தலைவாரி பூச்சூடி "டாடா' காண்பித்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள், சேலம் மாதையன்குட்டையைச் சேர்ந்த அப்பாவி அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் தன் பெண், அதே பள்ளி உடற்கல்வி ஆசிரியருடன் ஓடிப் போவாள், என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறப்பு வகுப்புக்காக சென்ற மகள், சென்ற இடம் தெரியவில்லை.
உடற்கல்வி ஆசிரியர் கடத்திவிட்டதாக, தந்தை போலீசில் புகார் செய்தார். ஆசிரியரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று (நவ.6) காலை 7.30 மணிக்கு, சென்றாய பெருமாள் கோயில் கரடுக்கு அழைத்துச் சென்று, மதியம் மேட்டூர் பஸ்சில் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அம்மாணவியே வேறொரு மொபைல் போனிலிருந்து, உறவினரிடம் பேசியுள்ளார். போலீஸ் விசாரணையில், அந்த போன் எண் சேலத்தைச் சேர்ந்த பஸ் கிளீனருக்கு சொந்தமானது தெரியவந்தது, ஆனால் தலைமறைவாகி விட்டார். கிளீனருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும், மாணவிக்கும் என்ன வகையான தொடர்பு, மாணவி எங்கே... என போலீசாரே குழம்பியுள்ளனர். பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானமும், வேதனையும் தரும் செயல் இது. இதற்காக தானா... மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கின்றனர்.
படிக்கும் வயதில், வாழ்க்கையை தொலைக்கும் இந்த கேடுகெட்ட காதல் தேவைதானா? பருவக்கோளாறைத் தாண்டிய வயதிலும், மாணவிகளிடம் "சில்மிஷ' சேட்டையில் ஈடுபடும் ஆசிரியர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டாமா? நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 13 வயதில் காதலைக் கற்றுத் தரும் சினிமாவும், எப்பொழுதும் கள்ளக்காதலை கற்றுத்தரும் "டிவி சீரியலும்' தான், இத்தகைய கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருவதாக, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், பெண்கள்.
ஜெ.நிஷாபேகம், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி, மதுரை:
பெண்கள் "டிவி' சீரியலே கதியென இருப்பதால், பிள்ளைகளும் அதைத் தான் பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கான பிரத்யேக சானலில் கூட, தவறான உறவுகளை சித்தரிக்கும் "அனிமேஷன்' காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன. புவியியல், நிலஅமைப்பு, உயிரினங்களைப் பற்றிய காட்சிகளை, யாரும் கண்டுகொள்வதே இல்லை. எது தவறோ... அதைநோக்கி வலியச் செல்கிறோம்.இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், பிள்ளைகளின் பேச்சை கேட்கக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் நலம் விசாரித்தால் கூட, வேறுவிதமான நேசம் என, மாணவிகள் தவறாக நினைக்கின்றனர். பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாணவிகளை தனியாக அழைத்துப் பேசுவது, தனியறையில் அமர்ந்து பேசுவதை, பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்
.
டாக்டர் கே.மகாலட்சுமி, மனநலம், அரசு மருத்துவமனை, திண்டுக்கல்:
ஆசிரியர்களை கண்டால், மாணவர்களிடம் பயம் இருந்த காலம் மாறி, தற்போது நட்புறவு ஏற்பட்டுள்ளது. அதுவே தவறுகளுக்கும் காரணமாகிறது. பொருந்தா உறவை சித்தரிக்கும் "டிவி' சீரியல்களை, பெண்கள் பார்க்கின்றனர். கூடவே பிள்ளைகளும் பார்த்து, மனதை கெடுத்துக் கொள்கின்றனர். அரைகுறையாக தங்களுக்கு தெரிந்ததை, தவறான பயன்படுத்துவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மாணவர்களிடம் பாலியல் கல்வியை தெளிவுபடுத்த வேண்டும். முதலில் சங்கடமாகத் தெரியும். உண்மை கசப்பாக இருந்தாலும், அதன்விளைவு இனிமையானதாக மாறிவிடும். தப்பு செய்ய மனம் வராது. சினிமாவுக்கு கூட "சென்சார்' உள்ளது. கள்ள உறவுகளை சித்தரிக்கும் "டிவி'க்கு மட்டும் "சென்சார்' இல்லை. நமது வீட்டில் இத்தகைய சீர்கேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவர்.
கே. பார்வதி, கல்வி மாவட்ட அதிகாரி, உத்தமபாளையம்:
ஆசிரியர்களால் ஏற்படும் பிரச்னைகளை தலைமை ஆசிரியர், கல்வித்துறைக்கு மாணவிகள் தெரிவிக்கலாம். மாணவிகளை எப்படி நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம், அடுத்து தான் கல்வி, என்பதை தலைமையாசிரியர் மூலம் விளக்கி வருகிறோம். மாணவியை தங்களது பிள்ளைகளைப் போல பாவிக்க வேண்டும். வகுப்பறை நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் தினமும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளி செல்லும் தனது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. வகுப்பறைகளில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் அறிந்து, பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.
என்.ஹேமாமாலினி (குடும்பதலைவி, ராமநாதபுரம்):
குருவுக்கும், சிஷ்யனுக்கும் உள்ள உறவு, இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு போன்றது. புனித உறவு கெட்டுப்போகாமல் ஆசிரியர் பேணிக்காக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, திருமணம் செய்வது அதிகரிக்கிறது. சமுதாயத்திற்கு ஒவ்வாத இச்செயல்களை மன்னிக்க முடியாது. கல்விச்சாலையில் குழந்தைகளின் நடத்தை மாற்றம் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும், நண்பனை போல யதார்த்தத்தை புரிய வைத்து, நல்வழி படுத்த வேண்டும்.
எஸ்.மீனாட்சி,(ஆசிரியை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி):
இன்றைய கால கட்டத்தில் சினிமா, "டிவி' மீடியாக்கள் மாணவர்களை சீரழித்து வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும்"தகாத' உறவு முறைக்கு இது ஒரு காரணம். வகுப்பறையில் ஒழுக்கத்திற்கு புறம்பாக நடக்கும் ஆசிரியர்களை தனியாக அழைத்து, கண்டிக்க வேண்டும். இது அவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் தேவையில்லா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியாக்களை புறக்கணிக்க வேண்டும். இது அவர்களை நல் வழிப்படுத்தும்,என்றார்.
ஏ.ரஜினி(பி.எஸ். சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர்,விருதுநகர்):
ஆசிரியர் என்பவர் மாணவர்களின் இரண்டாவது தாய். ஆனால் தற்போது சிலரிடம் இந்த நிலை இல்லை. தவறான வழியில் செல்லும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுத்தால் மனம் பண்படும். "டிவி', சினிமா தான், பெண்களை தவறாக சித்தரிக்கிறது. இதை பார்க்கும் ஆசிரியர்களும் மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். மாணவிகள் மனம் சலனப்பட்டால் கூட, குருவாய் நின்று வழிநடத்த வேண்டுமே தவிர, வழிமாறி அவமானத்தை தேடிச் செல்லக்கூடாது.
No comments:
Post a Comment