14 December 2011

கேரளா சொல்வது போல முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை-சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவின் விவரம்


டெல்லி:கேரள அரசு கூறுவதைப் போல முல்லைப் பெரியாறு அணைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.எனவே அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை. 136 அடி நீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்களை நேற்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனக் குழு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்:

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய "அதிகாரமளிக்கப்பட்ட குழு' அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆய்வு அறிக்கைகளை அந்தக் குழுவினர் எங்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கேரள அரசு குறிப்பிடும்படி நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அக்குழுவினர் முறையிட்டிருப்பார்கள். ஆகையால் கேரளம் குறிப்பிடும் ஆபத்து எதுவும் அணைக்குக் கிடையாது.

இருந்தாலும் கேரளத்தின் கோரிக்கையை ஏற்று 22, 23-ம் தேதிகளில் அணையை நிபுணர் குழுவினர் பார்வையிட உள்ளனர். கேரள அரசு தனது சந்தேகங்களை, அந்தக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் அந்தக் குழுவினர் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்.

அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரை அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 136.60 அடியாக இருந்ததாக பதிவாகியுள்ளது.இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீர் அளவு 136 அடிக்கு மேல் உயராமல் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments: