தலைநகரம் காரகாஸில் நாளை நடைபெறவிருக்கும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று வெனிசுலா எதிர்பார்க்கிறது.
புற்று நோயுடன் போராடினாலும் சாவேஸ் மாரடைப்பில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "நான் மரணிக்க விரும்பவில்லை" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தை என்று உயிர் பிரியும் தருணத்தில் அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். மரணத்தின் கடைசி தருணத்தில் அவர் பேசிய வார்த்தைகள் மக்கள் மீது கொண்ட பாசத்தையும், வெனிசுலா நாட்டின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகன், 44 வயதிலிருந்து மரணிக்கும் வரையிலும் மக்களின் நாயகனாக திகழ்ந்தவர். வெறும் வறட்டு வார்த்தைகளால் நிறைக்கவில்லை. தன்னுடைய செயலால் வெனிசுலா மக்களின் வாழ்க்கையை மீட்ட ரட்சகன் என்றே போற்றப்படுகிறார்.
அதிபர் பதவி ஏற்ற உடன் தன் வருமானத்தை முழுக்க நாட்டுக்கு கொடுத்தார்; ஆடம்பரங்களை நிறுத்தினார். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை பிரித்துக் கொடுத்து அனைவரையும் முதலாளிகளாக மாற்றினார். நாட்டில் சோயாபீன்ஸ் உற்பத்தியை மூன்று மடங்கு பெருக்கி விவசாயத்தில் சாதித்தார்.
பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகாரத்தை முழுமூச்சாக எதிர்த்தார். பெட்ரோலிய விற்பனையை யூரோவில் செய்ய ஆரம்பித்தார். பெட்ரோலியம் தான் நாட்டின் உயிர்நாடி; அஞ்சாமல் அமெரிக்காவின் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோலிய வளத்தை மீட்டு தேசியமயமாக்கினார்.
அமெரிக்காவுக்கு அவர் எப்படி இருந்தார் என்பதை அவர் கண்டலீசா ரைசிடம் சொன்ன வரிகளே விளக்கும்.. "ஹே குட்டிப்பெண்ணே! சமவெளியில் முற்கள் நிறைந்த மலர் சொரியும் மரம் நான். என்னை கடந்து போகிறவர்கள் மீது நான் இதமான சுகந்தத்தை தெளிப்பேன். என்னை உலுக்கினால் முற்களால் தைத்து விடுவேன்" என்றார்.
சாவேஸின் அரசியல் ஆசானாக திகழ்ந்தவர் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. 2005ல் கிரான்மாவுக்கு அளித்த பேட்டியொன்றில் 'ஃபிடல் எனக்குத் தந்தையும் தோழரும் ஆவார்.' என்று சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அரசியல் மேடையில் இரட்டையர்கள் போல் இருவரும் கம்பீரமாக வலம் வந்துள்ளனர்.
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் ஹியூகோ சாவேஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் ஆயுதப் பேராட்டத்தைக் கையில் எடுத்தார். இருவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிறகு இருவருமே தங்கள் தேசத்தின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டனர்.
மக்களை வழிநடத்த இரவரும் கையாண்ட சித்தாந்தமும் ஒன்றேதான். சீனாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைப் பொருத்திப் பார்த்த மாவோவைப் போல், ரஷ்யாவுக்கு ஏற்றபடி மார்க்சியத்தைத் தகவமைத்த லெனினைப் போல் லத்தீன் அமெரிக்காவுக்கான நடைமுறை சோஷலிசப் பாதையை வகுத்ததில் காஸ்ட்ரோவுக்கும் சாவேஸுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. காஸ்ட்ரோ தனது பலத்தை க்யூபாவின் தேசத் தந்தையான ஹொசே மார்த்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சாவேஸ் வெனிசூலாவின் போராளியான சிமோன் பொலிவாரைத் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார்.
இருவருக்குமே எதிரி ஒன்றுதான். நோக்கமும் ஒன்றே. தங்கள் எதிரியை இருவரும் அதிகபட்ச சீற்றத்துடனும் பலத்துடனும் கையாண்டார்கள். அதனாலேயே ஏராளமான எதிரிகளையும் எதிர்ப் பிரசாரங்களையும் சம்பாதித்துக்கொண்டனர்
காஸ்ட்ரோவைப் போலவே சாவேஸும் பெரும்பான்மை மக்களின் தலைவராகவும் தோழராகவும் திகழ்கிறார். அதனால்தான் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்தும் இந்த இருவருக்கும் பெரும் திரளான மக்கள் ஆதரவு திரண்டு நிற்கிறது.
86 வயதிலும் மரணம் பற்றிய வதந்திகளை இல்லாமல் செய்தவர் காஸ்ட்ரோ. அதேபோல் சாவேஸ் மரணம் பற்றி பலமுறை வதந்திகள் உலா உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டாலும் பலமுறை வதந்திகள் பரவியுள்ளது. புற்றுநோயுடன் போராடிய சாவேஸ் தன்னுடைய இறுதி நிமிடத்தில் கூட ‘நான் மரணிக்க விரும்பவில்லை' என்று கூறியதாக அவருடைய உதவியாளர் தெரிவித்துள்ளார். எனினும் கடைசியில் காலனின் ஆசை நிறைவேறிவிட்டது. சாவேஸ் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் வெனிசுலா நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதை தலைநகர் கரகாஸில் திரண்டிருக்கும் மக்களை காணும் போது உணர முடிகிறது.