15 August 2011

நோன்பு இறைவன் வைக்கும் தேர்வு.


இந்த வாரப் பிரார்த்தனை “பேரண்டத்தின் அதிபதியாகிய என் இறைவனே, என் பாவங்கள் அனைத்தையும்
மன்னித்தருள்வாயாக”. (நபிமொழி)

“இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப் பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாய்த் திகழக் கூடும்.” (குர்ஆன் 2 : 183) திருக்குர்ஆனின் இந்த வசனத்திலிருந்து நம் மீது மட்டுமல்ல, நமக்கு முன்பிருந்தோர் மீதும் அதாவது முந்தைய நபிமார்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது எனத் தெரிய வருகிறது. அந்த அளவுக்கு இது மிக முக்கியமான மார்க்கக் கடமை ஆகும்.

நோன்பின் நோக்கம் என்ன?
இறைவனுக்கு அஞ்சி வாழ வேண்டும்;  எந்தச் சூழ்நிலையிலும் அவனுடைய கட்டளைக்கு மாறு செய்யக்கூடாது எனும் உன்னதமான ஆன்மிகப் பயிற்சியை அடியார்கள் பெறுவதே இதன் நோக்கமாகும்.
ரமலான் மாதம் முழுவதும் பகல் நேரங்களில் கண்டிப்பாக உண்ணக் கூடாது; தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாது என்பது இறைவனின் ஆணை.

ஆனால் யாரும் பார்க்காத சமயத்தில் நாம் சாப்பிட்டாலோ தண்ணீர் அருந்தினாலோ அது யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆனாலும் நாம் அப்படிச் செய்வதில்லை. மேலும் எவ்வளவுதான் வற்புறுத்தி எவ்வளவு சுவையான பண்டத்தை நமக்குக் கொடுத்தாலும் அதை நாம் கண்ணாலும் பார்ப்பதில்லை. ஏன்? இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; நாம் தவறு செய்தால் மறுமை நாளில் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. எனவே நாம் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்வதில்லை.
ஆனால் இறையச்சம் இல்லாதவர்கள் தம் விருப்பம்போல் நடப்பார்கள். அவர்களுக்கு மறுமையின் மீதும் நம்பிக்கை இருக்காது. இப்படிப்பட்டவர்கள் நோன்பு வைக்கவே மாட்டார்கள். அப்படியே வைத்தாலும் அதில் அலட்சியமாக இருப்பார்கள். நோன்பு வைத்துக் கொண்டே பொய் சொல்வார்கள்; கோள் மூட்டுவார்கள்; அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் இறையச்சம் இல்லாததுதான்.
அதனால்தான் இறைவன் நமக்கு நோன்பின் மூலமாக தேர்வு வைக்கிறான். இறைவனுக்கு அஞ்சி, இறைக் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பவர் யார், தான்தோன்றித்தனமாக நடப்பவர் யார் என்று இந்தத் தேர்வின் மூலம் தெரிந்துவிடும்.

இறைவன் வைக்கும் இந்த நோன்புத்  தேர்வில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இது உறுதி.

No comments: