புதுடில்லி: நாட்டில் உள்ள நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்கள் முறையாக ஏலம் விடப்படாததால் மத்திய அரசுக்கு ரூ. 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் இன்று பார்லி.,யில் எதிர்கட்சிகள் கிளப்பின. இதற்கு பதில் அளித்த மத்திய கனிமவளத்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில்; நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 ம் கட்ட அமைச்சரவையில்தான் பொறுப்பேற்றேன் என்றும், இது தொடர்பான அறிக்கை விவரம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. படித்து பார்த்த பிறகே உண்மை நிலையை என்னால் சொல்ல முடியும் என அவையில் தெரிவித்தார்.
இவரது பேச்சில் திருப்தி அடையாத எதிர்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும். இது தொடர்பான விவாதத்தை பார்லி.,யில் நடத்த வேண்டும் என்றும் குரல் எழுப்பின. இதனால் எழுந்தஅமளியை தொடர்ந்து பார்லி., இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
2004 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 150 கனிம- சுரங்க பிளாக்குகள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் முறையான ஏலம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு ரூ. 10 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக லீக்கான செய்தியில் கூறப்படுகிறது. இதில் பிரபல டாட்டா ஸ்டீல் லிமிடெட் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்துள்ளன.
இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷகீல்அகம்மது கூறுகையில்; இந்த விஷயத்தை நான் பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இது ஊழல் அல்ல இழப்பு என்றார். இது பழைய ரிப்போர்ட் என்று சில அமைச்சர்கள் சொல்லி சமாளிக்கின்றனர்.
இன்று வெளியாகியிருக்கும் இழப்பு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் ( 1லட்சத்து 76 ஆயிரம் கோடி ) மதிப்பை விட 6 மடங்குகள் அதிகம் ஆகும். பிரதமர் அலுவலகமும் இது குறித்து வாய்திறக்க மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment