02 August 2013

அமெரிக்காவில் மேயர் தேர்தலில் போட்டியிடும் சென்னையில் பிறந்த இந்திய அமெரிக்கப் பெண்

லாஸ் ஏஞ்சல்ஸ்: சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்கரான சுஜா லோவென்தால் லாஸ் ஏஞ்சல்ஸின் 2வது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்கர் சுஜா லோவென்தால். அவர் யுசிஎல்ஏவில் பி.ஏ. பொருளாதாரம், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., யுஎஸ்சியில் கொள்கை, திட்டம் மற்றும் முன்னேற்றத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார்.

அவர் கடந்த 2001ம் ஆண்டு லாங் பீச் யூனிபைட் பள்ளி மாவட்டத்தின் கல்விக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைவராக இருந்த 2 ஆண்டுகளில் லாங் பீச் கல்வியில் சிறந்து விளங்கியது. இதையடுத்து அவர் சிட்டி கவுன்சிலில் பதவி வகித்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சிட்டி கவுன்சிலில் இருக்கும் சுஜா லாஸ் ஏஞ்சல்ஸின் 2வது பெரிய நகரமான லாங் பீச்சின் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்.

07 March 2013

நான் மரணிக்க விரும்பவில்லை... ஹியூகோ சாவேஸின் கடைசி தருணங்கள்



காரகாஸ்: "ஒருவரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம்... ஆனால் இறப்பு என்பது சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டும்". இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். புற்றுநோயோடு போராடிய ஹியூகோ சாவேஸ், செவ்வாய்கிழமை மரணமடைந்துவிட்டார். சாவேஸின் புகைப்படம் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் தங்களது தலைவன் இறந்து போனதைத் தாங்க முடியாமல் மக்கள் கதறியழுவதை தொலைக்காட்சி காமிராக்கள் காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

தலைநகரம் காரகாஸில் நாளை நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று வெனிசுலா எதிர்பார்க்கிறது.

புற்று நோயுடன் போராடினாலும் சாவேஸ் மாரடைப்பில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "நான் மரணிக்க விரும்பவில்லை" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகன், 44 வயதிலிருந்து மரணிக்கும் வரையிலும் மக்களின் நாயகனாக திகழ்ந்தவர். வெறும் வறட்டு வார்த்தைகளால் நிறைக்கவில்லை. தன்னுடைய செயலால் வெனிசுலா மக்களின் வாழ்க்கையை மீட்ட ரட்சகன் என்றே போற்றப்படுகிறார்.

அதிபர் பதவி ஏற்ற உடன் தன் வருமானத்தை முழுக்க நாட்டுக்கு கொடுத்தார்; ஆடம்பரங்களை நிறுத்தினார். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பிரித்துக் கொடுத்து அனைவரையும் முதலாளிகளாக மாற்றினார். நாட்டில் சோயாபீன்ஸ் உற்பத்தியை மூன்று மடங்கு பெருக்கி விவசாயத்தில் சாதித்தார்.

பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை முழுமூச்சாக எதிர்த்தார். பெட்ரோலிய விற்பனையை யூரோவில் செய்ய ஆரம்பித்தார். பெட்ரோலியம் தான் நாட்டின் உயிர்நாடி; அஞ்சாமல் அமெரிக்காவின் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோலிய வளத்தை மீட்டு தேசியமயமாக்கினார்.

அமெரிக்காவுக்கு அவர் எப்படி இருந்தார் என்பதை அவர் கண்டலீசா ரைசிடம் சொன்ன வரிகளே விளக்கும்.. "ஹே குட்டிப்பெண்ணே! சமவெளியில் முற்கள் நிறைந்த மலர் சொரியும் மரம் நான். என்னை கடந்து போகிறவர்கள் மீது நான் இதமான சுகந்தத்தை தெளிப்பேன். என்னை உலுக்கினால் முற்களால் தைத்து விடுவேன்" என்றார்.

சாவேஸின் அரசியல் ஆசானாக திகழ்ந்தவர் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. 2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில் 'ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.' என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்துள்ளனர்.


ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.

மக்களை வழிநடத்த இரவரும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றேதான். சீனாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைப் பொருத்திப் பார்த்த மாவோவைப் போல், ரஷ்யாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைத் தகவமைத்த லெனினைப் போல் லத்தீன் அமெரிக்காவுக்கான நடைமுறை சோஷலிசப் பாதையை வகுத்ததில் காஸ்ட்ரோவுக்கும் சாவேஸுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. காஸ்ட்ரோ தனது பலத்தை க்யூபாவின் தேசத் தந்தையான ஹொசே மார்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சாவேஸ் வெனிசூலாவின் போராளியான சிமோன் பொலிவாரைத் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார்.

இருவருக்குமே எதிரி ஒன்றுதான். நோக்கமும் ஒன்றே. தங்கள் எதிரியை இருவரும் அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் கையாண்டார்கள். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் சம்பாதித்துக்கொண்டனர்

காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் பெரும்பான்மை மக்களின் தலைவராகவும் தோழராகவும் திகழ்கிறார். அதனால்தான் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்தும் இந்த இருவருக்கும் பெரும் திரளான மக்கள் ஆதரவு திரண்டு நிற்கிறது.

86 வயதிலும் மரணம் பற்றிய வதந்திகளை இல்லாமல் செய்தவர் காஸ்ட்ரோ. அதேபோல் சாவேஸ் மரணம் பற்றி பலமுறை வதந்திகள் உலா உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டாலும் பலமுறை வதந்திகள் பரவியுள்ளது. புற்றுநோயுடன் போராடிய சாவேஸ் தன்னுடைய இறுதி நிமிடத்தில் கூட ‘நான் மரணிக்க விரும்பவில்லை' என்று கூறியதாக அவருடைய உதவியாளர் தெரிவித்துள்ளார். எனினும் கடைசியில் காலனின் ஆசை நிறைவேறிவிட்டது. சாவேஸ் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் வெனிசுலா நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை தலைநகர் கரகாஸில் திரண்டிருக்கும் மக்களை காணும் போது உணர முடிகிறது.

கற்பழிக்கப்பட்ட பெண் கோமாவுக்குப் போனால் குற்றவாளிக்கு மரண தண்டனை !!!


டெல்லி: பாலியல் வன்கொடுமை சட்டத் திருத்தம் தொடர்பாக பல்வேறு முக்கியப் பரிந்துரைகளை வர்மா குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இன்று மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து முடிவெடுக்கும் என்று தெரிவிக்பட்டிருந்தது. ஆனால் இன்று அமைச்சரவை கூடாது என்று தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.

 பாலியல் விவகாரங்களில் தற்போது 18ஆக உள்ள பெண்களின் வயது 16ஆக குறைக்கப்படுகிறது. பாலியல் குற்றங்கள் இனிமேல் கற்பழிப்பு என்றே அழைக்கப்படும் என்று வர்மா கமிஷன் கூறுகிறது. அதேசமயம், வர்மா கமிஷனின் சில பரி்ந்துரைகள அரசு ஏற்காது என்றும் கூறப்படுகிறது. மனைவி மீது கணவன் நடத்தும் கட்டாய பாலியல் உறவு பலாத்காரமாக கருதப்பட மாட்டாது.

கற்பழிப்புக்கு ஆளாவோர் கோமா நிலைக்கு சென்றுவிட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட இருக்கிறது. பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் பாலியல் குற்றங்களாக கருதப்படும். பாலியல் குற்றங்களை மறைக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அதே போல் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலங்கள் பெண் காவல் காவல் அதிகாரிகளால் மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்ற மாற்றமும் கொண்டு வரப்பட உள்ளது.

 மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துடன் சட்டத் திருத்தம் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த பரிந்துரைகள் குறித்து மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மனமொத்த செக்ஸில் ஈடுபடுவதற்கான வயது குறைப்பு குறித்து அமைச்சர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டிருப்பதால் அமைச்சரவை கூடுவதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

 தற்போது 18 வயதாக இருப்பதை 16 ஆக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை 16க்கும் குறைவாக குறைக்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் விரும்புகிறதாம். ஆனால் 18 வயதே இருக்க வேண்டும் என்று சில மூத்த அமைச்சர்கள் கருதுகிறார்களாம். 16 வயதாக அல்லது அதற்கும் கீழே குறைத்தால் டீன் ஏஜ் செக்ஸ் பிரச்சினை அதிகரித்து விடும். சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவும் அது வழி வகுக்கும் என்பது இந்த அமைச்சர்களின் கருத்தாகும்.

இதன் காரணமாக இன்றைக்குள் அமைச்சரவை கூடி விவாதித்து முடிவெடுக்கும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

பணியை செய்யாமல் இழுத்தடிக்கும் அரசு ஊழியர்களுக்கு ரூ.250-ரூ.50,000 அபராதம்


டெல்லி: பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை அளிக்க காலதாமதம் செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

 பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ், ஓய்வூதியம் உள்ளிட்ட சேவகைளில் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து அரசு அலுவலக ஊழியர்களுக்கும் இது பொருந்தும். பாஸ்போர்ட், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க காலதாமதம் செய்யும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டால் அரசு அலுவலக வேலைகள் தாமதமாவது வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

23 January 2013

சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த மும்பை ஆட்டோ ஓட்டுனர் மகள்..


மும்பை: மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள் பிரேமா ஜெயக்குமார் என்பவர் அகில இந்திய அளவிலான சி.ஏ. தேர்வில் முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார்.

மும்பை மலாத் பகுதியல் வசிப்பவர் ஜெயக்குமார் பெருமாள். ஆட்டோ டிரைவர். இவரது பூர்வீகம் விழுப்புரம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை வந்து செட்டிலாகி விட்டார். இவரது மனைவி லிங்கம். முன்பு வேலை பார்த்து வந்தார். இப்போது இல்லத்தரசியாக இருக்கிறார். இந்தத் தம்பதிகளுக்கு பிரேமா (24) என்ற மகளும் தன்ராஜ் (22) என்ற மகனும் உள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார் ஜெயக்குமார். அவர்கள் இருப்பது 300 சதுர அடி அளவிலான மிகச் சிறிய வீட்டில்தான். வீடு சிறிதாக இருந்தாலும் பிரேமாவும், தம்பி தன்ராஜும் படிப்பில் பெரியவர்களாக உள்ளனர்.

படிப்பில் படு சுட்டிகளான இருவரும் பெற்றோர் மனம் குளிரும் வகையில் ஒவ்வொரு படிப்பையும் சிறப்பாக முடித்து அசத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த சி.ஏ.(சார்டர்ட் அகௌண்டன்ட்ஸ்) தேர்வில் பிரேமாவும், தன்ராஜும் கலந்து கொண்டு எழுதினர். அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

அதில் பிரேமா இந்தியாவிலேயே முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளார். 800க்கு 607 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தன்ராஜும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து பிரேமா கூறுகையில்,


இது என்னுடைய வாழ்நாள் சாதனை. கடின உழைப்பால் தான் வெற்றி கிடைத்துள்ளது. என் பெற்றோர் எனக்கு ஊக்கமளித்து வந்தனர். அவர்களின் ஆதரவும், ஆசியும் இல்லை என்றால் என்னால் சாதித்திருக்க முடியாது.


நான் நன்றாகப் படிப்பேன். சிறப்பான இடத்தைப் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.ஆனால் முதலிடம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.


என்னுடைய மற்றும் என் சகோதரருடைய படிப்புக்கு இடையே பணப் பிரச்சனை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் என் பெற்றோரை நினைத்து பெருமைப்படுகிறேன். இத்தனை நாட்களாக எங்களுக்காக கஷ்டப்பட்ட எங்கள் தந்தை இனியாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்றார்.


பிரேமா கிஷோர் சேத் அன்ட் கம்பெனியில் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரேமா பள்ளியிலிருந்தே முதல் மாணவிதானாம். மலாத் பகுதியில் உள்ள நாகின்தாஸ் கந்த்வாலா கல்லூரியில் படிக்கையில் பி.காம். இறுதியாண்டில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்வானார். மேலும் சி.ஏ. படித்துக் கொண்டே அவர் எம்.காம். முடித்தார். அதில் அவர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வானாராம்.


தன்ராஜ் படிப்பு செலவுக்காக சிறிது காலம் கால் சென்டரில் வேலை செய்தார். என் அக்கா தான் என் ஹீரோ என்று தன்ராஜ் தெரிவித்தார்.


இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பிரேமாவுக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அம்மாணவிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


மேலும் ஜெயக்குமாரிடம் போனில் பேசிய வாசன் பிரேமாவை வாழ்த்தியுள்ளார்.