14 December 2011

அடுத்த ஆண்டில் தமிழக பள்ளிகளில் டிரைமெஸ்டர் முறை- அரசாணை வெளியீடு


சென்னை: அடுத்த கல்வியாண்டு முத்ல தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை டிரைமெஸ்டர் தேர்வு முறை பின்பற்றப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது,

பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் முப்பருவ தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

2012-2013 கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை இந்த முறை நடைமுறைக்கு வருகிறது. மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது.

மூன்று புத்தகங்கள்

முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும். மேலும் ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தொடர்மதிப்பீட்டு முறைகள்

இதற்காக தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 2013-2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும்.

முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள். ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும் பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டுவரை மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று திமுக ஆட்சி காலத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க முப்பருவ முறையை தற்போதய அரசு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கல்வி முறை என்றாலும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும் இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய வகையாக இருந்தால் சரிதான் என்கின்றனர் பெற்றோர்கள்.

No comments: