வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், இந்தியாவின் லோக்கல் அரசியலை விட ஏக பரபரப்புடன், அமெரிக்க அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
ராம்னி வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிலரும், ஒபாமாவின் வெற்றி நிச்சயக்கப்பட்டு விட்டது என பெரும்பான்மையினரும் நம்பத் தொடங்கியுள்ளனர்.
கடைசி கட்ட கருத்துக்கணிப்புகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், ராம்னி தரப்பு டல்லடிக்க ஆரம்பித்துள்ளது. சான்டி புயலில் ஒபாமாவின் சின்சியரான நடவடிக்கைகள், கட்சி சார்பற்றவர்களின் வாக்குகளை அவர் பக்கம் திருப்பியுள்ளது.
நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க்
இரண்டு முறை குடியரசுக் கட்சி சார்பிலும், மூன்றாவது தடவை சுயேட்சையாகவும் நின்று வெற்றி பெற்ற நியூயார்க் நகரின் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2008 தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. சில விஷயங்களில் ஒத்த கருத்து இல்லையென்றாலும், எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒபாமாவின் தொலை நோக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான திட்டங்களுக்காக ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
பெரும் மரியாதைக்குரியரவாக திகழும் ப்ளூம்பெர்க்கின் ஆதரவு ஒபாமாவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் ஒபாமாவை முன்மொழிந்துள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், சிகாகோ ட்ரிப்யூன்ஸ் ஆகிய முண்ணனி பத்திரிக்கைகள் ஒபாமாவுக்கு ஆதரவாக இறங்கிவிட்டன.
மயாமி ஹெரால்டு பத்திரிக்கையின் ஆதரவு, கடும்போட்டியுள்ள ஃப்ளோரிடாவில் ஒபாமாவுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ராம்னியின் மர்மன் மத மக்கள் பெருவாரியாக வசிக்கும் யுட்டாவில், சால்ட் லேக் ட்ரிப்யூன் பத்திரிகையின் ஒபாமா ஆதரவு, ராம்னி குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
தேசிய அளவில் யார் அதிக வாக்குகள் பெற்றாலும், அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் மாநில அளவிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. கடும்போட்டி நிலவும் ஒஹயோ, ஐயோவா, விஸ்கான்ஸின், வர்ஜினியா, ஃப்ளோரிடா, நெவடா, கொலோராடோ, நியூ ஹாம்ஸ்ஷையர் ஆகிய எட்டு மாநிலங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க உள்ளன.
ஒபாமா முண்ணனியில் இருக்கும் ஒஹயோ, விஸ்கான்ஸின், ஐயோவா மாநிலங்களில் வெற்றி கிடைத்தாலே அவரது வெற்றி உறுதியாகி விடுகிறது. ஏனைய மாநிலங்களில இருவருக்கும் கடும் போட்டி என்றே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கட்சி சாராதவர்களின் வாக்குகளே அதிபரை தேர்தெடுக்கும் என்ற சூழல் நிலவும் வேளையில், அமெரிக்காவில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்கள், கட்சி சார்பற்ற பிரபலங்களிடம் பேசினோம்.
"ஒபாமாவுக்கு மாற்று ராம்னி என்ற நிலை இல்லாத்தால்தான் தேர்தல் போட்டி கடுமையாக தெரிகிறது. ராம்னி ஏன் வெற்றி பெறவேண்டும் என்று ஆணித்தரமான கருத்துக்கள் உருவாகவில்லை. நல்ல பிஸினஸ்மேன் என்றாலும், தெளிவான மாற்று கொள்கைகளை அவர் முன் வைக்கவில்லை. முதல் விவாதத்தில் சற்று முன்னேற்றமாக தென்பட்டாலும், அடுத்தடுத்து நம்பிக்கை தரும் விதத்தில் அவர் தெளிவான கருத்துக்களை மக்கள் முன் வைக்கவில்லை.
ஒபாமா இன்னும் கூடுதலாக செயல்பட்டிருக்கமுடியும் என்று நம்பினாலும், கடுமையான நெருக்கடியில் பதவியேற்ற அவரது ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது" என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது.
