28 June 2011

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு வட மாநிலங்களில் மதிப்பில்லாமல் போய் விட்டது- சாலமன் பாப்பையா

மதுரை: நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.

மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.

அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று வந்துள்ளனர். அவற்றையே, தமிழகத்தில் கிடைக்கும் அரிய சொத்தாகவும் அவர்கள் கருதி வந்தனர். ஆனால், தமிழகத்துக்கு வந்த வீரமாமுனிவர் மட்டுமே, திருக்குறளை லத்தீன் மொழிக்கு எடுத்துச் சென்றார்.

அதன்பிறகே, தமிழகத்தில் அரிய சொத்தாக திருக்குறள் போன்ற நூல்கள் இருப்பதை, வெளிநாட்டறிஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பிறகுதான், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 35-க்கும் மேற்பட்ட பதிப்புகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழை இந்தி அழித்துவிடும் என நடந்த பிரசாரத்தால், தமிழகத்தில் இந்தி கற்பது தடைபட்டது. இந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, இந்தி எதிர்ப்பு பிரசாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை அழித்து வருகிறது. இந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில் மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும். இந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.


தற்போது திருக்குறள் உரை நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி உரையைப் புகுத்தி இருப்பது சிறப்பாகும் என்றார் பாப்பையா.

27 June 2011

கச்சத் தீவு ... மூழ்காத உண்மைகள்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற இளைய தலைமுறையினரும் இனி வரப்போகின்ற தலைமுறைகளும் போற்றி பாராட்டும் வகையில், என்றும் நினைவு கூறும் விதமாக... முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க, வரலாற்றுத் தேவை மிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.


“கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்தியாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். கச்சத் தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், தமிழக வருவாய் துறையையும் செர்த்துக் கொள்ளவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.


தீவு என்றாலே நீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கும் நிலப்பகுதிதான். கச்சத் தீவு பற்றிய பல உண்மைகளையும் மூழ்கடித்து வந்தன. இந்நிலையில் கச்சத் தீவு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை அலசுவதற்கும் ஆராய்வதற்கும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானம் ஒரு வாசலாக இருக்கிறது.



கச்சத் தீவு பற்றி இந்தத் தலைமுறைக்கே தெரியாத உண்மைகள் இதோ...


தாரை ஒப்பந்தம்


28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. அந்த சமயத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு அமைந்திருந்தது.


இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.


ஆனால் கச்சத் தீவு எவ்வாறெல்லாம் இந்தியாவோடு இணைந்த பகுதி என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அவர் மறைத்துவிட்டார்.


கச்சத் தீவின் வரலாறு...


கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மன்னா; சேதுபதி அவா;களிடம் 1882-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி (THE EAST INDIA COMPANY) லீஸ் ஒப்பந்தத்தில் கச்சத் தீவை எடுத்துள்ளது. அதன் பின்னர் கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு மூன்றினையும் அப்போதைய, மெட்ராஸ் பிரசிடென்ஸி (MADRAS PRESIDENCY OF INDIA) யின் ராமநாதபுரம் கலக்டரிடம் லீஸ் ஒப்பந்தம் மூலம் பெற்றுள்ளா.


1913-ல், மீண்டும் ஒரு லீஸ் ஒப்பந்தத்தை மெட்ராஸ் பிரசிடென்ஸி ஏற்படுத்தியது. அதன்படி, மெட்ராஸ் பிரசிடென்ஸியின் மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கச்சத் தீவின் மீது கொடுக்கப்பட்டுள்ளது. 1939-ல்; புனித அந்தோணியாh; ஆலயம் கச்சத் தீவில் கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முகம்மது என்பவர் 1947-ல் கச்சத் தீவை ஒரு லீஸ் ஒப்பந்தம் மூலம் எடுத்துள்ளார். அந்த ஆவணம் எண் 278/1948 ஆக இராமேஸ்வரம் பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில்... ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, “கச்சத்தீவு இராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம், கச்சத்தீவின் சர்வே எண் 1250” என ஒரு அரசாணை G.O. No. 2009: 11.08.1949-ல் வெளியிடப்பட்டுள்ளது.


இது எல்லாவற்றிற்கும் மேலாக 1531-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு செப்பு பட்டயத்தில், ‘கச்சத் தீவு சேதுபதி மன்னர்களின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தொல்பொருள் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சேதுபதி மன்னர் நினைவாகத்தான், பல நூறு ஆண்டுகளாக இன்று வரை அந்தக் கடல் பகுதியை அனைவரும் ‘சேது சமுத்திரம்’ என்று உலகளவில் அழைக்கின்றனா;. அதனால்தான் இந்திய அரசே ‘சேது சமுத்திர திட்டம்’ என பெயரிடப்பட்டு ஒரு திட்டத்தை தொடங்கியது.


காரணங்கள்...


இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை மறைத்தும் மறுத்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.

இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.



கருணாநிதி செய்தது என்ன?


அப்போது தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி அமலாக்கப்பட்டிருந்ததால், எங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கவில்லை. கச்சத் தீவு மீட்கப் பட வேண்டும்’ என இன்று கூறுகிறாh; கருணாநிதி. ‘பல முறை சொன்னால் பொய்யும் உண்மையாகும்’ என்பதை மனதில் கொண்டுதான் அவா; இதை தொடர்ந்து சொல்கிறார். 1969 - லிருந்து 1971 வரை என்ற முதல் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து... 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாவது ஆட்சிக் காலம் வரை மேற்படி காலகட்டத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் உருப்படியாக ஒன்றுமே அவா; செய்யவில்லை.


‘தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன். என் மீது ஏறி பயணம் செய்யலாம்’ என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டுவதில் வல்லவர் கருணாநிதி. அதற்கு ஒரு உதாரணம் 09.12.2009 அன்று ‘கச்சத் தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார்’ என அறிவித்தார் கருணாநிதி. அதன் பிறகு, 09.12.2009 முதல் 28.02.2011 வரை கச்சத் தீவு பற்றி மூச்சு கூட விடவில்லை அவர். ஆனால், ‘கச்சத் தீவை மீட்போம்’ என 2011 தேர்தலிலும் வாக்குறுதி அளித்தார். இதுவும் வெறும் காகிதம் தான் என்று மக்கள் புரிந்துவைத்திருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.


ஜெயலலிதா செய்தது என்ன?


நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் மட்டுமல்ல... 1991-ல் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்று ஆட்சி செய்தபோது, 1994-ல் கச்சத் தீவை நீண்ட கால லீஸ் மூலம் திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்தார். பிறகு 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு தொடர்பாக உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று 2004-ல் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.


பிறகு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட, ஆகஸ்ட் 2008-ல் இந்திய உச்ச நீதீமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘கச்சத் தீவு தொடா;பாக 1974 மற்றும் 1976-ல் ஏற்படுத்தப்பட்ட இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும். கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும். ஏனெனில், மேற்படி கச்சத் தீவு தாரை வார்ப்புக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளைக் கூட்டி ஒப்புதல் பெறப்படவில்லை’ என்று வழக்கு தொடுத்தார். இதில் 1960-ல் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கொடுக்க முயன்றபோது அதைத் தடுத்து உத்தரவிட்ட உச்ச நீதீமன்றத் தீர்ப்பை மேற்கோளும் காட்டியுள்ளார் ஜெயலலிதா. மேலும் CONVENTION OF LAW OF THE SEA ன் படி ஐ.நா. சபையின் முடிவுகளை தனது வழக்கில் சாதகமாக எடுத்து வைத்துள்ளாh;.

ஏன் மீட்கவேண்டும் கச்சத் தீவை?


13.08.1983-ல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் முதல் தாக்குதல் நடைபெற்றது. 10.12.1984-ல் ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி எனும் அப்பாவி, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து, முதல் கணக்கை ஆரம்பித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 3000-த்திற்கும் மேலான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளனர். தமிழக அரசின் அறிக்கைப்படி சுமார் 400 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கணக்கு கூடுதலாகத்தான் இருக்க முடியும். மூவாயிரத்துக்கும் மேலான தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவை இந்திய அரசு திரும்பப் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்

போருக்கு வித்திடும் கச்சத் தீவு

கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யும் பட்சத்தில், ஜக்கிய நாடுகளின் சபையில் இந்தியா சரியாக முயற்சிக்கும் சூழலில், கச்சத் தீவு எப்போதும் இந்தியாவின் அங்கம் எனும் பொதுமக்களின் கனவு நனவாகும். இல்லையென்றால், 1974-ல் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த P.K.M. தேவர் நாடாளுமன்றத்தில் பேசியது நடந்து விடும்.

“இலங்கை தனது ராணுவத்தை கச்சத் தீவிற்கு திருப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான இந்திய மீனவா;களின் மோட்டார் படகுகள் கச்சத் தீவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழக மீனவர்களின் உயிருக்கு ஆபத்து. தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்பட ஆளிள்லை. கச்சத் தீவு விவகாரம் எதிர்காலப் போருக்கு அடித்தளமாக இருக்கப் போகிறது. நமது நாட்டின் உயிர் பிரச்சினைக்குச் சவாலாக இருக்க போகும் ஒரு விஷயத்திற்கு இது அடித்தளமாக இருக்கப் போகிறது. இந்தியாவின் பிரிவினைக்கு மகாத்மா காந்தியை பலி கொடுத்துள்ளோம். கச்சத்தீவை தமிழகத்தின் அங்கமாக பார்க்காதீர்கள். புனித இந்தியாவின் அங்கமாக கருதுங்கள். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுங்கள்” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசினார் தேவர்.


இன்றும் அந்த நிலைமை தமிழனுக்கு நீடிக்கிறது. சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு - குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது!

18 June 2011

சாய்பாபா ரகசிய அறையில் குவியல் குவியலாக சிக்கிய பணம், நகை!


Sai Babaஅனந்தபூர்: புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது. அங்கு கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.

தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பகவான் சத்யசாய்பாபா வசித்து வந்த அறை திறக்கப்பட்டது. முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட் உறுப்பினருமான பி.என். பகவதி, செயலாளர் சக்ரவர்த்தி, சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் யஜூர்வேத மந்திரினுள் சென்றனர்.

அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக இருந்ததாம். வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது.



சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, "எல்காட்' நிறுவனத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் மாணவர்கள் உள்ள விவரத்தை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசிடம் சமர்ப்பித்தனர். அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் "எல்காட்' அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே கவர்னர் உரையில், இலவச லேப்-டாப் வழங்குவதை அரசு உறுதி செய்தது. இலவச லேப்-டாப் தயாரிப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அறிவிப்பை எல்காட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: முதல் கட்டமாக, 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் கொள்முதல் செய்ய, சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம். கடைசி தேதியன்று மாலை, டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு, லேப்-டாப் கொள்முதல் செய்வதற்கான அனுமதி உடனே வழங்கப்பட மாட்டாது. முதலில், தொழில்நுட்ப ரீதியாக டெண்டர் பரிசீலிக்கப்படும். இதில், அந்நிறுவனங்கள், அரசு விதித்துள்ள தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், அடுத்த கட்ட டெண்டருக்கு தேர்வு செய்யப்படும். முதல் டெண்டரில் தகுதிபெற்ற நிறுவனங்களுடன், அடுத்த கட்டமாக, விலை நிர்ணயம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஒத்துவரும் நிறுவனங்களுக்கு, லேப் -டாப் கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் வழங்கப்படும். லேப்-டாப்பில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய, தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் முடியும் வரை இலவச சர்வீஸ் செய்து தர வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், மாதிரி லேப்-டாப்களை, "எல்காட்' நிறுவனத்திடம் இந்த மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எடை 2 கிலோ 700 கிராமுக்குள் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில மொழி விவரங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி, சென்னை அண்ணாசாலையில் உள்ள "எல்காட்' நிறுவனத்தில், லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில், லேப்-டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை, எல்காட் அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

