31 July 2012

குஜராத் அமைச்சர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி:முதல்வர் மோடி அரசுக்கு பின்னடைவு



ஆமதாபாத்:ஊழல் மற்றும் அமைச்சரவை முடிவை மீறி செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, குஜராத் மாநில மீன் வளத்துறை அமைச்சர் புரு÷ஷாத்தம் சோலங்கி மீது வழக்குத் தொடர, அம்மாநில கவர்னர் கமலா பெனிவால் அனுமதி அளித்துள்ளார். இது, முதல்வர் நரேந்திர மோடி அரசுக்கு, பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

குஜராத்தில், முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், மீன் வளத்துறை அமைச்சராக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. இவர், 2009ல் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்கினார். இந்த ஒப்பந்தம், ஆண்டு ஒன்றுக்கு, 2.4 கோடி ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஒப்பந்தத்தை டெண்டர் மூலம் விட்டால், 44 கோடி ரூபாய் பெறலாம் என, மதிப்பிடப்பட்டது. இதனால், 10 ஆண்டுக்கு குறைவான கட்டணத்திற்கு, மீன்பிடி ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம், மாநில அரசுக்கு இவர், 400 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

கடிதம் தாக்கல்:
இவர் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, மாராடியா என்பவர், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அமைச்சர் சோலங்கி மீது வழக்குத் தொடர அனுமதி தர முடியாது என, முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்து விட்டது. இதனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை கவர்னர் எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் கடந்த ஆறாம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், மாராடியா தொடர்ந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் சோனி ஆகியோர் அடங்கிய, உயர் நீதிமன்ற பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் புரு÷ஷாத்தம் சோலங்கி மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ள கவர்னரின் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி:
கவர்னரின் அனுமதி கடிதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மாராடியாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சோலங்கி மீது வழக்குத் தொடர, கவர்னர் அனுமதி அளித்துள்ளதால், மாராடியா, இனி போலீசிலோ அல்லது உரிய நீதிமன்றத்திலோ, அவருக்கு எதிராக புகார் கொடுக்கலாம்.

மோதல்:
ஏற்கனவே, மாநில அரசின் பரிந்துரையை மீறி, லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியை நியமித்த விவகாரத்தில், குஜராத் கவர்னர் கமலா பெனிவாலுக்கும், முதல்வர் நரேந்திர மோடி அரசுக்கும் இடையே மோதல் உருவாகியிருந்த நிலையில், தற்போது, அமைச்சரவை முடிவை மீறி, அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடர, கவர்னர் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

No comments: