19 April 2012

பொறியியல் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு கட்டண சலுகை கிடைக்க வருமான வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு


சென்னை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற, வருமான உச்சவரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் பழனியப்பன் சட்டசபையில் இதைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

தமிழகத்தில் உயர்கல்வி சென்றடையாத பகுதிகளை அடையாளம் கண்டு, அப்பகுதிகளில் 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. போடிநாயக்கனூரில் 10.6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ரூ.93 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் மத்திய அரசு சார்பில் 50 சதவீதமும், மாநில அரசின் பங்காக 35 சதவீதமும், தொழில் நிறுவனங்களின் பங்காக 15 சதவீதமும் நிதி பெற்று ரூ. 129 கோடியில் பொறியில் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 56.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் 1,56,987 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ. 304.27 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ. 298.90 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த அளவில் கல்விக் கட்டணம் செலுத்தி பொறியியல் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு சுயநிதி சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத மாணவர் சேர்க்கை இடங்களும், சுயநிதி சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்சேர்க்கை இடங்களும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற, வருவாய் உச்சவரம்பு ரூ. 50 ஆயிரம் என்பது, ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளில் ரெகுலர் பாடப்பிரிவுகளில் குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் சுயநிதி பாடப்பிரிவுகள் என்ற பெயரால் வணிகம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு ரூ. 20,000, ரூ. 30,000 என அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசிடம் இருந்து மானியத்தையும் பெற்றுக் கொண்டு ஒரு பக்கம் சாதாரண கட்டணம், மறுபக்கம் சுயநிதி பாடப்பிரிவுகள் என அதிகக் கட்டணம் வசூலிப்பது சரியல்ல.

சுயநிதிக் கல்லூரிகள் இதைவிட மோசமாக உள்ளன. எனவே, பொறியியல் கல்லூரிகளைப் போன்று அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழுவை அரசு நியமிக்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

அமைச்சர் பழனியப்பன்: கட்டணக் கொள்ளை தமிழ்நாட்டில் இல்லை. புகார்களும் வரவில்லை. அப்படி புகார் வந்தால் அந்தக் கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இதுபோன்ற புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாலபாரதி: அரசு கல்லூரிகளிலும், அரசு மானியம் பெறக்கூடிய கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: கட்டண உயர்வைக் கண்காணிப்பதற்கு எப்படி ஒரு குழு உள்ளதோ, அதேபோல் அரசுக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அமலாவதையும், சிறுபான்மை கல்லூரிகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் ஹாதி தலைமையில் குழு ஒன்று செயல்படுகிறது. அந்தக் குழு இதுபோன்ற புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உயர் கல்வியில் 18 வயது முதல் 13 வயதுடையவர்கள் 18 சவீதம் பேர் பயின்று வருகின்றனர். வளர்ந்த நாடுகளில் 54 சதவீதம் பேர் பயில்கின்றனர். 18 சதவீதம் என்பதை தமிழகத்தில் 23 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அமைச்சர் பழனியப்பன்.

No comments: