09 November 2011

கண்டிப்பான மேலதிகாரியை சமாளிக்கனுமா?



Boss
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது பழமொழி. அது அலுவலகச் சூழலுக்கும் பொருந்தும். எந்த பணி செய்தாலும், அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் விமர்சனம் செய்ய மேலதிகாரிகள் ரெடியாக இருப்பார்கள் சிறப்பான பணி என்று பிறர் பாராட்டும் பட்சத்தில் அந்த வெற்றியை தனதாக்கிக் கொள்வது அநேக மேலதிகாரிகளின் செயலாக உள்ளது. இந்த சூழலில் தமது உரிமை பறிக்கப்படுவதாக நினைக்கின்றனர் பலர்.

இத்தகைய இறுக்கமான சூழலில் பணி புரிவது, உங்களால் மட்டுமின்றி, பெரும்பாலான பணியாளர்களால் சகிக்க முடியாதுதான். இச்சூழல் உங்கள் பணிகளின் தரத்தைப் படிப்படியாக நாளடைவில் குறைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்களைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தும் ஒருவரோடு தொடர்ந்து பணி புரிய முடியாதுதான். ஆனால், சில கட்டாயத்தினால் அவருக்குக் கீழ் வேலை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு விடுகின்றீர்கள். சவாலாக நிற்கும் அலுவலக மேலதிகாரிகளை சமாளிக்க சில எளிய டிப்ஸ்.

திறமையின் மீது நம்பிக்கை

உங்கள் பணித்திறமையின் மீது உங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கவேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் பிறரால் உங்களை எளிதில் டாமினேட் செய்ய முடியாது. சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எளிதில் நீங்களே தீர்வுகாண முயலவேண்டும். எதற்கெடுத்தாலும் மேலதிகாரியை எதிர்பார்ப்பதனால்தான் அவர் உங்களை அடக்கியாள நினைப்பார்.

கடுமையான உங்கள் ‘பாஸ்’ உங்களுக்குக் கட்டளையிட வருவதற்கு முன், அவருடைய முகபாவங்களைக் குறிப்பால் உணர்ந்து, உங்களை அவரிடமிருந்து சற்றுத் தொலைவாகவே வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் மற்ற வேலைகளில் முனைப்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால், அவர் உங்களிடம் வருவதையேகூடத் தவிர்த்துக் கொள்ளலாம். இதைவிட பழமையான - இலகுவான முறை ஒன்று உள்ளது அது கட்டுபாடான மேலதிகாரியை உங்கள்மீது கட்டுப்பாடு விதிக்க விடக் கூடாது.

நேர விரயம் தவிர்க்கலாம்

எப்பொழுதுமே தான் செய்வதுதான் சரி என்பது மேலதிகாரிகளின் கருத்து. அத்தகைய எண்ணம் கொண்ட நபரிடம் விவாதம் செய்வது நேரவிரயம்தான். அடக்கியாளும் தன்மையுடைய மேலதிகாரியுடன் தர்க்கம் செய்வது, நம் நேரத்தை வீணடிப்பதாகும். தர்க்கம் தொடர்ந்தால், அதற்கு முடிவே இல்லாமலாகி, இறுதியில் அவருடைய அதிகாரமே நிலைபெறும் அளவுக்குப் போய்விடும். அவருக்கு எதிராகச் சவால் விட்டால், அதுவே பெரிய ஆபத்தானதாகி, உங்களுடன் அவர் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் முன்வர மாட்டார்.

தேவையற்ற விவாதம் வேண்டாம்

இருவருக்கிடையே மோதல் ஏற்படும் சூழலில், நீங்கள் உங்களைக் குறையற்றவராக வாதிட முற்பட்டால், இந்த டாமினேசன் பாஸ் உங்களை அடக்கி ஒடுக்கப் முனைவார், இதானல் அவருடைய வலிமைதான் கூடும். எனவே, சற்றே நிதானிப்பது உங்களுக்கு நல்லது. உங்களைக் குறை கூறித் தாழ்த்த முற்பட்டாலும் அச்சுறுத்தினாலும், அதனால் நீங்கள் பாதிக்கப்படப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தாதீர்கள். இந்த உங்களின் நிதானம், அவரை முட்டாளாக்கும்; அல்லது, அவரே தனது போக்கை மாற்றிக்கொள்வார்.

வெற்றி பெற வழி

மேலதிகாரி கூறுவது சரிதான் என்று காட்டிக்கொள்வதே நாம் வெற்றி பெற ஓர் எளிதான வழி என்கின்றனர் உளவியலாளர்கள். ஏனெனில் எந்த ஒரு மேலதிகாரியுமே தான் கூறுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்றுதான் விரும்புவார். அவர் கூறுவதைச் செவி தாழ்த்திக் கேட்பதுவே, இந்தப் போராட்டத்தில் பாதி வெற்றி கிட்டியதாகும். செயல்பாட்டுத் திட்டங்களில் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக அவருக்கே விட்டுக்கொடுக்க வேண்டும் ‘இல்லை, முடியாது, சாத்தியமில்லை’ என்பவை போன்ற சொற்களை அவர் உங்களிடமிருந்து வருவதை அவர் விரும்பமாட்டார் என்பதால், அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையானதும் தவிர்க்க முடியாததும் ஒன்றே ஒன்றுதான். அதுதான் - தன்னடக்கம்.

அச்ச உணர்வே அடிப்படை

உங்களுடைய திறமையை ஒப்புக்கொண்டால் எங்கே மேலதிகாரியை முந்தி சென்றுவிடுவீர்களோ என்ற அச்சம் எல்லா அதிகாரிகளுக்கும் வருவது இயற்கை. எனவே கெடுபிடியான மேலதிகாரியின் செயல்பாடுகள் அனைத்தும், அவரிடத்தில் உள்ள அச்சத்தினாலும் ஆத்திரத்தினாலும் பாதுகாப்பற்ற தன்மையினாலுமே வெளிப்படுகின்றன என்பதை நீங்கள் மனத்தில் பதிய வைக்கவேண்டும். தன்னைப் பாதுகாக்கவே அவர் பிறரை அடக்கியாள முற்படுகிறார் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் கண்டிப்பான மேலதிகாரியை எளிதில் சமாளிக்க முடியும்

No comments: