02 February 2012

குழந்தைங்க கவனிக்கலையா? பெற்றோர்களே எச்சரிக்கை!


Asthma
குழந்தைங்க சரியாவே படிக்க மாட்டேங்கிறாங்க. எப்படி சொல்லிக் குடுத்தாலும் கவனிக்க மாட்டேங்கிறாங்க என்று புலம்பும் பெற்றோரா நீங்கள். கவலைப் படாதீர்கள். குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களை அதற்கான விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.

கவனிக்கும் திறன்

சமவயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும்போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், ரீசனிங் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளை லேனிங் டிஸபிலிட்டி சில்ட்ரன்ஸ் என கூறுகிறார்கள்.

இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்களைக் கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.

கற்றல் குறைபாடு பிரச்சினை தங்களின் குழந்தைகளுக்கு இருப்பதை பெற்றோர் உணரும்போது பிரச்சினையின் தன்மை, ஆழம் ஆகியவற்றை அறிவதுடன், இதில் நாம் எப்படி செயல்பட்டு குழந்தைக்கு உதவலாம் என்று யோசித்து செயல்பட வேண்டும் இதுபோன்ற குழந்தைகளிடம் பொறுமையாக இருப்பதன் மூலமாக மட்டும் இதை சரிசெய்ய முடியாது. குறைபாட்டின் முதல் கட்டத்திலேயே அதனை சரிசெய்யும் முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில் இதில் காட்டப்படும் லேசான அலட்சியம் கூட எதிர்காலத்தை பாதித்து விடும்.

சரியான கவனிப்பு

குழந்தைகளின் கவனிக்கும் தன்மையை அதிகரிக்க அதற்கான விளையாட்டுக்களின் ஈடுபடுத்தவேண்டும். எண் விளையாட்டுக்கள் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் கவனிக்கும் தன்மை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

5 முதல் 7 வயதுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துக்கள், எண்களை பிரித்து அறியும் திறன் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு தனித் தனியாக எண்களையும், எழுத்துக்களையும் அடையாளப்படுத்த வேண்டும். பொம்மைகளை வைத்தும் விளையாட்டு காட்டியும் கண்டுபிடிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.

புரிந்து கொள்ளும் திறன்

7 முதல் 9 வயதுடைய குழந்தைகள் பாடத்தை கேட்டு, புரிந்துகொள்ள தெரிந்திருக்கவேண்டும். இதில் குறைபாடு வரும் பட்சத்தில் அவர்களை ஒரு இடத்தில் அமரவைத்து பெற்றோர்கள் கூடவே அமர்ந்து வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கவேண்டும். இதனால் அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

9 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் கல்வி கற்கும் திறனுக்கேற்ப மூளையானது முழு வளர்ச்சியடைந்திருக்கும். அவர்களாகவே சுதந்திரமாக தங்களின் பணிகளை செய்யத் தொடங்கிவிடுவர். ஆனால் அதில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களின் இலக்கை அடையச் செய்யவேண்டும்.

குழந்தைகளுக்கு குறைபாடு உள்ளது உணரப்பட்டவுடன் பெற்றோர் சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. அதில் இந்த குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடிவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

No comments: