உங்கள் மனசாட்சி உங்களை தட்டி எழுப்பியதன் நோக்கம் என்னவோ???
இது போன்ற அட்டூழியங்கள் இன்று தொடங்கியது அல்ல, காலம் தொட்டு பெண்கள் இது போன்ற இடருகளுக்கு உள்ளாக்கபடுகிறார்கள். அதை கண்டும் காணாமல் அரசும், அரசியல்வாதிகளும் தங்கள் சொகுசு வாழ்க்கையில் ஈடுபடுவதும், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டம் தீட்ட தொடர்வதுமே வழக்கம்.
இன்று எழுந்த இந்த குரல் இதற்கு முன் எத்தனை எத்தனை அட்டூழியங்கள் பெண்களுக்கு என்று அல்லமால், ஒரு ஒட்டு மொத்த மக்களுக்கு எதிராக நடந்த போது எங்கே சென்றார்கள். இவர்கள்? நீதிக் குரல் எதை பார்த்து எழுகிறது, மனிதனின் நிறத்தை பார்த்தா???, இல்லை வாழும் இடத்தை பார்த்தா??? இல்லை அவர்கள் எந்த மதம் என்பதை பார்த்தா??
அவர்கள் எதுவாக இருந்தாலும் மனிதனின் நிறம் வேறுபட்டாலும் எவ்வித பாகுபாடும் இன்றி அவர்களின் உடம்பில் ஓடும் இரத்தத்தின் நிறமும் சிவப்பு தானே, சிட்டியில் வாழ்ந்தாலும் பட்டி தொட்டிகளில் வாழ்ந்தாலும் பெண் என்பவள் பெண் தானே, மதம் எதுவாக இருந்தாலும் கிடைக்கும் வலி, வேதனை, அவமானம் ஒன்று தானே. யாராக இருந்தாலும் நீதி ஒன்று தான், நீதி என்பது அனைவர்க்கும் சமம் என்கின்ற சட்டம் எங்கே??? நீதி என்பது அனைத்து இடங்களிலும் பேசுவதில்லை என்பதற்கு பல இடங்களில் ஊமையாக இருந்துள்ளது என்பதை நிருபிக்க இதோ உங்கள் பார்வைக்காக சில தருணங்கள்....
குஜராத் இனப் படுகொலை :
இன்று நடந்த கொடூரத்திற்கு இவ்வளவு எதிர்ப்பும், போராட்டமும் தெரிவிக்கின்ற இந்த அரசாங்கமும், அரசியல் வாதிகளும், பொது மக்களும் எங்கே போய் விட்டனர் அன்று???
இன்று நல்லவர் வேஷம் போட்டு கோசம் போடும் இதே பா.ஜ.க அரசின் முன்னிலையில், சாதுர்யமான திட்டப்படி கடந்த 2002-ஆம் வருடம் குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, எட்டு மாதம் பருவமுடைய குழந்தை உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரிவதை கண் சிமிட்டாமல் கண்டு ரசித்தனர் அந்த பாசிச பயங்கரவாதிகள். இந்த இனப் படுகொலை கலவரத்தில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண் மகனையும் இவ்வுலகக்கு கடவுள் நேரடியாக அதிசய உயிராக அனுப்பி விடவில்லை. பெண் என்பவள் இத்துணை துன்பங்கள் ஆண்களால் அடைய நேரிடும் என்பதை முன்னரே அறிந்தோ என்னவோ கடவுள் இப்படி ஒரு மாபெரும் கிருபையை ஒவ்வொரு உயிரையும் ஒரு பெண்ணின் மூலம் அனுப்பி வைக்கிறான். அப்போதாவது நீங்கள் பெண்கள் மீது இரக்கப்படுவீர்களா, அவர்களை துன்புறுத்தாமல் விட்டு வைப்பீர்களா என்பதை சோதிப்பதற்காகவோ என்னவோ???
ஆனால் இதே குஜாராத் படுகொலையில் மனித உருவில் வந்த ஆண் மிருகங்கள் சில, கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர்.
இதை விட கொடுமை ஒரு பெண்ணுக்கு இவ்வுலகில் நடந்து இருக்க முடியுமா??? அந்த மனித மிருகங்களுக்கு, அந்த நிறை மாத கர்ப்பிணியின் வயிறை குத்தி கிழிக்கும் போது கூட தன்னை பெற்றெடுத்தவளும் பெண் என தோணவில்லையா??? ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தது இதற்கு தானா என்று வெட்கி தலைக் குனிய வேண்டாமா???
பூக்களுக்கு ஒப்பிடப்படும் மிகவும் இளகிய மென்மையான பெண்களும் பச்சிளங் குழந்தைகளையும் உயிரோடு எரித்து கொலை செய்யும் கொடூர உள்ளம் கொண்ட அவர்கள் இன்னும் உயிருடன் இவ்வுலகில் உயர்ந்த பதவிகளில் சந்தோசமான வாழ்க்கை பயணத்தில் பயணித்த வண்ணம் தான் உள்ளார்கள். ஆனால் எந்த வித பாவமும் செய்யாத அவர்கள் இன்று மண்ணறையில். இதற்கு காரணமானவனோ இன்னும் முதலமைச்சர் என்ற பதவியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு அடுத்து யாரை எரிக்கலாம், யாரின் வாழ்க்கையை பறிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டு! அரசே நிதி அளிக்கிறது, அங்கிகாரம் அளிக்கிறது. என்ன கொடுமை???
அப்பொழுது எங்கே சென்றது இந்த அரசாங்கமும், அரசியல்வாதிகளும், பொது மக்களும், நீதி மன்றமும், இன்று கொக்கரிக்கும் நீதி மான்களும்??? அன்று இவர்கள் கை கட்டி வாய் பொத்தி காது அடைத்து நிற்கும் குருடர்களாக, செவிடர்களாக இருந்தனரோ??? அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலா? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டென்று தைரியமாக காரணம் சொன்னபோது கூட மனிதாபிமானம் அடகு வைத்து அனைவரும் வாய் மூடி வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்!
ஹரியானா மாநிலத்தில் தலித் பெண் பலாத்காரம், தந்தை தற்கொலை:
கடந்த செப்டம்பர் மாதம் ஹரியானா மாநிலத்தில் 18 வயது இளம் தலித் பெண் பல உயர் சாதி மிருகங்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, அந்த கயவர்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த காட்சியை மொபைலில் படம் பிடித்து பலருக்கும் அனுப்பியுள்ளார்கள். இந்த அவமானம் தாங்காமல் அந்த பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் கண் துடைப்புக்காக காவல் துறை இருவரை மட்டும் கைது செய்ததே தவிர குற்றவாளிகள் யார் என்று நன்றாக தெரிந்தும் அவர்களை கைது செய்ய காவல் துறை தயங்குகிறது. காரணம், தவறு செய்தவர்கள் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் என்பதே.
கேட்க ஆள் இல்லாத மற்றும் ஆதிக்க பலம் இல்லாத ஒரே காரணத்தால் அந்த பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட அவமானத்தோடு, தந்தை தற்கொலை என்று தாங்க இயலாத இரண்டு சோகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஏன் இதற்கு மட்டுமா நீதி கிடைக்கவில்லை, போன வருடம் இதே கிராமத்தில் ஒரு முழு கிராமமும் ஆதிக்க சாதியினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. காரணம் இவர்கள் தலித் என்பதே!!! எங்கே சென்றது நீதி, ஆதிக்க சக்தி விலை கொடுத்து வாங்கி விட்டனரோ???
இதே போல் ஹரியாணா மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரங்களில் மூன்று பலாத்காரம் நடந்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. முதலில் நடந்த பலாத்காரத்துகே அரசு சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால், மீண்டும் மீண்டும் இதே போல் கொடூர செயலில் ஈடுபட மற்றவர்களுக்கு பயம் எழுந்து இருக்கும் அல்லவா??? இதனால் இந்தியாவில் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கா முடியாது என்றாலும் அந்த ஊரிலாவது பாதுகாப்பு கிடைத்து இருக்கும் அல்லவா??? இந்த சம்பவத்துக்கு இரு அவையிலும் யாரும் கண்ணீர் சிந்தவில்லையே ஏன்?
இது போன்ற கொடூரங்களுக்கு யார் காரணம், வாலிப மோகத்தில் பித்து பிடித்து அலையும் வாலிபர்களா??? பண பலம் கொண்ட ஆதிக்க சக்தியினரா?? நிச்சயமாக இல்லை... இதற்கு முழு முதற் காரணம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இன்று கோசமிடும் இந்த அரசாங்கமும், அரசியல்வாதிகளும், பொது மக்களும், நீதி மன்றமும், நீதி மான்களும் எங்கே சென்றனர்??? அவர் பெண் இல்லையா இல்லை மனித இனத்தை சார்ந்தவர் இல்லையா??? இல்லை தலித் என்ற பொடுபோக்கா???
காவல் துறையால் மலை வாழ் பெண்கள் பலவந்த பலாத்காரம் :-
வேலியே பயிரை மேய்ந்தது போல், பாதுகாப்பு தர வேண்டியே காவல் துறையே இந்த அட்டூழியத்தை செய்துள்ளது என்பது இந்தியாவின் சட்ட ஒழுங்கு எந்த கேவலாமான நிலையில் இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காண்பிக்கறது.
கடந்த நவம்பர் மாதம் திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற சில காவல் துறை அதிகாரிகள், சந்தேகமான நபர்களை விசாரிக்க செல்வதாக வீட்டிற்குள் புகுந்த அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 இருளர் பெண்களை காவல் துறையினரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறிய அரசு அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததே தவிர வேறு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சாதாரண தண்டனை இந்த கயவர்களுக்கு போதும் எனில் இவர்கள் மீண்டும் தைரியமாக இதே கொடூர செயலை செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்??? ஒரு பெண்ணுக்கு பாதிகாப்பு தர முடியாத இவர்கள் மீண்டும் வேலைக்கு வந்து யாருக்கு பாதுகாப்பு தரப்போகிறார்கள்?? ச்சீ! வெட்கக்கேடு!
பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறையே இவ்வளவு பெரிய கேவல செயலில் ஈடுபட்டுள்ளது என்பது மக்கள் இனி காவல் துறையையும் நம்ப இயலாது என்பதற்கு இது ஒன்றே போதுமானது. இத்துடன் நிறுத்திக் கொள்ள இந்தியா ஒன்றும் சட்டம் ஒழுங்கை பின்பற்றும் சீராட்டி, பாராட்டக் கூடிய நாடில்லை. இன்னும் இது போன்று ஆயிரம் ஆயிரம் கூறிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட கொடுமைகளை கண்ட அயல் நாடுகளோ இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப மறுக்கிறது. இன்று இந்தியாவின் நிலைமை உலகம் முழுவது பேர் கேட்டு சீரழிந்து நிற்கிறது என்பதை எண்ணி இந்தியனாக உள்ள ஒவ்வொருவரும் வெட்கி தலைக் குனிய வேண்டியுள்ளது.
சிட்டியில் வாழ்ந்தால் ஒரு சட்டம், குக்கிராமத்தில் வாழ்ந்தால் ஒரு சட்டம் என்றால் திரைப்படங்களில் காணுவது போல் நீதி என்னும் தேவதை இன்னும் கண் கட்டிக் கொண்டு குருடாகவே தான் உள்ளதோ என்னவோ???
ஆதிக்க சக்தியால் விலை கொடுத்து வாங்க முடியும் என்றால் கூறுங்கள் என்ன விலை என்று??? எதெதற்கோ லஞ்சம் கொடுக்கும் நாங்கள் இதற்கும் கொடுக்கிறோம் இது போன்ற கயவர்களை உடனடி தூக்கிலிட. உங்கள் பண பலத்திற்கு பகரமாக எதற்கு கேட்குறீர்கள் எங்கள் சகோதர சகோதரிகளின் விலை மதிக்க முடியாத கற்பை, அவர்களின் எதிர்கால வாழ்வை??? ஒஹ் நீதி என்பதும் உயர்ந்த சாதி கனியோ??? பாதிக்கப்படுபவர்களுக்கு எட்டாக் கனியாக இருக்க!!!!
இன்று கொக்கரிக்கும் இவர்களின் வருந்தலும், ஆதங்கமும், அரசியல் ஆதாயம் தேடும் போலி கௌரவம் என்பதை நிருபிக்கும் வண்ணமும், இவர்கள் எந்தவித தண்டனையும் கொடுக்க இயலாது என்ற அசட்டு தைரியத்தில் இந்த கொடூர பிரச்சினை இன்னும் அணையாத நிலையில் பல கயவர்கள் பல கொடூரத்தை இதே டெல்லி மற்றும் இந்தியாவின் பல மாநகரில் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது ஒன்று போதாதா நீதி என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்பதற்கு???
கடந்த சில நாட்களுக்குள்:
1. டெல்லி ப்ளே ஸ்கூல் 3 ½ வயதுடைய பச்சிளங் குழந்தை மாணவி அதிகாரியால் பாலியல் பலாத்காரம்
2. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை
3. நாகை மாவட்டத்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இருவரால் பாலியல் பலாத்காரம்
4. மேற்கு வங்காளத்தில் 35 வயதை சேர்ந்த விதவைப் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம்
5. மும்பை, நகபடா பகுதியை சேர்ந்த, 20 வயது உடைய பெண்ணை, கணவரின் நெருங்கிய நண்பர் மற்றும் இருவரால் பலாத்காரம்
ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் சட்டம் எங்கே? பச்சிளங் குழந்தையைக் கூட விட்டு வைக்காத இது போன்ற ஆண் வர்க்கத்துடன் ஒப்பிட்டு பேசும் சமூகம் பதில் சொல்லட்டும்!? பாதிப்புக்குள்ளாகும் பெண் வர்க்கம் ஆண் வர்க்கத்திற்கு சமமா?? பாதுகாப்பு அற்ற இவ்வுலகில் பெண் குழந்தையை பெற்றெடுக்கவே தயங்கும் பெற்றோர்கள் இனி கள்ளிப் பால் சட்டத்தை கையில் எடுக்கும் நிலை தான் உண்டாகும்!
சட்டம் என்பது சமம் எனில், நீதி என்பது சமம் எனில் கொடூரம் யாருக்கு நிகழ்ந்தால் என்ன??, யார் செய்தால் என்ன??? தண்டனை ஒன்றாகத் தானே இருக்க வேண்டும். அன்றே குஜராத் இனப் படுகொலைக்கும், அங்கு நடந்த கொடூர கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு காரணமானவர்களுக்கு சரியான தண்டனையாக பொது மக்கள் முன்னிலையில் அணு அணுவாக கல்லெறிந்து கொன்றோ அல்லது தூக்கிலிட்டு கொன்றோ இருந்தால் இன்று இது போன்ற கொடூரங்களை நிகழ்த்த இந்த மனித மிருகங்களுக்கு தைரியம் வந்து இருக்குமா??? இன்று இப்படி ஒரு சூழலை தவிர்த்து இருக்கலாமே??? அதெப்படி? நாம் தான் இந்த வெறிநாய்களை தூக்கிலிட்டால் வலிக்கும், மருந்து கொடுக்கணும், ஊசியால் வலிக்காம கொல்லணும்னு மனிதநேயம் பார்க்கும் உத்தமர்களாச்சே :(
அவர்களுக்கு மரணத் தண்டனை அளிப்பதன் மூலம் அந்த பெண்ணிற்கு மீண்டும் அவள் பழைய நிலையை பெற முடியாது என்பது உண்மையானாலும், இது போன்ற ஒரு காரியம் நாளை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழாமல் தடுக்க இயலும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இப்பொழுதுள்ள காலத்தில் குற்றவாளிகள் வெளியில் இருப்பதை விட சிறையில் தான் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள்!!! இது போன்றவர்களுக்கு சிறை என்பது சீராட்டி தாலாட்டி உறங்க வைக்கும் பஞ்சு மெத்தையே தவிர தண்டனை அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆயுள் தண்டனை மூலம் குற்றவாளிக்கு நாம் செலவு செய்கிறோம் என்ற உண்மையை உணருங்கள்... நம் வரிபணத்தை இந்த கயவர்களுக்காக கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையை யோசித்துப்பாருங்கள்.. இதைவிட நம்மை யாரால் முட்டாளாக்க முடியும்?
கண்டிப்பாக குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை என்பது,
1. மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும். அதை மீண்டும் செய்ய அவன் நடுங்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.
இத்தனை நாள் கண்ணை மூடிக் கொண்டு, குருடர்களாக, செவிடர்களாக ஊமையர்களாக இருந்தவர்கள் இன்று நடத்தும் நாடகத்தில் குற்றவாளிகளுக்கு ஒரு சிறந்த தண்டனையை தருவார்களா?? இனி இது போன்ற காரியங்களை செய்ய கயவர்கள் அஞ்சக் கூடிய நிலை வருமா??? எல்லாமே கேள்விக்குறியுடன்!!!
பிறந்த பச்சிளம் குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் கிழவி வரை விட்டு வைக்காத இது போன்ற சில ஆண் மிருகங்களிடம் இருந்து பெண்கள் இன்னும் எத்தனை காலம் தான் போராடுவது? இத்தனை பெரிய குற்றத்தை செய்யும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அந்த பெண்ணின் வாழ்வை பற்றி எண்ணிப் பார்க்கின்றனரா?? தற்கொலை கூட ஒரு நொடி வலி ஆனால் இது போன்ற வன்புணர்வு என்பது அவர் உயிர் உள்ள வரை அவரை அணு அணுவாக கொல்லும் என்பதை ஏன் நினைக்க மறுக்கின்றனர். அவருக்கு ஒரு மணவாழ்வு ஏற்படுவதில் தடை, சமூகத்தில் சகப் பெண்ணைப் போல்மற்றவர்கள் முன் உலாவி வரத் தடை. அவருக்கு முன் பின் பிறந்த சகோதரிகளின் வாழ்வு கேள்விக் குறி, மன உளைச்சல், உடல் உளைச்சல் என்று தனது ஒரு நொடி சுகத்திற்காக எந்தவித பாவமும் செய்யாத அந்த பெண்ணிற்கு இவ்வளவு பெரிய தண்டனை எதனால் என்று சிந்திகின்றனாரா இந்த மனித மிருகங்கள்??? ஐய்ந்தறிவு மிருகங்கள் கூட தன் இனத்தை இரக்கத்தோடும், அரவணைப்போடும் பார்க்கின்றனவே, அதன் அறிவுக் கூட ஆறறிவு படைத்த மனிதனுக்கு இல்லையே!!! பெண்ணாக பிறந்தது எங்கள் குற்றமா??? இல்லை பெற்றெடுத்த பெண்ணாகிய எங்கள் தாயின் குற்றமா??? :((((((((((((((((
என்ன தண்டனை இவர்களுக்கு உகந்தது!!!! :
பலவந்த பலாத்காரத்துக்கு இஸ்லாம் கூறும் தண்டனை இவ்விடத்தில் நினைவு கூறுவது உகந்தது:
நபி (ஸல்) தண்டனை காலத்தில் ஒரு முறை பெண் ஒருத்தி ஒருவனால் பலவந்தமாக கற்பழிக்கப் படுகிறாள். பிறகு அவள் தன்னை கற்பழித்தவனை மக்கள் முன் அடையாளம் கூறியவுடன் மக்கள் அவனை கைது அந்த பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கூட்டிக் கொண்டு போகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பெண்ணை நோக்கி “இங்கிருந்து செல், அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்” என்று கூறிய பின்பு கற்பழித்தவனை நோக்கி “இவனை கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று கூறினார். அறிவிப்பவர் வைல் இப்னு ஹுஜ்ர், நூல்: திர்மிதி மற்றும் அபு தாவுத்.
குற்றம் நிருபிக்கப் பட்ட நிலையில் தண்டனை என்பது குற்றவாளிகளுக்கு உடனடியாக நிகழ்த்தாமல் காலம் தாழ்த்துவது பாதிக்கப்பட்டவர்களுக்கு காட்டும் அநீதி! பாதிக்கப்பட்டவருக்கும், பொதுமக்களுக்கும் செய்யப்படும் பச்சை துரோகம்!
எந்த மதம் (இஸ்லாம், இந்து, கிறிஸ்டியன்) கூறினால் என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் அதை கையாள்வதில் இங்கு நாம் மத வெறியை கையாளாமல் மனித நேயத்துடன் மற்றவர்களுக்கு குற்றம் செய்ய அச்சத்தை தந்தால் சரிதான். இந்த பெண்ணுக்காக மட்டும் ஏன் குரல் கொடுக்குறீர்கள் என்பதல்ல எமது கேள்வி... அனைவருக்கும் சமமாக குரல் கொடுங்கள், டெல்லியில் நடந்தால் மட்டும் பலாத்காரம் அல்ல... ஹரியானாவில் நடந்தாலும் அது பலாத்காரம் தான். முஸ்லீம் என்றாலும் அவளும் பெண் தான்! தாழ்ந்த சாதியினர் என கூறப்பட்டாலும் அவர்களும் மனிதர்கள் தான்!!
இனியேனும் பாராபட்சம் காட்டாமல் நீதி செலுத்துங்கள்!
(நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. - குர்ஆன்
நன்றி - சகோதரி யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
No comments:
Post a Comment