வசதிகள் அதிகம்: விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் லேப்-டாப்பை இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், "டிவிடி' ரைட்டர், வேர்டு, எக்சல் மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம்கள் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி., ரேம், 320 ஜி.பி., ஹார்டுடிஸ்க் இருக்கும்.



15 June 2011

இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம் பேச்சு


சென்னை: ''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர், ஊழலுக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான், இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சி.பி.எஸ்.சி. மற்றும் வேதபாடச்சாலையுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்தீர் பள்ளி திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பள்ளியை திறந்துவைத்து பேசியதாவது:

நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும். பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியோரால் நல்லொழுக்கத்தை கொடுக்க முடியும். தற்போது, ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக இருக்கிறது. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என நான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். இ-மெயில்களும் வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் தான் லஞ்சத்தை தங்கள் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். "ஊழல் என்பது எனக்கு இழுக்கு' என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றன சூழல் வரவேண்டும். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபடுகிறது என வைத்துக்கொண்டால் கூட அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது. ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஊழலால் வந்த பணத்தால் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் பெற்றோர்களை ஊழலில் இருந்து மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதம் இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் பெற்றோர்கள் மீது செலுத்தினால் லஞ்சத்தை விட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால் தான் பெற்ற பிள்ளையே அவமானமாக நினைப்பதை, ஒரு இழிவான செயலான ஊழலை செய்ய எந்த ஒரு பெற்றோருக்கும் மனது வராது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர் லஞ்சத்திற்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு ஊழலில் இருந்து விடுபடும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதற்காக இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த இயக்கத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராகலாம். தலைவர் என்று யாரும் இல்லை. "என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையாக மாற்றுவேயானால் நாடு மாறும். எல்லோரும் இதில் ஈடுபட்டு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

03 June 2011

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.
சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று.

அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன்.

பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது.

 தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும்.

அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

அ.ப.இராசா

 

தமிழக சட்டசபை கவர்னர் உரை விவரம்.

சென்னை: தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும் , தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள் இருந்தன.
கூட்டம் துவங்கியதும் புதிய எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ஜெ., தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை துவக்கினார்.


இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து , மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வரும் செப் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும், சூரியஒளி மூலம் மின்சாரத்திற்கு முக்கியத்துவம், மேலவை ‌கொண்டுவரப்படாது, ஓமந்தூரார் தோட்டத்தில் தி.மு.க., அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது, இது தொடர்பான கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி உள்ளிட்டவை கவர்னர் உரையில் முக்கியஅம்சங்கள் ஆகும்.


* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும்.


* ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.


* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்


* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.


* பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை


*ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்


*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்


* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.


* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்


*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்

*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்


*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியாக முழுமையாக இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும்.


*சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை. ஆய்வு நடத்திட நிபுணர்குழு அமைக்கப்படும்.


*விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்


*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்


* வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.


* மேட்டூரில் முன்கூட்டியே (ஜூன் 6ம் தேதி ) தண்ணீர் திறக்க உத்தரவு


* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்


*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது


*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

* நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்


*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்


*மின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்


* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு இல்லாத உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.

* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி.


*சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும்.


*சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.


* கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்


*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்


* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும்


* சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.


*சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்

*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை


*தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.

*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.

* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.

அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.

*சிறிய கிரமாங்களுக்கும் தார்ச்சாலைகள் அமைத்தல்.

*பொதுமக்களி்ன் நலனை கருத்தில் கொண்டு கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும்.

* இலங்கை அகதிகள் முகாம் மேம்படுத்துதல், அவர்களது குழந்தைகள் கல்வியில் அக்கறை செலுத்துதல், இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் மறுவாழ்வு பணிகள் நடப்பது தொடர்பான விஷயத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

*கலைஞர் வீட்டு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

* சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும் .

* பார்லிமென்ட்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வரைவு திட்டம் அமல் படுத்த அரசு வலியுறுத்தும்.

* முறைகேடாக சேர்‌த்த சொத்துக்கள் பறிக்க புதிய சட்டம்

முறையில்லா விருந்தாக இருக்கிறது; கவர்னர் உரை குறித்து ஸ்டாலின் விமர்சனம்: இன்றைய கவர்னர் தாக்கல் செய்த உரை காய்கறி மட்டும் உள்ளதாகவும், முழு விருந்தாக இல்லை என்றும் விமர்சித்தார். தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் மு.க., ஸ்டாலின் சபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசுகையில்; ஒரு விருந்து என்றால் சாதம் முதல் காய்கறிவகைகள் என இருக்கும். ஆனால் கவர்னர் உரையில் சாம்பார், ரசம் இல்லை, வெறும் காய்கறிவகைகள் மட்டும் உள்ளது. தி.மு.க., கொண்டு வந்த திட்டங்கள் ரத்து செய்ப்பட்டுள்ளது குறித்து கேட்கையில் , அதே திட்டத்தை பெயரை மாற்றி செயல்படுத்துகின்றனர். ரத்து செய்யப்படுவது வளர்ச்சிப்பாதையில் நேர்கோட்டில் செல்வதற்கு எதிராக உள்ளது என்றார்.

 புதிய சட்டசபை வளாக பணிகள் குறித்து ஆராய நீதிபதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு இது போன்று எத்தனையோ கமிட்டிகளை பார்த்திருக்கிறோம் எதையும் சந்திப்போம் என்றார்.

மீண்டும் சட்டசபை 6ம் தேதி கூடுகிறது: கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தலைமையில் கூடி சட்டசபை அலுவல் குழு ஆய்வ செய்தது. பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த சபாநாயகர் வரும் 6ம் தேதி சட்டசபை கூடுகிறது. அந்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒத்தி வைக்கப்படும், 7, 8, 9 தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் விவாதம் நடக்கும், 10 ம் தேதி பதிலுரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.


அ.தி.மு.க., அரசு நேர்கோட்டில் செல்கிறது விஜயகாந்த் : எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் கவர்னர் உரை குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த் : கவர்னர் உரையில் இடம்பெற்றுள்‌ள நல்ல அறிவிப்புகளை தே.மு.தி.க., வரவேற்கிறது. கேபிள் டி.வி., அரசுடைமையாக்குதல், வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்பு ஆகிய நல்ல திட்டங்கள் கவர்ன‌ர் உரையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

108 இலவச ஆம்புலன்சில் பணியாற்ற விருப்பமா?


தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர், டிரைவர்கள் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் ஜூன் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயலாற்றுகிறது.


தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 426 ஆம்புலன்சுகளுடன் ‘108’ சேவை மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது. ஜிவிகே, இஎம்ஆர்ஐ நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கிறது. அதன்படி, ஓட்டுனர் பணியில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் 38வயதுக்கு மிகாமல், 162.5 செ.மீ. உயரம் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.6,489வழங்கப்படும்.


மருத்துவ உதவியாளர் பணியில் சேர விரும்புபவர்கள் பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் (12ம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள்) படித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதுள்ள ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். மாத சம்பளம் ரூ.7,500 கிடைக்கும்.


ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு, வரும் 9ம் தேதி, சென்னை திருவல்லிக்கேணி, 15 பெல்ஸ் சாலை, கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 அவசரகால சேவை மைய தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும். பணி நேரம் 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் இரவு மற்றும் பகல் என மாறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அதேநாளில் வழங்கப்படும்.


வெளியூர்களில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரம் அறிய 044&2888 8060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.