22 January 2012

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்...


                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!   


                              வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
                                         
                                     வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

                                        கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.  


15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.





                                                     
                                         இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
                                                 
                                            உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின்  தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 
                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional). 
                                         

               CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து  THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

                  
           உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும். 

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.
      2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
இன்று (05.01.2012)குற்றாலத்தில் விடிவெள்ளி விசாலினிக்கு நடைபெற்ற பாராட்டு  விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:












நன்றி:
தகவல் பகிர்வு:
திருமதி.சேதுராகமாலிகா 
மற்றும் 

தோஹாவில் நடந்த ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்.


தோஹா: தோஹாவில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், 25 மீ ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் விஜய்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் 12வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கின்றது. இதில் நேற்று நடந்த ஸ்டாண்டர்டு பிஸ்டல் என்ற ஆண்களுக்கான தனிநபர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின், விஜய்குமார், சீனாவின் ஜின் யோங்டே, ஜப்பானின் டோமோஹிரோ கிடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 572 புள்ளிகள் பெற்ற விஜய் குமார் தங்கப் பதக்கம் வென்றார். தசமக் கணக்கில் ஜின் யோங்டே 2வது இடத்தையும், ஜப்பானின் டோமோஹிரோ கிடா(568) 3வது இடத்தையும் பெற்றனர். விஜய்குமாரை தவிர இப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்களான சமரேஷ் ஜங் 16வது இடத்தையும், மகாவீர் சிங் 24வது இடத்தையும் பிடித்தனர்.

ஆண்களுக்கான 25 மீ ஸ்டாண்டர்டு பிஸ்டல் அணிகளின் மொத்த புள்ளிகளில், சீனா 1695 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும், தாய்லாந்து 1683 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், ஜப்பான் 1680 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றது. இந்தியா 1666 புள்ளி பெற்று 5வது இடம் பிடித்தது.

பிஞ்சுகள் மனதில் பணத்தாசை விதைப்பு:அடுத்த தலைமுறைக்கு தலைவலி!!!




மதுரை:பிஞ்சுகள் மனதில் பணத்தாசையை பதிக்கும் விளையாட்டுகளுக்கு, பெற்றோர் ஆதரவளிப்பதால், அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.

"பணம் பத்தும் செய்யும்' என்பது, "பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்,' என, மாறியது. நாளடைவில் அதுவே, "பணத்திற்காக எதையும் செய்யலாம்,' என்ற நிலைக்கு மாறிவிட்டது. சமூகத்திற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையும், பணத்தை சார்ந்தே உள்ளது. அடுத்த தலைமுறையாவது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்பதே, பலரின் எதிர்பார்ப்பு. அதற்கும் வேட்டு வைக்க களமிறங்கிவிட்டன "ரூபாய் நோட்டு விளையாட்டு'. முன்பெல்லாம் காகிதத்தால் ஆன "டம்மி ரூபாய் நோட்டுகள்' குழந்தைகளுக்காக விற்பனைக்கு வரும். அவை சிறிதாக இருக்கும் என்பதால், "டம்மி' என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். தற்போது விற்பனைக்கு வருபவை, பளபளக்கும் தாளில், அச்சு அசல் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல உள்ளன. மூன்று நோட்டுகளின் விலை ஒரு ரூபாய். இதை வைத்து, சிறுவர்கள் பலரும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சில குழந்தைகள் சேமிப்பு குறித்து விளையாடுவது ஆரோக்கியம் தான்.

அதே நேரத்தில், ஆள் கடத்துதல், கொலை, கொள்ளையடிப்பது போன்ற விளையாட்டுகள் தான், இதை வைத்து பிரதானமாக நடக்கிறது. தன் குழந்தைகளை குதூகலப்படுத்துவதாக நினைத்து, டம்மி ரூபாய் நோட்டுகளை பெற்றோர் வாங்கித்தருகின்றனர். பின்னணியில் நடக்கும் விபரீத விளையாட்டுகளை அவர்கள் அறிவதில்லை. சினிமாவும், "டிவி'யும் தன் பங்கிற்கு சமூக சீரழிவை ஊக்குவித்து வரும் நிலையில், இது போன்ற விளையாட்டுகள் அடுத்த தலைமுறைக்கு சவாலாக அமையலாம்.

மனநல டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது: ரூபாய் நோட்டுகளை வைத்து விளையாடுவது, கத்தியின் இருபுறத்தையும் பயன்படுத்துவதை போன்றது. பணத்தின் மதிப்பு, முக்கியத்துவம், சேமிக்கும் முறைகளை கற்றுக்கொடுத்தால் அதனால் பயன் கிடைக்கும். அதேநேரத்தில், தீய வழிகளில் விளையாடினால், அதன் வெளிப்பாடு வேறு விதமாக அமையலாம். பெற்றோர் கவனமாக கையாள வேண்டிய பிரச்னை இது, என்றார்.

19 January 2012

குழந்தை வளர்ப்பு குறித்து.........


