சென்னை: சட்டசபைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொண்டு செல்வதற்காக ஆம்னி பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட, கோடிக்கணக்கான பணத்தை தனி நபராக விரட்டிச் சென்று பறிமுதல் செய்த திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு கல்பானா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஜெயலலிதா இன்று அவருக்கு வழங்கினார்.
சென்னையில் இன்று 65வது சுதந்திர தின விழா கோலாகலாகமாக கொண்டாடப்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். பின்னர் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் அவர் வழங்கினார்.
அதில் முக்கியமானது கல்பனா சாவ்லா விருது. தீரச் செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் விருது இது. இந்த ஆண்டுக்கான விருது திருச்சி வருவாய் கோட்டாட்சியரான சங்கீதாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதையும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் சங்கீதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கிக் கெளரவித்தார்.
ஆர்.டி.ஓ. சங்கீதா சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அதிகாரியாக அப்போது சங்கீதா செயல்பட்டார். அந்த சமயத்தில் ஒரு ஆம்னி பேருந்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பெருமளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக இரவு 2 மணியளவில் அதிகாரி சங்கீதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் போலீஸ் துணையைக் கூட நாடாமல் தனியாக அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று நிறுத்தினார். பின்னர் பேருந்தை மடக்கி தீவிரமாக தானே சோதனை போட்டார். அப்போது கிட்டத்தட்ட ரூ. 5 கோடி அளவுக்கு பெரும் பணம் சிக்கியது.
அந்தப் பணத்தை திமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர்தான் அனுப்பி வைத்ததாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரி சங்கீதாவின் செயல் அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது. துணிச்சலுடன் நள்ளிரவு நேரம் என்று கூட பார்க்காமல் தனியாக சென்று பஸ்சை மடக்கிப் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்த அவரது வீரம் பாராட்டப்பட்டது. அவருக்குத்தான் இன்று கல்பனா சாவ்லா விருதினை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதேபோல மேலும் பலருக்கும் முதல்வர் ஜெயலலிதா விருதுகளையும், பரிசுகளையும் வழங்கிக் கெளரவித்தார்.
No comments:
Post a Comment