16 July 2012

ஒரு பக்கம் வறுமை, மறுபக்கம் வீண் விரயம்.


மத்திய அரசின் உணவுக் கிட்டங்களில் அதிகபட்சமாக 63 மில்லியன் டன் உணவு தானியங்களையே சேமித்து வைக்க முடியும். இப்போது இந்தியாவிடம் 82 மில்லியன் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளது. இதனால் சுமார் 19 மில்லியன் டன் உணவு தானியம் தார்பாலின் கூட போட்டு பாதுகாக்கப்படாமல் மழையிலும் வெயிலிலும் நனைந்து, வறண்டு வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை எலிகள், பூச்சிகள் திண்று பல்கிப் பெருகி வருகின்றன.

- மத்திய அரசிடம் கோதுமை கையிருப்பு மிக அதிகமாக உள்ளதால் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால், கோதுமையை பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது.

- இந்தியாவில் பசிக் கொடுமை, ஊட்டச் சத்து இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 3,000.
இவை மூன்றுமே கடந்த இரு வாரங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள். ஆனால், இந்த மூன்றையும் ஒன்றொடு ஒன்று தொடர்புபடுத்திப் பார்த்தால், நமது அரசும் அதிகாரிகளும் எவ்வளவு தூரத்துக்கு நாட்டை மிக கேவலமாக நிர்வகித்து வருகின்றனர் என்பது புலப்படும்.

இந்தியாவில் உணவு உற்பத்தி குறையவில்லை, அதே நேரத்தில் விலைவாசி விண்ணைத் தாண்டி போய்க் கொண்டுள்ளது. காரணம், அரிசி, பருப்பு, சர்க்கரையில் ஆரம்பித்து அனைத்தையும் ஆன்லைனில் யூக வர்த்தகத்துக்கு அனுமதிக்கிறார்கள்.

மேலும் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பல அடுக்கு புரோக்கர்கள். விவசாயிகளிடமிருந்து பொது மக்களுக்கு ஒரு பொருள் வந்து சேருவதற்குள் அதன் விலை 4 முதல் 8 மடங்காகிவிடுகிறது.

அடுத்தது பதுக்கல் கும்பல்கள். இவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிட்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இணையான இன்னொரு 'parallel economy' நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந் நிலையில் இந்த ஆண்டு பருவ மழை வேறு பொய்த்துவிட்டது. ஜூலை இரண்டாவது வாரம் வரை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைவான மழையே பெய்திருக்கிறது. இதன் பாதிப்பை நாம் உணர 3 மாதங்கள் ஆகும். அதாவது, மழையில்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து, விலைகள் அடுத்த 3 மாதத்தில் மேலும் உயரும்.

ஆனால், அடுத்த 3 மாதத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது இப்போதே யூகித்துவிட்ட ஆன்லைன் வர்த்தகக் கும்பல்கள், இப்போதே தங்களது வேலைகளைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர். சில குறிப்பிட்ட வகை உணவு தானியங்கள், அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் விலைவாசி உயர்வோடு நேரடியாகத் தொடர்புடைய இன்னொரு பொருள் பெட்ரோலிய எண்ணெய். டீசல் விலை உயர்ந்தால் லாரி, வேன் வாடகைகள் உயர்ந்து உணவுப் பொருட்களின் விலை தானாகவே உயரும்.
ஆனால், இந்தியா போன்ற ஒரு தேசத்தில் பெட்ரோல், டீசல் மீது இவ்வளவு வரிகள் தேவை தானா?. நீங்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் பாதி தான் உண்மையான விலை. மற்றதெல்லாமே கலால் வரி, சுங்க வரி, விற்பனை வரி என ஏகப்பட்ட வரிகளால் வரும் விலை.

கூடவே கல்வி வரி, சாலை வரி என்று லிட்டருக்கு 1 ரூபாய், 2 ரூபாய் வாங்குகிறார்கள். அதாவது பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பள்ளிக்கூடம் கட்டுகிறார்களாம். ரோடு போடுகிறார்களாம்..
ஆனால், டீசல் விலை மீதான வரிகளை மத்திய அரசு குறைத்தால் அது விலைவாசியைக் கட்டுப்படுத்துமே.. அதை ஏன் மத்திய அரசும், மாநில அரசும் செய்வதில்லை..
ஆக விலைவாசி உயர்வுக்கு மழை எவ்வளவு பெரிய காரணமோ அதை விட முக்கியக் காரணமாக இருப்பது மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளும், வரி விதிப்புகளும் தான்.

அது மட்டுமல்ல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கீழே சரிய ஆரம்பித்த உடனேயே சீனா ஒரு வேலையைச் செய்தது. அதாவது, விலை குறைவாக இருக்கும்போதே அதை முடிந்த அளவுக்கு வாங்கி ரிசர்வ் வைத்துக் கொண்டுவிட்டது. அந்த அளவுக்கு அந்த நாட்டிடம் கிட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. மிகவும் சரியாகத் திட்டமிட்டு தன்னிடம் உள்ள டாலர்களை வீணாக்காமல், விலை குறைவாக இருக்கும்போதே கச்சா எண்ணெய்யை வாங்கி வைத்துக் கொண்டுவிட்டது.

ஆனால், நம்மிடம் டாலரும் இல்லை, கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க பெரிய அளவிலான அடிப்படைக் கட்டமைப்பும் இல்லை. இத்தனைக்கும் நமது பெட்ரோலியத் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நாடு நம் நாடு.
-ஏ.கே.கான்

No comments: