07 November 2012

வரலாறு படைத்தார் பாரக் ஒபாமா!.. அமெரிக்காவில் பெரும் கொண்டாட்டம்!


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் பாரக் ஒபாமா.

நேற்று நடந்த வாக்குப் பதிவில் அவருக்கு கிட்டத்தட்ட 300 வாக்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவர் அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ராம்னிக்கு இதுவரை 203 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து இருமுறை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை. அந்த வகையில் மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான புகழை ஒபாமா பெற்றுவிட்டதாக அமெரிக்க மீடியா வர்ணித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் முறை வித்தியாசமானது. பரந்துபட்ட நிலப்பரப்பு என்பதால், அங்கு நேர வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் வட முனையான அலாஸ்காவுக்கும் கிழக்கு முனையான ஹவாயிக்கும் 6 மணிநேர வித்தியாசம் உண்டு.


கிழக்கில் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும்போது, மேற்கு மற்றும் வடக்கில் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது!

கிழக்கு மாகாணங்களில் ராம்னி ஆரம்ப வெற்றியைப் பெற்று வந்தார். ஆனால் நேரம் செல்லச் செல்ல, ஒபாமா வெற்றிப் பாதைக்கு வந்துவிட்டார்.

மேற்குப் பகுதியில் வாக்குப் பதிவு முடிந்த கையோடு எண்ணிக்கையை ஆரம்பித்துவிட்டனர். கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு முடிந்து எண்ணிக்கை நிலவரம் தெரிந்ததுமே ஒபாமா வெற்றி என சிபிஎஸ், என்பிசி சேனல்கள் அறிவித்துவிட்டன. ராம்னி ஆதரவு சேனல் எனப்பட்ட ஃபாக்ஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது ஒபாமாதான் அதிபர் என்று.


பாப்புலர் வாக்குகள் எனும் பிரிவில் ஒபாவுக்கும் ராம்னிக்கும் 1 சதவீத வித்தியாசமிருந்தது. ஆனால் அதிபராகத் தேவையான வாக்குகள் 270. இதில் ஒபாமா இதுவரை 280 வாக்குகள் வரை பெற்றுவிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னிக்கு 203 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.

இன்னும் சில மாகாண வாக்குகள் வரவேண்டியுள்ளன. அவற்றையும் சேர்த்தால் ஒபாமாவுக்கு 300 வாக்குகள் வரை கிடைக்கலாம் என சேனல்கள் அறிவித்திருந்தன.

ஆனால் ஒபாமாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதால், அவர் வெள்ளை மாளிகையில் அடுத்த நான்காண்டுகள் அமர்வதை அனைத்து தரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன.

அதிபர் ஒபாமாவும், "இன்னும் நான்காண்டுகள் வெள்ளை மாளிகை வாசம்.. நன்றி வாக்காளர்களே" என செய்தி விடுத்தார்.

அவரது செய்தி வெளியான ஒரு நிமிடத்துக்குள் உலகமெங்கும் 1 லட்சத்துக்கும் அதிகமான முறை அதனை மறுபதிப்பு செய்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் 88000 முறை மறுவெளியீடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொண்டாட்டம்

ஒபாமா முன்னிலை என்று செய்தி வெளியாக வெளியாக கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன அமெரிக்காவில். அவர் வெற்றி பெற்றார் என்பதை அறிவித்ததும் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் மக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தெருக்களில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

-அமெரிக்க தேர்தல் ஸ்பெஷல்

No comments: