கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ம் ஆண்டு டிசம்பர்.22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.
ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர், 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார்.
ராமானுஜத்தின் கணித அறிவிற்கு மதிப்பெண் கொடுத்தால் அதற்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன் என்று பிரிட்டன் கணித மேதை ஹார்டி கூறியுள்ளார். அந்த அளவிற்கு எளிமையாகவும், விரைவாகவும் கணித செய்முறைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ராமானுஜம்.
ஹார்டியின் அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றார் ராமானுஜர். அங்கு சென்ற சில நாட்களிலேயே ராமானுஜனின் திறமை, உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.
உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920ல் மறைந்தார்.
No comments:
Post a Comment