மும்பை மலாத் பகுதியல் வசிப்பவர் ஜெயக்குமார் பெருமாள். ஆட்டோ டிரைவர். இவரது பூர்வீகம் விழுப்புரம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை வந்து செட்டிலாகி விட்டார். இவரது மனைவி லிங்கம். முன்பு வேலை பார்த்து வந்தார். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறார். இந்தத் தம்பதிகளுக்கு பிரேமா (24) என்ற மகளும் தன்ராஜ் (22) என்ற மகனும் உள்ளனர்.
20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் ஜெயக்குமார். அவர்கள் இருப்பது 300 சதுர அடி அளவிலான மிகச் சிறிய வீட்டில்தான். வீடு சிறிதாக இருந்தாலும் பிரேமாவும், தம்பி தன்ராஜும் படிப்பில் பெரியவர்களாக உள்ளனர்.
படிப்பில் படு சுட்டிகளான இருவரும் பெற்றோர் மனம் குளிரும் வகையில் ஒவ்வொரு படிப்பையும் சிறப்பாக முடித்து அசத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த சி.ஏ.(சார்டர்ட் அகௌண்டன்ட்ஸ்) தேர்வில் பிரேமாவும், தன்ராஜும் கலந்து கொண்டு எழுதினர். அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.
அதில் பிரேமா இந்தியாவிலேயே முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தன்ராஜும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து பிரேமா கூறுகையில்,
இது என்னுடைய வாழ்நாள் சாதனை. கடின உழைப்பால் தான் வெற்றி கிடைத்துள்ளது. என் பெற்றோர் எனக்கு ஊக்கமளித்து வந்தனர். அவர்களின் ஆதரவும், ஆசியும் இல்லை என்றால் என்னால் சாதித்திருக்க முடியாது.
நான் நன்றாகப் படிப்பேன். சிறப்பான இடத்தைப் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.ஆனால் முதலிடம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
என்னுடைய மற்றும் என் சகோதரருடைய படிப்புக்கு இடையே பணப் பிரச்சனை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் என் பெற்றோரை நினைத்து பெருமைப்படுகிறேன். இத்தனை நாட்களாக எங்களுக்காக கஷ்டப்பட்ட எங்கள் தந்தை இனியாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.
பிரேமா கிஷோர் சேத் அன்ட் கம்பெனியில் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேமா பள்ளியிலிருந்தே முதல் மாணவிதானாம். மலாத் பகுதியில் உள்ள நாகின்தாஸ் கந்த்வாலா கல்லூரியில் படிக்கையில் பி.காம். இறுதியாண்டில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்வானார். மேலும் சி.ஏ. படித்துக் கொண்டே அவர் எம்.காம். முடித்தார். அதில் அவர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வானாராம்.
தன்ராஜ் படிப்பு செலவுக்காக சிறிது காலம் கால் சென்டரில் வேலை செய்தார். என் அக்கா தான் என் ஹீரோ என்று தன்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பிரேமாவுக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அம்மாணவிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஜெயக்குமாரிடம் போனில் பேசிய வாசன் பிரேமாவை வாழ்த்தியுள்ளார்.
No comments:
Post a Comment