நமது கருத்து சேகரிப்புகளை இருவிதமாகத்தான் பிரிக்க முடிந்தது. எதனால் ஒபாமா வெற்றி பெறுவார் அல்லது ராம்னி ஏன் வெற்றி பெற முடியாது என இங்கே தொகுத்திருக்கிறோம்...
ராம்னிக்கு பாதகங்கள் ஐந்து
1. பதினெட்டு மாதங்களாக ராம்னியின் பேச்சுக்களைப் பாருங்கள்... 'அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒபாமா தான் காரணம்' என்ற ரீதியில் குறை சொல்லி மக்களை பயமூட்டும் விதமாகத்தான் அவர் பேசி வருகிறார்.
வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பது உண்மைதான். அதை ஒபாமாவும் மறுக்கவில்லை. ஆனால் இப்பிரச்சினைக்கு ஒபாமா தான் பொறுப்பு என்பதை நடு நிலையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. முந்தைய 8 ஆண்டு புஷ் ஆட்சிதான் நிலைமை சீரழிந்த்தற்கு காரணம் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஒபாமாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் போதாது என்றால், அதற்குரிய மாற்று வழியை முன்வைக்க வேண்டுமல்லவா? அதை செய்யாமல் எதிர்மறையான பிரச்சாரங்கள் செய்ததன் விளைவாக நடு நிலையாளர்கள் ராம்னியிடமிருந்து விலகிவிட்டனர். தவிர அமெரிக்கா குடியரசுக்கட்சியினருக்கு மட்டுமே சொந்தம் என்ற ரீதியில், சிறுபான்மையினரின் ஆதரவை முற்றிலும் இழந்து விட்டார். குடியேற்ற உரிமை சட்ட சீர்திருத்த்தில் அவருடைய நிலையினால், ஹிஸ்பானிக் இன மக்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.
2. ராம்னி அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘அமெரிக்காவை நம்புகிறேன்' என்பதாகும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரது தொழில்கள், முதலீடுகள் எல்லாமும் அயல் நாட்டிலேதான் இருக்கின்றன. அமெரிக்காவை நம்புகிறேன் என்று சொல்லிவிட்டு, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்துள்ளவரை, நடுத்தர மக்களால் நம்பிக்கையோடு பார்க்க முடியவில்லை. அமெரிக்க உற்பத்தி துறை வேலைகள் சீனாவுக்கு சென்றுவிட்டன என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு, சீனாவுக்கு தனது நிறுவன்ங்களின் வேலையை அனுப்பிய ராம்னி மீது நம்பிக்கை எப்படி வரும்?
3. ராம்னியின் தொழில்களும் வருமான வரியும்- இருபத்தைந்து வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி என்று எனக்கு தெரியும் எனபதுதான் அவரது பிரதான வாதம்.
பணத்தைப் போட்டு ஒரு நிறுவனத்தை வாங்குவது. அதனை மற்றவரிடம் விற்று லாபம சம்பாதிப்பது என்ற 'முதலிடு செய்வது'. மட்டுமே அவரது தொழில்களாக இருந்திருக்கின்றன. இன்று வரையிலும் இன்ன தொழில் தொடங்கி இத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளேன் என்று அவரால் ஒரு நிறுவனத்தை கூட அடையாளம் காட்டமுடியவில்லை.
மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அப்படிப்பட்ட எந்த நிறுவனத்தையும் ராம்னி தொடங்கவில்லை. அதனால் இருபத்தைந்து ஆண்டுகள் தொழில் செய்தாலும் புதிய வேலைகளை உருவாக்குவதில் அவருக்கும் அனுபவம் இல்லை.
4. மேலும் அவரது வருமான வரி சதவீதம், சாமானியனை விட குறைவாக 14 சதவீதம் மட்டுமே. பொதுவாக அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுபவர்கள் கடந்த பத்து வருட வருமான வரி விவரங்களை வெளியிடுவர். ராம்னியின் தந்தையே அதை பின்பற்றி வெளியிட்டுள்ளார். ஆனால் ராம்னி கடைசி இரண்டு வருடங்களுக்கு மட்டுமே வெளியிட்டுள்ளார். முந்தைய வரிவிவரம் வெளிவந்தால், அவரது தொழில் திறமை, நேர்மையின்மை அம்பலமாகிவிடும் என்ற பயத்தினால் வெளியிடவில்லை.
இதன் மூலம் ராம்னி வெளிப்படையானவர் அல்ல ரகசியமானவர் என்ற முத்திரையும் கிடைத்துள்ளது.
5. வாக்குறுதிகளை அள்ளிவிடும் ராம்னி, அதை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டால், ஆட்சி முதலில் வரட்டும் அப்புறம் சொல்கிறேன் என்று விஜயகாந்திற்கே சவால் விடும் வகையில் பேசுகிறார். இது அவர் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 12 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவேன் என்கிறார். அப்படியென்றால் மாதத்திற்கு இரண்டரை லட்சம் புதிய வேலைகள். தற்போதைய சூழலில் அது சாத்தியமே அல்ல என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 ட்ரில்லியன் கூடுதல் வரிவிலக்கு, 2 மில்லியன் கூடுதல் ராணுவச்செலவு என செலவுகளை அதிகரிக்கிறாரே தவிர அதை எப்படி ஈடுகட்டப்போகிறேன் என்று சொல்ல முடியவில்லை. ஒருவேளை அவர் சொன்னதை செய்ய நேர்ந்தால், அது நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி உயர்வையே ஏற்படுத்தும்.
தெளிவற்ற கொள்கைகள், அடிக்கடி நிலையை மாற்றிக்கொள்ளுதல் போன்றவைகளால், எதைச் சொல்லியாவது ஆட்சிக்கு வந்து விடவேண்டும் என்ற பேராசைதான் வெளிப்படையாக தெரிகிறதே தவிர ஒபாமாவுக்கு மாற்று ராம்னி என்ற கருத்து ஏற்படவில்லை. அதற்கான முழுப்பொறுப்பும் ராம்னியையே சாரும்.
ஒபாமாவின் சாதகங்கள் ஐந்து
1. ஒபாமா ஆட்சிக்கு வந்த போது நாள் தோறும் அமெரிக்கர்கள் வேலைகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தனர். அதைத் தடுத்து நிறுத்துவதுதான் அவருடைய தலையாய கடமையாக இருந்த்து. சீர்கெட்ட வங்கி நிர்வாகம், அதனால் பாதிப்படைந்த வீட்டுத்துறை, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி என பன்முனை தாக்குதல்களை அவர் சமாளிக்க வேண்டியிருந்த்து.
முந்தைய 8 ஆண்டுகள் புஷ் ஆட்சியில் எடுத்த பல முடிவுகளை மாற்றி, ஒபாமா எடுத்த நடவடிக்கைகளால நிலைமை மோசமடைவது தடுக்கப்பட்டு, வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. இரண்டரை ஆண்டுகளில் ஐந்து மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன. இதே கணக்கு தொடர்ந்தால் அடுத்த நான்காண்டுகளில் எட்டு மில்லியன் கூடுதல் வேலைகள் நிச்சயம். புதிய துறைகளின் முன்னேற்றம் என்றால் இன்னும் அதிக்மாக சாத்தியம் இருக்கிறது.
2. வெளியுறவுக் கொள்கைகளில் ஒபாமாவின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர், ஆஃப்கானிஸ்தானிலும் முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்துள்ளார். அதே சமயத்தில் ஒசாமா பின்லேடனை ஒழித்து கட்டவும் மறக்கவில்லை. போர் செலவுகளை அதிகம் ஏற்படுத்தாமல் மத்திய கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுத்தார். மத்திய ஆசிய மற்றும் ஏனைய உலக் நாடுகளுடன் நல்லுறவு வலுப்பட்டது. ஒபாமா ஆட்சியில், அமெரிக்க்ர்களின் மீதான வெறுப்பு உலக அளவில் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து இதே அணுகுமுறையும் கால அவகாசமும் தேவைப்படுகிறது.