Baby Care
குழந்தைகளின் மொழியை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அழுகையும், சிரிப்புமே அதன் பரிபாஷைகள். அதனை உணர்ந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது தனிக்கலை. குழந்தைகளின் செயல்படுகள் புரியாமல் சில நேரங்களில் தாய்மார்கள் எரிச்சல் அடைவதும் உண்டு. குழந்தைவளர்ப்பு குறித்து குழந்தை நல நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

செல்லக் கொஞ்சல்

குழந்தைகள் முதலில் விரும்புவது தாயின் அரவணைப்பைதான். அந்த கதகதப்பு கிடைக்காத பட்சத்தில் அதற்காகவே அழுகையை தொடங்குகிறதாம். எனவே குழந்தை அழும் போது அதனை தூக்கி கொஞ்சினால் குழந்தையானது உடனே அழுகையை நிறுத்திவிடுமாம். அந்த நேரத்தில் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.

தசைகளை வலுப்படுத்தும்

குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் `அறிவுரை’ சொல்வார்கள். ஆனால் உண்மையில்லை. பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் `ரிப்ளெக்ஸ்’ திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது

இயல்பாய் பாலூட்டுங்கள்

குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அஅப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.. எனவே கைகளில் லேசாக ஏந்தி அதற்கு ஏற்ற வகையில் பாலூட்டுவதே சிறப்பானது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதையும் தடுக்கும். ஒரு சிலர் படுத்துக்கொண்டே பாலூட்டுவார்கள். இது சில சமயங்களில் ஆபாத்தாக முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான நீர்

இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். பெரியவர்கள் அல்லது கணவரின் துணையோடு குழந்தையை குளிப்பாட்டலாம். எப்பொழுதுமே வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்ட வேண்டும். குளித்த பின் மெல்லிய உலர்ந்த துணியை பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுப்பது நல்லது.

மெல்லிய ஆடைகள்

குழந்தைகளுக்கு காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும்

குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன `டயாப்பர்கள்’ வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம். அது நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

குழந்தையை தூங்கவைக்க ஒரு சிலர் பகீரத பிரயத்தனம் செய்வர். வெளியே வேடிக்கை காட்டுவது, காரில் அழைத்துச் செல்வது என பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். அது தேவையற்றது என்கின்றனர் நிபுணர்கள். குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.

குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் `பாசிட்டிவ்’வான பலனைத் தருகிறதாம்.

முத்தமிடுங்கள்

குழந்தைக்கு காய்ச்சல் அடிப்பதை உணர தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். உடல் சூடாக இருந்தால் நனைத்துப் பிழிந்த துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். பின்னர் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.

18 January 2012

மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பேக், கலர் பென்சில், ஜாமெட்ரி பாக்ஸ்: ஜெயலலிதா உத்தரவு


சென்னை:  மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்டவற்றை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப கல்வியே மிகச் சிறந்த செல்வம் என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வியானது நற்பண்புகளையும், நல்ல குறிக்கோள்களையும் குழந்தைகளிடையே விதைத்து அவர்களை சமுதாய உணர்வு உள்ள நல்ல குடிமக்களாக உருமாற வழிவகை செய்கிறது.

இதனை நன்கு உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இன்பமான சூழ்நிலையில் பெறுவதற்கான பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1வது வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் இரண்டு இணை சீருடையுடன் கூடுதலாக இரண்டு இணை சீருடை அதாவது மொத்தம் நான்கு இணை சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு அரைகால் சட்டைக்கு பதிலாக முழுக்கால்சட்டையும், மாணவியர்களுக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்-கமீசும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகளும் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 78 பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1வது வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு விலையில்லா ஒரு இணை காலணி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சத்து 556 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் 1 இணை காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 27 லட்சத்து 95ஆயிரத்து 639 மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் 1 இணை காலணியும், 9 மற்றும் 10 ம் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியர் ஒவ்வொருவருக்கும் 142 ரூபாய் மதிப்பில் ஒரு இணை காலணியும், இந்த ஆண்டே வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த விலையில்லா காலணி வழங்கும் திட்டத்திற்காக அரசுக்கு 94 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

இவையன்றி மாணவ, மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி அதாவது ஜாமெட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் ஆகியவற்றை வரும் கல்வியாண்டு முதல், அதாவது 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும், 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தக பைகளும் வழங்கப்படும். இத்திட்டத்தினால் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

இதே போன்று 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 35 ரூபாய் மதிப்பில் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும். இதனை மாணவ, மாணவியர் இரண்டு கல்வியாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து ஒவ்வொரு கல்வியாண்டிலும் 6,8,10 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து 1 ஆயிரத்து 572 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 20 ரூபாய் மதிப்பிலான வண்ணப் பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 50 ரூபாய் மதிப்பிலான புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். முதல் ஆண்டில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும், இரண்டாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மட்டும் புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஒர் ஆயிரத்து 572 மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் இந்த திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர் பயன் பெறுவர். இத் திட்டத்திற்காக அரசுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவியர் பொதுத் தேர்வுகளில் அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதல் பரிசான 1,500 ரூபாயை 3,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாயை 1,000 ரூபாயாகவும்,

12ம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டு வரும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாகவும், இரண்டாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 2,000 ரூபாயை 4,000 ரூபாயாகவும், மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாயை 2,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

மாணவ, மாணவியர் நலன்களுக்காக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் மூலம் பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்படவும் வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.