15 September 2012

நபிகளை அவமதிக்கும் படம்: சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு

சென்னை: அமெரிக்காவில் தயாரான ஒரு வீடியோ படம் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டித்து சென்னையில் முஸ்லிம் அமைப்புகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.
இதில் திடீரென்று ஏற்பட்ட வன்முறை காரணமாக அமெரிக்க தூதரக அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது. அங்கிருந்த நான்கு போலீஸ் பூத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
அமெரிக்காவில் ஷாம்பெஷிலி என்ற திரைப்பட இயக்குனரும், டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகரும் சேர்ந்து 'இன்னொசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ப படத்தை எடுத்துள்ளனர். அதன் 13 நிமிட வீடியோ காட்சி யுட்யூபில் வெளியாகியுள்ளது.

இதில் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்துள்ளனது. மேலும் இஸ்லாமிய சமூகத்தினரை புண்படுத்தும் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் உலகம் முழுவதும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினரும், இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
தடையை மீறி போராட்டம்
ஆனால் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்த இரு அமைப்புகளும் அறிவித்து இருந்தன. நேற்று மாலை 4 மணி அளவில் இந்த இரு அமைப்பைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள், அண்ணாசாலை-பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் சர்ச் பார்க் கான்வென்ட் அருகே கூடி நின்றனர். இந்திய தவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ராதாகிருஷ்ணன் சாலையில் மியூசிக் அகாடமி அருகே கூடினார்கள். முதலில் அமைதியாக கோஷம் போட்டபடி எதிர்ப்புக் காட்டினர்.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தாம்பரம் பகுதியில் இருந்து ஏராளமான பேர் வேன்களில் வந்தனர். அவர்கள் அண்ணாமேம்பாலம் வழியாக வந்தனர். மேம்பாலத்தில் வந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வேன்கள் நின்றன. உடனே வேன்களில் இருந்தவர்கள், கீழே இறங்கி மேம்பாலம் கீழே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள். அப்போது பயங்கர வன்முறை வெடித்தது.
கூட்டத்தைப் பார்த்ததும் ஏற்கெனவே இருந்தவர்கள் மேலும் அதிக ஆவேசத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
அமெரிக்க தூதரக அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. தூதரக பாதுகாப்புக்கு நின்ற போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன
தூதரகத்தை சுற்றி 4 நவீன வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் இருந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் அவற்றை பெரிய கற்களை போட்டு தாக்கி அடித்து நொறுக்கி விட்டனர். சூரிய வெப்பத்தால் செயல்பட்ட போலீஸ்பூத் ஒன்றை தலை கீழாக தூக்கிப்போட்டனர். தூதரகத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அனைத்து உயரக நவீன கண்காணிப்பு கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தூதரகத்தின் பக்கவாட்டு வாசல் பகுதியும், முன்பக்க பகுதியும் சேதப்படுத்தப்பட்டன. அமெரிக்க கொடியும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

போலீஸ் படை வருகை
அதன்பிறகு போலீஸ் படையினர் இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர்கள் புகழேந்தி, பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்தனர். போலீஸ் படை கூடுதலாக வந்தவுடன், தாக்குதல் நடத்தியவர்கள் கோஷம் போட்டபடியே அண்ணாசாலையில் ஊர்வலமாக சென்றனர். ஒருபக்கம் தாக்குதல் நடந்தாலும், தாக்குதல் நடத்தியவர்களுடன் வந்த சிலர் தடுத்தபடியும் இருந்தனர்.
அதன்பிறகு தாக்குதல் நடத்தியவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மாலை 5.30 மணி அளவில் போலீஸ் கமிஷனர் திரிபாதி அமெரிக்க தூதரக அலுவலகத்திற்கு வந்தார். தூதரக அலுவலகத்திற்குள் அவரும், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரனும் சென்றனர். சற்று நேரத்தில் இருவரும் தூதரக அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தனர்.
எதிர்பாராத விபத்து...
இதுகுறித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "எதிர்பாராமல் விபத்து போல இந்த சம்பவம் நடந்துவிட்டது. ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலீஸ்படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் வாகனங்களில் வந்தவர்கள் கல்வீசி தாக்கிவிட்டனர். அவர்களை கைது செய்துவிட்டோம். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது. தூதரக அதிகாரிகளிடம், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று உறுதி கூறியுள்ளேன்," என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் தாக்குதலால் திடீரென பெரும் போர்க்களப் பகுதி போல அண்ணா சாலைப் பகுதியே மாறிப் போனது. போக்குவரத்து முடங்கியது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் மிரண்டு போய் நின்றனர்.

No comments: