கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழில் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் கோங் சோ ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மலேசியாவில் வசித்து வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசு விரும்புகிறது. மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதம் பேர் தமிழர்கள்.
இந்த ஆண்டு சென்னையில் இருந்து 2,26,353 பயணிகள் மலேசியாவுக்கு கோலாலம்பூர் விமான நிலையம் வழியாக வந்துள்ளனர். கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு 2,07,697 பேர் சென்றுள்ளனர்.
சென்னைக்கு செல்லும் 90 சதவீதம் பயணிகளுக்கு ஆங்கிலத்தை விட தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. மலேசியாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பயணிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழில் தகவல்கள், அறிவிப்புகளை வெளியிட கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று கோலாலம்பூர் விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக சென்னைக்கு செல்லும் விமானங்கள் குறித்து அறிவிப்புகளை தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் தமிழில் பேச்சு திறன் கொண்டவர்கள் அதிகளவில் உள்ளதால் தமிழில் அறிவிப்புகள் வெளியிடத் தேவையான ஆட்கள் கிடைப்பதில் எந்த சிரமும் ஏற்படாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment