29 February 2012

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?


தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel :  04362   231336
Mobile :             9445000286      
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373  235049
Mobile :              9445000293      

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
-சேக்கனா M.நிஜாம்

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!!

கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?

நன்றி - தட்ஸ்தமிழ் 

26 February 2012

உலகிலேயே பணக்கார நாடு கத்தார்: போர்ப்ஸ்


நியூயார்க்: உலகிலேயே பணக்கார நாடாக கத்தாரை புகழ்பெற்ற போர்பஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 15 பணக்கார நாடுகளின் பெயரை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட கத்தார் நாடு செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கு காரணம் அந்நாட்டின் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும்தான் காரணம்.

கத்தார் நாடுதான் 2022-ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியையும் 2020 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் வரிசையில், லக்சம்பர்க்குக்கு 2-வது இடமும் சிங்கப்பூருக்கு 3-வது இடமும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்ஹாங், சுவிஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடம் பணக்கார 15 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சர்வதேச நிதியம் வெளியிடும் ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு மதிப்பின் அடிப்படையில் பணக்கார நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன.

பணக்காரர் என்று இருந்தால் ஏழையும் இருந்தாக வேண்டும். உலகின் மிகப் பெரிய ஏழை நாடுகளின் பட்டியலையும் போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடுகள் பட்டியலில் புருண்டி, லைபீரியா, காங்கோ ஆகியவை முன்னணியில் உள்ளன.

'Higgs Boson' - 3

கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.

அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

-ஏ.கே.கான்

'Higgs Boson' - 2

ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் நேற்று மிக முக்கியமான நாள்.

ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் 'அதிவேக அடிதடி' ஆரம்பமாகியுள்ளது.

பல டிரில்லியன் புரோட்டான்களை 7 TeV (7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்) வேகத்தில் மோதவிட்டால் என்ன நடக்கும் என்பதை சோதிக்கவே இந்த மையம் அமைக்கப்பட்டது.

அதாவது 27 கி.மீ. தூர வட்டப் பாதையில், (உள்ளே எந்த வாயுக்களும் இல்லாத ஒரு வெற்றுப் பாதை இது. உள்ளே உள்ள அழுத்தம் நிலவில் உள்ள அழுத்தத்தில் 10ல் 1 பங்கு தான்), இரு புரோட்டான் கதிர்களை எதிரெதிர் திசையில் வினாடிக்கு 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் வேகத்தில் மோதவிட்டுள்ளனர்.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இந்த 27 கி.மீ. பாதையை புரோட்டான் கதிர்கள் வினாடிக்கு 11,245 முறை சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதன்மூலம் இந்தக் கதிர்களில் உள்ள புரோட்டான்கள் வினாடிக்கு 600 மில்லியன் முறை மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி மோதி சிதற ஆரம்பித்துள்ளன.

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டு வந்த இந்த Large Hadron Collider பல்வேறு தடைகள், கோளாறுகளை எல்லாம் தாண்டி நேற்றுத்தான் தனது முழு வேகமான 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸை எட்டியுள்ளது.

இந்த 27 கி.மீ LHCயை உலகின் மிகப் பெரிய பிரிட்ஜ் என்றும் சொல்லலாம். காரணம், அதன் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

எதற்கு இவ்வளவு குளி்ர்ச்சி என்கிறீர்களா?.. புரோட்டான்கள் மோதும்போது உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை.

புரோட்டான் கதிர்களை இந்த வேகத்தில் ஓட வைக்க 9300 மின் காந்தங்களைத் தான் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் பாய்வதால் காந்தங்கள் சூடு பிடித்துவிடாமல் இருக்க அவை குளிரூட்டப்பட்டே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காந்தங்களின் வெப்ப நிலை -193.2°C.

இந்த சோதனையையே ஏன் இந்த வெட்டி வேலை என்று சிலர் கேட்கலாம்.

காரணம் இருக்கிறது.. இந்த பிரபஞ்சம், அண்ட சராசரங்கள் உருவானது என்பதை கண்டறியும் முயற்சி தான் இந்த சோதனை.

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது.

இதைத் தவிர Higgs Boson என்றொரு துகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று புரோட்டான்கள் சிதறும். அப்படியே Higgs Boson துகளும் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டுவிடும் என்று நம்பித்தான் இந்த சோதனையை நடத்துகிறார்கள்.

இந்த Higgs Boson இதுவரை எந்த அறிவியல் சோதனைகளிலும் சிக்காத ஒன்று. இதனால் இதை 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள்.

வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.

அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.

இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள்.


நன்றி 
-ஏ.கே.கான்