3. நடுத்தர வர்க்க மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் முழுமையாக உணர்ந்தவராக ஒபாமா இருக்கிறார். காப்பீடு திட்ட சீரமைப்பு, புதிய திட்டங்கள் அனைத்து அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்கிறது. நெடுங்காலமாகஇதுவரை எந்த அதிபரும் செய்யத் துணியாத செயல் அது.
4. கல்வி சீரமைப்பு, புதிய தொழில்களை நோக்கி செயல்திட்டம் போன்றவை உடனடித் தேவகைகளுக்கு மட்டுமல்ல, அடுத்த நூற்றாண்டுவரையிலும் தொலை நோக்கு கொண்டதாக இருக்கிறது. அதிபராக பதவியேற்ற புதிதில் பெங்களூருக்கு வேலை செல்லக்கூடாது என்று கூறியவர், சில வேலைகள் அமெரிக்காவுக்கு திரும்பாது என்ற உண்மையை தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
கம்ப்யூட்டர் துறை உள்ளிட்ட புதிய தொழில் நுட்ப வேலைகளுக்கு அமெரிக்கர்கள் தயாராக இல்லாததால்தான் அவை வெளிநாடுகளுக்கு செல்கின்றன என்ற உண்மையை முற்றாக உணர்ந்துள்ள அவர், அமெரிக்கர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். உடனடி தீர்வு கொடுக்காத நிலையிலும், எதிர்காலத்தை கருதி அவரின் தொலை நோக்கு பார்வையை இங்கே கவனிக்க வேண்டும்.
5. முக்கியமாக அவரது நம்பகத்தன்மை, கடின உழைப்பு, நேர்மை, வெளிப்படையான செயல்பாடுகள் அதிபருக்குரிய தகுதிகளாக கருதப்படுகிறது, இந்த அம்சங்களில் ஒபாமா பன்மடங்கு உயர்ந்தவராக தெரிகிறார். ஏற்கனவே நான்கு ஆண்டுகள் அவரது அணுகுமுறையை பார்த்து வரும் நடுநிலையாளர்களுக்கு, ராம்னியை விட ஒபாமாவே தொடர்வது அமெரிக்காவின் மதிப்பை தக்கவைக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒபாமா மீது ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஊதாரித்தனமான செலவீனங்களோ வெளிவரவில்லை. வெள்ளை மாளிகையில் அவரது இருப்பிடத்திற்கான மாற்றியமைக்கும் செலவைக்கூட அவரே ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளன். மக்களோடு மக்களாக வலம் வரும் ஒபாமா நடுத்தர வர்க்கத்தின் நண்பனாக தெரிகிறார்.. ராம்னியோ சந்தேகத்திற்குரியவராக தெரிகிறார். இதுவும் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இன்னும் 48 மணி நேரம் மட்டுமே...
நாம் தொடர்பு கொண்ட கட்சி சாராதவர்களின் கருத்துக்களின் அலசல்கள் ஒரு புறம் இருக்கையில், இன்னும் மூன்று நாட்களில் ஒட்டு மொத்த அமெரிக்கர்களின் விருப்பத்திற்குரியவர் யார் என்று தெரியப்போகிறது.
2000 ஆம் ஆண்டைப்போல், இந்த தேர்தலின் முடிவும் சில நூறு வாக்குகளில் அமைந்தாலும் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் ஒபாமாவும், ராம்னியும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
கடைசியில் வந்த தகவல் படி, ஃப்ளோரிடாவில் ஆரம்பித்துள்ள 'முன் வாக்கு பதிவு'க்கு கூட்டம் அலைமோதுகிறது. நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். பெரும்பாலும் நடுத்தர, ஏழை வாக்காளர்களே 'முன் வாக்கு பதிவில்' கலந்து கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஒபாமாவுக்கு தான் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன!
-தமிழ். ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்